கேட்டதை வழங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்
திருச்சிராப்பள்ளிக்கு அருகே அமைந்துள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் தென்னிந்தியாவின் பழமையான மற்றும் முக்கியமான சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நீர் தத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இங்கு மூலவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்றும் அருள்பாலிக்கின்றனர். தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்ற பெரும் பெருமைக்குரிய இந்த ஆலயம் சோழர்களின் கட்டிடக்கலைக்கும் ஆன்மீக பாரம்பரியத்திற்கும் ஒரு சிறந்த சான்றாக திகழ்கிறது.
தல வரலாறு:
அம்பிகையின் நீர் லிங்க தவம்: கைலாயத்தில் பார்வதி தேவி உலக நன்மைக்காக சிவபெருமான் மேற்கொண்ட தவத்தை ஒருமுறை கேலி செய்தார். அதனால் கோபம் அடைந்த சிவபெருமான் பூலோகத்தில் மானிடப் பெண்ணாகப் பிறந்து தவம் செய்யுமாறு கட்டளையிட்டார். அதன்படி பார்வதி தேவி அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் பூமிக்கு வந்து காவிரி ஆற்றின் நீரைக் கொண்டு வெண் நாவல் மரத்தடியில் ஒரு லிங்கத்தை உருவாக்கி வழிபட்டார்.
அம்பிகையால் நீரால் உருவாக்கப்பட்ட லிங்கம் என்பது மூலவர் என்றும், அப்பு லிங்கம் ஆகவே காட்சி அளிக்கிறார். மூலவர் சன்னதி தரைமட்டத்துக்கு கீழே அமைந்து லிங்கத்தின் பீடம் எப்போதும் ஊற்று நீர் கசிவால் சூழப்பட்டிருப்பது இத்தலத்தில் மிகப்பெரிய சிறப்பாகும்.
யானை மற்றும் சிலந்தியின் மோட்சம்:
சிவபெருமானின் கணங்களில் ஒருவரான மாலியவான் மற்றும் புஷ்ப தந்தன் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதன் விளைவாக சாபம் பெற்று பூலோகத்தில் முறையே சிலந்தியாகவும், யானையாகவும் பிறந்தனர். சிலந்தி லிங்கத்தின் மீது வெயில், மழை மற்றும் மரச்சருகுகள் விழாமல் இருக்க தன் வாய் நூலால் வலை பின்னி நிழல் பந்தல் அமைத்து வழிபட்டது.
யானை தினமும் காவிரியில் இருந்து நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்தது. சிலந்தியின் வலையை அழுக்கு என்று கருதி அதனை அழித்துவிட்டு சென்றது. இந்த நிகழ்வு தினந்தோறும் தொடரவே ஆத்திரமடைந்த சிலந்தி ஒரு நாள் யானை துதிக்கைக்குள் புகுந்து கடித்தது.
வலி தாங்காத யானை துதிக்கையை தரையில் அடிக்கும் போது இரண்டும் உயிரிழந்தன. இவைகளின் பக்திக்கு மெச்சி சிவபெருமான் இருவருக்கும் மோட்சம் அளித்தார். யானை வழிபட்டதால் இத்தலம் திரு ஆனைக்காவல் (திரு: புனிதமான, ஆனை: யானை, கா: காடு) என்று பெயர் பெற்றது. பின்னால் திருவானைக்காவல் என மருவியது.
கோச்செங்கட் சோழன் வரலாறு:
யானையைக் கொன்ற பாவத்தினால் அடுத்த பிறவியில் சிலந்தி, கோச்செங்கட் சோழன் என்ற சோழ மன்னனாக பிறந்தது. முற்பிறவியில் யானையால் ஏற்பட்ட கஷ்டத்தை உணர்ந்த மன்னன், யானை ஏற முடியாதவாறு குறுகலான படிகளை கொண்ட 78 மாடக் கோயில்களை கட்டினான். அதில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் முதல் மாட கோயிலாகும்.
ஜம்பு முனிவர்:
ஒரு காலத்தில் ஜம்பு என்ற முனிவர் இங்கு தவம் செய்து சிவபெருமானின் தரிசனம் பெற்றார். இறைவன் முனிவருக்கு நாவல் பழம் அருளினார். அப்பழத்தின் புனிதத்தை கருதி முனிவர் அதன் கொட்டையை விழுங்கினார். அந்தக் கொட்டை முளைத்து அவரது உடலை துளைத்து வெளியேறி வெண் நாவல் மரமாக வளர்ந்தது. ஜம்பு முனிவருக்கு முக்தி அளித்ததால் மூலவர் ஜம்புகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
தல அமைப்பு:
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் திராவிட கட்டிடக்கலையின் சிறப்பை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. பிரகாரங்கள்: இக்கோயில் மொத்தம் ஐந்து பிரகாரங்களை கொண்டுள்ளது.
ஐந்தாவது பிரகாரம்:
திருநீற்றான் மதில். இதுவே கோயில் மிகப்பெரிய வெளிச்சுற்று மதிலாகும். இந்த மதில் சுவர் சுமார் 1.6 km நீளமும், இரண்டு அடி அகலமும், 25 அடி உயரமும் கொண்டது. இச்சுவரை கட்டிய போது சிவபெருமான் சித்தரை போல வந்து வேலையாட்களுக்கு கூலியாக திருநீறு வழங்கியதாகவும், அது அவரவர் உழைப்பிற்கு ஏற்ப தங்கமாக மாறியதாகவும் தல வரலாறு கூறுகிறது. அதனால் இது திருநீற்றான் மதில் அல்லது விபூதி பிரகாரம் என்று அழைக்கப்படுகிறது.
நான்காவது பிரகாரம்:
இது சுமார் 79 தூண்களைக் கொண்ட ஒரு மண்டபத்தை கொண்டுள்ளது. மூன்றாவது மற்றும் இரண்டாவது பிரகாரங்கள்: இவையும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டது. முதல் பிரகாரம்: மூலவர் சன்னதி சுற்றியுள்ள திருச்சிற்றம்.
மூலவர் மற்றும் அம்பாள் சன்னதிகள்:
மூலவர் சன்னதி: மூலவர் ஜம்புகேஸ்வரர் அப்புலிங்கம், சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் பீடத்தில் எப்போதும் நீரூற்று இருக்கும். கோடைகாலத்திலும் இந்த நீர் வற்றுவதில்லை.
அம்பாள் சன்னதி:
அகிலாண்டேஸ்வரி கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்பாள் சன்னதியில் உள்ள இரண்டு தாடங்கங்கள்(காதணிகள்) ஆதிசங்கரரால் உக்கிரத்தை தணிப்பதற்காக ஸ்ரீசக்கரங்கள் பொறிக்கப்பட்டு சாத்தப்பட்டவை ஆகும்.
உபதேச தல அமைப்பு:
இக்கோயிலில் சுவாமியும் அம்பாளும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்க்காமல் எதிரெதிர் திசைகளில் அமைந்துள்ளனர். அம்பாள் மாணவியாகவும், சிவன் குருவாகவும் இருந்து உபதேசம் செய்தல் அடையாளமாக இந்த அமைப்பு உள்ளது.
பிற அம்சங்கள்:
ராஜகோபுரங்கள்: கோயிலில் பல உயரமான கோபுரங்கள் உள்ளன. மேற்கில் உள்ள ஏழு நிலை கோபுரம் பிரதான நுழைவாயிலாக உள்ளது.
சகஸ்ர லிங்கம்:
ஆயிரக்கணக்கான சிறிய லிங்கங்கள் பொறிக்கப்பட்ட ஒரு தனி லிங்கம். நவ தீர்த்தங்கள்: இக்கோயிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம் உட்பட ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
கோச்செங்கட் சோழன் சன்னதி:
நடராஜர் சன்னதிக்கு எதிரில் கோச்செங்கட் சோழ நாயனார் திருவுருவம் தனி சன்னதியில் அமைந்துள்ளது.
திருவிழாக்கள்:
பஞ்சபூத தலங்களில் நீர்தலமாக விளங்கும் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பங்குனி பெருவிழா 48 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தேரோட்டம் பிரதானம்:
மாசி மற்றும் பங்குனி மாதங்களை ஒட்டி நடத்தப்படும். கொடி ஏற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு பிரகாரங்களில் திருவீதி உலா வருகின்றனர்.
விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமர்சையாக நடைபெறும். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தனி தேரில் ஜம்புகேஸ்வரரும், மற்றொரு தேரில் அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருள, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ’ஓம் சக்தி’, ’சிவ சிவ’ கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். தேரோட்டத்தின் முன்னோட்டமாக விநாயகர் மற்றும் சுப்பிரமணிய தேரோட்டமும் நடைபெறுகிறது.
பஞ்சப்பிரகார விழா:
மேலும் 48 நாள் விழாவில் முக்கிய அம்சங்கள் ஒன்றான பஞ்சப்பிரகார விழா சிறப்பாக நடைபெறுகிறது. குருவாக சிவன், மாணவியாக அம்பாள் உள்ள இத்தலத்தில் திருக்கல்யாணம் நடைபெறாததால் தேர் திருவிழா மற்றும் பஞ்சப்பிரகார விழாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதர முக்கிய திருவிழாக்கள்: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.
தைப்பூசம் மற்றும் தெப்ப திருவிழா:
தைப்பூசத்தன்று சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி அம்பாள் திருக்கோலத்தில் எழுந்தருளும் தெப்பத் திருவிழா நடைபெறும். வைகாசி வசந்த உற்சவம்: வைகாசி மாதத்தில் பத்து நாட்களுக்கு வசந்த உற்சவம் விமர்சையாக நடைபெறும்.
ஆடிப்பூரம் விழா:
10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்படும். மகாசிவராத்திரி: சிவராத்திரி அன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
நவராத்திரி உற்சவம்:
9 நாட்களுக்கு சிறப்பு அலங்காரங்களுடன் கூடிய நவராத்திரி உற்சவம் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும். ஐப்பசி பௌர்ணமி: மூலவர் ஜம்புகேஸ்வரருக்கு சிறப்பு மிக்க அன்ன அபிஷேகம் நடைபெறும்.
வழிபாட்டு நேரம்:
பொதுவாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் வழிபாட்டு நேரம் பின்வருமாறு அமையும். எனினும் திருவிழா காலங்களில் இந்த நேரங்கள் மாறுபடும். காலை 5:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை. மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் பெரும் வழிபாட்டு தலமாக மட்டுமின்றி, நீர் தத்துவத்தை விளக்கும் ஓர் அரிய புண்ணிய தளமாகவும், சோழர்களின் கலை மற்றும் ஆன்மீகச் சிறப்பை வெளிப்படுத்தும் வரலாற்று சின்னமாகவும் விளங்குகிறது.
யானைக்கும் சிலந்திக்கும் மோட்சம் அளித்த இறைவன் ஜம்புகேஸ்வரரையும், ஞான உபதேசம் பெற்ற அகிலாண்டேஸ்வரி தாயாரையும் தரிசிப்பது சகல தோஷங்களையும் நீக்கி மன அமைதியும் ஞானத்தையும் அருளும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







