பாம்புகள் வந்து வழிபடும் அதிசய கோவில் - திருப்பாம்புரம் சென்றால் திருப்பம் நிச்சயம்
திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் கொல்லுமாங்குடி எனும் ஊரிலிருந்து 3 கி.மீ தூரம் தொலைவில் கற்கத்தி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள திருப்பாம்புரம் ராகு கேது கோயில் என்று அழைக்கப்படுகிறது.
திருப்பாம்புரம் ஊர் ஊரகபுரம் என்றும் சேஷபுரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்புகள் பற்றியும், மனிதர்களின் எத்தகைய தோஷங்களை இக்கோவில் போக்குகிறது என்பதையும் அறிந்துக் கொள்வோம்.
கட்டிடக்கலை
3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படும் இந்த கோயில் திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.
சோழப் பேரரசின் 59வது தேவாரத் தலமாகக் கருதப்படுகிறது. நீண்ட நடைபாதைகளுடன் கூடிய பெரிய மண்டபங்களைக் கொண்டுள்ளது. இக்கோயிலில் 28 கல்வெட்டுகள் உள்ளன.
திருப்பாம்புரம் கோவிலின் ராஜகோபுரம், மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் காணப்படுகிறது. மூலவர் சேஷபுரீஸ்வரர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.
சிவன் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகள் தவிர, ராஜராஜ விநாயகர், முருகன், அவரது துணைவியருடன் நடராஜர், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, சட்டநாதர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள் மற்றும் சிலைகள் உள்ளன.
மலையேசுவரருக்கு மாடக்கோயில் வடிவில் தனி சன்னதி உள்ளது. ஆதி பாம்புரேசுவரர் சன்னதி ஸ்தல விருக்ஷத்தின் கீழ் உள்ளது. ராகு மற்றும் கேதுவிற்கும் தனி சன்னதி உள்ளது. விஷ்ணு, பிரம்மா, சூரியன், ஆதிசேஷன், பைரவர், சனீஸ்வரன், ஐந்து சிவலிங்கங்கள் மற்றும் தேவார நால்வர் சிலைகள் உள்ளன.
கோவில் தல வரலாறு
சோழர்கள் எழுப்பிய தேவாரத் திருத்தலங்களில் 59 வதாக இருக்கிறது திருப்பாம்புரம் கோவில். சைவம் வளர்த்த நால்வரில் திருஞானசம்பந்தர் இத்தல ஈசன் மீது பாடலியற்றியுள்ளார். புராண காலத்தில் விநாயகர் தனது தந்தையான சிவபெருமானை வழிபடும் போது, அவர் கழுத்தில் இருந்த நாகம் தன்னையும் விநாயகர் பூஜிப்பதாக எண்ணி கர்வம் கொண்டது.
இதையறிந்த சிவபெருமான் அனைத்து நாகங்களும் துன்புறுமாறு சாபமளித்து விட்டார். ஆதிசேஷன் உட்பட எல்லா நாகங்களும் இந்த திருப்பாம்புரம் கோவிலில் வீற்றிருக்கும் சிவ பெருமானை ஒரு மகா சிவராத்திரி தினத்தன்று வணங்கி சாப விமோச்சனம் பெற்றனர். இத்தலத்திற்கு சர்பபுரி என மற்றொரு பெயர் உண்டு. இங்கு வீற்றிருக்கும் இறைவனை பாம்புரநாதர் என்றும் சேஷபுரீஸ்வரர் மற்றும் சர்பேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.
தல சிறப்பு
இக்கோயிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மாசி மகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் இங்கு முக்கியமானவை. மகா சிவராத்திரி இங்கு மிகவும் போற்றப்படுகிறது. வாரத்தின் மூன்று தினங்களில் கோவிலின் கர்ப்ப கிரகங்களில் நாக பாம்புகள் வந்து இறைவனை தரிசிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்பகுதிகளில் மல்லி மற்றும் தாழம்பூ மலர்களின் வாசம் வீசுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த ஊரில் இந்நாள் வரை அகத்தி பூ பூப்பதில்லை. ஆழம் விழுதுகள் தரை தொடுவதில்லை. இக்கோவில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் எவரையும் இத்தனை ஆண்டு காலமாக எந்த பாம்பும் தீண்டியதில்லை என்கின்றனர்.
திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி மற்றும் கும்பகோணம் ஆகிய 5 தலங்களில் பெருமையை இக்கோயில் ஒருங்கே பெற்றுள்ளது.
ராகு, கேது சன்னதி
பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றார்கள். எனவே இத்தலத்து சிவனையும் அம்மனையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
தல வழிபாடு
இந்த கோவிலில் ராகு கேது பகவானை வழிபட்டால் இந்த கிரக தோஷம் நீங்கும். இந்த கோவில் பரிகார ஸ்தலங்களில் ஒன்றாகும், இங்கு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இங்குள்ள மக்கள் திருமணம் தாமதம், பிரச்சனையில்லா தாம்பத்திய வாழ்வு, குழந்தை இல்லாமை, கால சர்ப்ப தோஷம் , சர்ப்ப தோஷம் போன்றவற்றால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டிக் கொள்கின்றனர்.
போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
வழிபட்டோர்
அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன்.
கோவில் நடை திறப்பு நேரம்:
வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 7.30 லிருந்து மதியம் 12.30 வரையிலும் மாலை 4.00 லிருந்து இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.