ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பவர்கள் பின்பற்றவேண்டிய 15 விஷயங்கள்
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் என்றாலும் ஆடி அமாவாசை நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் குலதெய்வம் வழிபாடு செய்யவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் மிகவும் உகந்த நாளாகும்.
மேலும், அன்றைய தினத்தில் நாம் தர்ப்பணம் கொடுக்கும் பொழுது நாம் ஒரு வருடம் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும். அப்படியாக, ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.
1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் கொடுக்கும் மாதத்தில் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளில் தர்ப்பணம் கொடுக்கும் வரை வீடுகளில் எந்த ஒரு பூஜைகளும் செய்யக்கூடாது. தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபாடு செய்த பிறகே நாம் வீடுகளில் தினசரி பூஜைகளை செய்ய வேண்டும்.
3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்பதால் கட்டாயம் நாம் அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து அவர்கள் மனம் குளிர செய்யவேண்டும்.
4. நமக்காக பல கஷ்டங்களை துன்பங்களை தாங்கி நிற்கும் நம் பித்ருக்களுக்குரிய, மகாளபட்சம் மற்றும் மாதந்தோறும் வரும் அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவற்றை தவிர்ப்பது அவர்களுக்கு மரியாதை செல்லும் வகையில் அமையும்.
5. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.
6. பொதுவாக, தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இருப்பதைநாம் அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால், குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவில் கொண்டப்படி நாம் தர்ப்பணம் செய்யவேண்டும். அது தான் நமக்கு சிறந்த பலன் அளிக்கும்.
7. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.
8. தர்பணமானது கோயில்கள் குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்வது மட்டுமே சிறந்த பலன் கொடுக்கிறது.
9. தமிழ்நாட்டில் தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த இடமாக திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் கொடுப்பதே மிக சிறந்ததாக அமையும்.
10. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் குடும்பத்தில் ஏற்பட்ட திருமண தடை, தோஷம், நீண்ட காலமாக இருந்து வரும் கஷ்டம், குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற விஷயங்கள் சரி ஆகும்.
11. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்ல பலன் கொடுக்கும்.
12. அமாவாசை நாளில் இறந்த முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றுவது அவர்களை மனம் மகிழ செய்யும்.
13. தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கிழக்கு முகமாக பார்த்த படித்தான் கொடுக்க வேண்டும்.
14. மிக முக்கியமாக தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்ப்பைப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். அதனால், அந்த தர்ப்பைப் புல்லை எந்த அளவிற்கு மரியாதையாக நடத்துகின்றமோ அந்த அளவிற்கு அவை நமக்கு கேது பகவானின் பலனை பெற்றுக் கொடுக்கும். குறிப்பாக இறந்த நம் முன்னோர்களின் முழு ஆசியும் பெற்றுக் கொடுக்கும்.
15. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







