சபரிமலைக்கு முதல் முறை மாலை அணிபவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் ஒளி நிறைந்த மாதமாக இருக்கிறது. இந்த நாளில் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்வதற்கான மிக உகந்த மாதமாக உள்ளது. அந்த வகையில் கார்த்திகை மாதம் பிறந்த உடன் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
அப்படியாக ஐயப்பனுக்கு முதல் முறை மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் என்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
எவர் ஒருவர் ஐயப்பனை மனதார சரணடைந்து வேண்டுகிறார்களோ அவர்களுக்கு ஐயப்பன் எந்த ஒரு இக்கட்டான நிலையும் வராத அளவிற்கு அவர்களை காப்பாற்றுகிறார்.

மேலும் ஐயப்பனை வழிபாடு செய்பவர்களுக்கு சனியால் ஏற்படுகின்ற தோஷங்கள் வருவதில்லை. அப்படியாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இருமுடி ஏந்தி 41 நாட்கள் மண்டல விரதம் இருந்து ஐயப்பனின் அருள் பெற கடுமையாக வழிபாடு செய்கிறார்கள்.
அந்த வகையில் முதல் முறையாக மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் துளசி மாலையும் ருத்ராட்ச மாலையும் அணிவது வழக்கம். அதோடு முதல் முறை அவர்கள் என்ன மாலை அணிகிறார்களோ அதைத்தான் அவர்கள் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் அணிய வேண்டும் என்று விரும்புவது உண்டு.
ஆனால் சமயங்களில் மாலை ஏதேனும் ஒரு சூழ்நிலையால் அறுந்து போய்விட்டால் என்ன செய்வது என்று குழப்பம் பலருக்கும் இருக்கும். அப்படி ஆனவர்கள் புதிதாக மாலை வாங்கி அணிந்து கொள்ளலாம்.
அதேபோல் குடும்பங்களில் பெண் குழந்தைகள் மற்றும் மனைவிமார்களுடன் வசிக்கும் ஐயப்ப பக்தர்கள் பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவர் என்ன செய்வது என்று குழப்பங்கள் இருக்கும்.

அவ்வாறு வீடுகளில் இருக்கக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் வருவது மிகவும் இயல்பான இயற்கையான நிகழ்வு என்பதால் அவ்வாறான காலகட்டங்களில் அவர்கள் கைகளால் மூன்று நாட்கள் மட்டும் உணவு எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்தால் போதுமானது என்கிறார்கள்.
அதே சமயம் வீடுகளில் ஏதேனும் துக்க நிகழ்வுகள் நடந்து விட்டால் என்ன செய்வது என்கின்ற ஒரு பதட்டமும் குழப்பமும் இருக்கும். அவ்வாறு ஏதேனும் நெருங்கிய உறவினர்கள் இறக்க நேர்ந்தால் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் அந்த வருடம் அணிந்த மாலையை கழற்றி விட வேண்டும்.
காரணம் வீடுகளில் நடக்கக்கூடிய துக்க நிகழ்வானது பெரும் தீட்டாக கருதப்படுகிறது. ஆதலால் அவர்கள் சபரிமலை யாத்திரை செல்ல இயலாது என்பதால் அவர்கள் மாலையை கழற்றி விடுவது உகந்ததாகும்.
ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள் கடுமையாக இவ்வாறு விரதத்தை கடைபிடிக்கிறார்களோ அதற்கு இணையாக மனதளவிலும் அவர்கள் தூய்மையாக பயபக்தியோடு இருப்பது அவசியமாகும். இவ்வாறு இருந்து அவர்கள் ஐயப்பனை சரணடைந்து வழிபாடு செய்யும் பொழுது ஐயன் அருளால் அவர்கள் வாழ்க்கை வளமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |