கரூர் மாவட்டத்தில் நாம் கட்டாயம் தரிசிக்க வேண்டிய முக்கியமான கோயில்கள்
1.அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் - குளித்தலை
குளித்தலையில் மிகவும் பிரசித்தி பெற்றது அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்.இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் இக்கோயிலுக்கு காலை நேரத்தில் சென்று வழிபட்டால் காசிக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான். இந்தக் கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதால், காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது.இக்கோயிலில் வடக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், கோபுரத்திற்கு வெளியே 16 கால் மண்டபமும் இருக்கிறது.
உள் பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நலக்கிரகங்கள், ஜேஷ்டாதேவி, நால்வர், 63 நாயன்மார்கள், விஸ்வநாதர், கஜலட்சுமி ஆகிய சந்நிதிகள் உள்ளன. இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன.
ஒரு நடராஜ மூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை.இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர்.பிரகாரத்தில் உள்ள நவக்கிரக சன்னதியின் மேலே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கு அதிபதியான முருகனையும், நவக்கிரகத்தில் செவ்வாயையும் வழிபடுகின்றனர்.
பெண்கள் இங்கு வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு சிவன் துணையாக இருந்து காப்பார் என்பது நம்பிக்கை. பொதுவாக பெண்கள் தங்களது அனைத்துக் குறைகளும் தீர இங்கு வேண்டிக்கொள்ள இத்தல இறைவன் அதை உடனே நிறைவேற்றி கொடுப்பார் என்பது நம்பிக்கை.
மேலும் கருவறையில் லிங்கத்திற்கு பின்புறத்தில் சப்தகன்னியர்கள் இருக்கின்றனர்.அதனால் பெண்கள் துர்க்கைக்குரிய வழிபாட்டை சிவன் சன்னதி முன்பாகவே செய்வது விசேஷம்.
இடம்
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் - குளித்தலை,கரூர் மாவட்டம் 639104
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 1மணி வரை மாலை 5 மணி முதல் 9 மணி வரை
2.அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்- வெஞ்சமாங்கூடலூர்
இக்கோயில் 1000-2000 ஆண்டுகள் பழமையானது.வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.63 நாயன்மார்களில் சுந்தரர் நாயனாரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும்.
இத்தலத்தில் சுந்தரரின் பாட்டில் மகிழ்ந்த இறைவன் கிழவி வேடம் எடுத்து சுந்தரரின் பிள்ளைகளை இணங்க பொன் கொடுத்தார் என்பது நம்பிக்கை. இந்த கோவில் வெஞ்சமன் எனும் வேட்டுவ மன்னனால் கட்டப்பட்டது.
மேலும் இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்,அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள இறைவனின் திருநாமம் கல்யாண விகிர்தீஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர் இறைவி திருநாமம் பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷினி ஆகும்.பிரகாரத்தில் நால்வர், அறுபத்து மூவர் மற்றும் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. இக்கோயில் சுவாமியை வணங்கிவிட்டு வெளியேறும்போது, படிகளில் ஏறிச்செல்லும்படியாக பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் துன்பப்படுபவர்கள் இங்கு வணங்கிவிட்டு திரும்பும்போதே, வாழ்வில் ஏற்றம் உண்டாகிவிடும் என்பதை இந்த அமைப்பு குறிப்பதாக சொல்கிறார்கள். மணிமுத்தாறு, குடகனாறு ஆகிய இரு ஆறுகள் சேரும் ஊர் என்பதால் இவ்வூருக்கு “”கூடல் ஊர்” என்று பெயர்.
மேலும் நீண்ட நாள் திருமண தோஷம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். குறிப்பாக சிலர் பெண்களின் சாபத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.அவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்ள நல்லதொரு விடிவு காலம் பிறக்கும் என்பது நம்பிக்கை
இடம்
அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர்- 639 109. கரூர் மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 7.30 வரை
3.அருள்மிகு புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,வேலாயுதம்பாளையம்
கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில் இயற்கை சூழ்ந்து மலையின் மீது குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அருள்மிகு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி.இக்கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
புகழூர் என்று அழைக்கப்படும் இம்மலை அமைந்துள்ள இடத்தில் சமண முனிவர்கள் வந்து தங்கி வந்ததாகவும், சங்க காலத்தில் இப்படி அடைக்கலம் புகும் இடங்களைப் புகழூர் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இம்மலை மைசூர் எல்லையாக இருந்த காலகட்டத்தில்தான் இக்கோயில் கட்டப்பட்ட தாகவும், அதன் அடிப்படையிலேயே இங்கு மைசூர் கோயில்களின் கட்டிட பாணியில் கோபுரம் அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இக்கோயில்கள் மற்ற திருக்கோயில்களில் உள்ளதைப் போன்று இல்லாமல், இந்தக் கோயிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தை குறிக்குமாம்.
இதிலிருந்து இந்தக் கோயிலின் புராதனத்தை அறியமுடிகிறது.இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தி பெற்றதாக சொல்லப்படுகிறது. அதாவது நாம் செய்த பாவங்கள் யாவும் தீர்ந்து சுகமான வாழ்க்கை அமைய,பக்தர்கள் தங்கள் கையில் வேலோடு இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்.
தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இடம்
அருள்மிகு புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,வேலாயுதம்பாளையம்
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை
4.அருள்மிகு கல்யாண வெங்கடரமணர் திருக்கோயில்,தான் தோன்றிமலை
இது கரூர் மாவட்டத்தில் அமைந்து உள்ள பெருமாள் கோயிலாகும்.இக்கோயிலில் பெருமாள் பாறையில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் வித்யாசமாக பக்தர்கள் காலணிகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
அதாவது ஒருமுறை சுசர்மன் என்னும் பெருமாள் பக்தன் தனக்கு குழந்தாய் பாக்கியம் வேண்டி திருப்பதி மலைக்கு பாதையாத்திரையாக செல்லும் வழியில் காவிரிக்கரையில் தங்கி இருந்தான்.
அப்பொழுது அவர் கனவில் நாரதர் தோன்றி தாங்கள் இருவரும் திருமக்கூடலூர் என்னும் கூடுதுறைக்கு செல்லுங்கள் அங்கு சிலர் உங்களை வரவேற்பார் என்று கூறினார்.
அங்கு சென்று இவர்களை சிலர் வரவேற்றனர் அப்பொழுது கல்வேலை நடந்து கொண்டு இருக்க திடீர் என்று ஒளி தோன்றி பாறை பிளந்து பெருமாள் அதில் காட்சி கொடுத்தார்,பிறகு அவர்கள் கேட்ட வரத்தையும் கொடுத்தார் என்பது வரலாறு.
இடம்
அருள்மிகு கல்யாண வெங்கடரமணர் திருக்கோயில்,தான் தோன்றிமலை -கரூர் மாவட்டம் 639005
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் 9 மணி வரை
5.அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,கரூர்
தமிழ்நாட்டில் மிகவும் விஷேசமாக கொண்டாடப்படும் அம்மன்களில் மாரியம்மன் ஒன்று.பக்தர்கள் பலர் மாரியம்மன் வணங்கி பல வேண்டுதல்களை வைக்கின்றனர்.அப்படியாக கரூரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்து உள்ளது.
இங்கு மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகத்துடன் சற்றே ஈசான்ய பார்வையில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
கரூர் மாவட்ட நகரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.இங்கு மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வைகாசி திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
இதில் சாதி சமய வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் பங்கேற்பதுடன், வழிபாட்டிற்காக ஒவ்வொரு பக்தா்களும் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீரை எடுத்து வந்து இந்த மகத்தான நிகழ்வில் பங்கேற்கின்றனா்.
இடம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,கரூர்
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |