கல்வி மற்றும் திருமணத்துக்கு திருவெண்காடு கோயில்
திருவெண்காடு சீர்காழிக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமம் ஆகும். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் திருவெண்காட்டீசர் , ஸ்வேதாரண்யேஸ்வரர் , திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான், திருவெண்காடு ஐயார் என்று பல பெயர்களில் அழைக்கப்படுன்றார்.
பிரம்ம வித்யாம்பிகா என்பது அம்மனின் பெயர். அப்பர் சம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவரும் பாடல் பெற்ற ஸ்தலமாகும். நவக்கிரக ஸ்தலங்களில் புதனுக்குரிய ஸ்தலம்.
சோழ நாட்டின் காவிரி வடகரை தலங்களில் 11 வது திருத்தலமாக இத்தலம் விளங்குகின்றது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார். சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவமான அகோர மூர்த்தி இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
ஆதி சிதம்பரம்
திருவெண்காட்டில் சிவபெருமான் 1008 வகையான திருத்தாண்டவங்களை ஆடியதால் இத்தலத்தை ஆதி சிதம்பரம் என்கின்றனர். சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். நடராசர் சபையில் ஸ்படிகலிங்கமும் சிதம்பர ரகசியமும் இருப்பதால் இத்திருத்தலத்தை ஆதி சிதம்பரம் என்று அழைக்கின்றனர் .
பிரம வித்யாம்பிகை
108 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திருவெண்காடு விளங்குகின்றது. பிரம்மாவித்யாம்பிகா 108 சக்திகளில் ஒருவர் ஆவார்.
பிரம்மனின் சமாதி உள்ள ஊர் திருவெண்காடு என்பதால் இங்கு சங்கல்பம் சொல்லும் போது பிரம்ம சமாஷனே என்று சேர்த்து சொல்கின்றனர்.
மூன்று மூன்று மூன்று
திருவெண்காட்டில் எல்லாமே மூன்று மூன்றாக இருக்கும் மூன்று மூர்த்தி ஸ்வேதாரண்யர், அகோர மூர்த்தி, நடராச பெருமாள். மூன்று அம்பிகை பிரம்ம வித்யாம்பிகை, துர்க்கை, காளி. திருவெண்காடு சூரியன் சந்திரன் புதன் ஆகிய மூன்று கிரகங்களும் வழிபட்ட தலமாகும். இங்கு விருட்சங்கள் மூன்று கொன்றை, வில்வம், வடவாலமரம். தீர்த்தங்களும் மூன்று, சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் அக்கினி தீர்த்தம்.
கதைகள் பலப்பல
கதை 1
மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்குப் பல இடையூறுகளை இழைத்தான். இதனால் தேவர்கள் அவனிடமிருந்து தப்பித்துத் திருவெண்காட்டிற்கு வந்து வேற்றுருவில் மறைந்து வாழ்ந்தனர். அவன் இங்கும் வந்து அவர்களோடு போர் செய்தான். மேலும் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவரிடமிருந்து சூலாயுதம் ஒன்றைப் பெற்றான். அந்த சூலாயுதத்தால் இடப தேவர் என்னும் நந்தி தேவரைக் குத்தி காயப்படுத்தினான்.
அவர் சிவபெருமானிடம் அழுது முறையிடவும் சிவபெருமான் கோபம் கொண்டு தன் ஐந்து முகங்களில் ஈசானிய முகத்தில் இருந்து அகோர மூர்த்தியாகத் தோன்றினார். அகோர மூர்த்தியைக் கண்டு அஞ்சி நடுங்கிய அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்தான். இக்கோவிலில் காயம்பட்ட இடபதேவர் (நந்தியம் பெருமான்) நிருத்த மண்டபத்தில் காட்சி தருகின்றார்.
வால்மீகி இராமாயணத்தில்…
வால்மீகி ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் ஸ்வேதாரண்யம் என்று திருவெண்காடு சுட்டப்படுகிறது. இத் திருத்தலத்தில் எமனை ஸ்வேதாரண்யர் வதம் செய்ததைப் போல கர தூஷனர்களை இராமபிரான் வதம் செய்தார் என்று ஸ்வேதாரண்யம் எனப்படும் திருவெண்காடு ஓர் உவமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ருத்ரபாதம்
பாத வழிபாடு என்பது பௌத்த சமயத்தில் தோன்றியதாகும். பௌத்த சமயம் மறைந்த பிறகு அவர்கள் வழிபட்ட பாதங்கள் விஷ்ணு பாதம், இராமர் பாதம், ருத்ர பாதம் என்றும் பல்வேறு பெயர்களில் மாற்றி அழைக்கப்பட்டன. இக்கோவிலில் உள்ள பாதம் ருத்ரபாதம் என்று சிவன் பெயரால் அழைக்கப்படுகின்றது. ருத்ரபாதம் வடவால மரத்தின் கீழ் காணப்படுகின்றது.
அபிஷேகமூர்த்தி
திருவெண்காடு கோவிலில் உள்ள கருவறைநாதர் சுயம்புவாக உருவானவர். இது தவிர இங்கு நடராசர் சந்நிதியில் ஸ்படிகலிங்கம் ஒன்று உள்ளது. இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தினந்தோறும் நான்கு முறை அபிஷேகம் செய்யப்படுகின்றது. இங்கு இருக்கும் நடராஜர் பெருமானுக்கு ஒரு வருடத்தில் ஆறு முறை அபிஷேகம் நடைபெறுகின்றது.
தீர்த்தங்கள்
சிவபெருமான் திருவெண்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடிய போது அவருடைய மூன்று கண்களில் இருந்தும் துளிர்த்த துளிகளே இங்கு அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தமாக மாறின. சூரியன், சந்திரன் மற்றும் அக்கினி ஆகியவை சிவபெருமானின் மூன்று கண்களாக விளங்குகின்றன.
அம்பாள் சன்னதி
கோயிலின் வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் தனி உள்பிரகாரத்துடன் பிரம்ம வித்யா அம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவள் பிரம்மனுக்கு வித்தை உபதேசித்தவள் என்பதால் இவள் பெயர் பிரம்ம வித்யாம்பிகை ஆகும். இதனால் கல்விக்குரிய புதன் ஸ்தலமாகக் கருதப்படுகின்றது. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இத்திருத்தலத்துக்கு வந்து தனி சந்நிதி கொண்டுள்ள புயஹன் பகவானை வணங்கி பயன் பெறலாம்.
கதை 2
திருமணத்துக்குத் தவமிருந்த தலம்
மதங்க முனிவரின் மகளாகப் பிறந்த அம்பிகை சிவனை நோக்கித் தவமிருந்து சிவபெருமானை வழிபட்ட தலம் திருவெண்காடு ஆகும். எனவே அவள் தவ ரூபினியாக பின்னிரு கரங்களிலும் தாமரைப் பூக்களும் அட்சமாலையும் ஏந்தி முன்னிரு கரங்களை அபய வரத ஹஸ்தமாகக் கொண்டு அருள் பாலிக்கின்றாள்.
கதை 3
இந்திர மகோத்சவம்
இந்திரன் விருத்தாசுரனனைக் கொன்ற பாவத்தைத் தீர்க்க திருவெண்காட்டுக்கு வந்து தவமிருந்து இறைவனை வழிபட்டான். இதனால் இங்கு இந்திர விழா இந்திரன் மகோத்சவம் என்ற பெயரில் சீரும் சிறப்புமாக நடைபெறுகின்றது. இந்திரவிழாவின் சிறப்புப் பற்றித் தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விரிவாக விளக்குகின்றது.
இவ்விழா பௌத்தக் கோயில்களின் முக்கிய விழா ஆகும். பௌத்தக் கோயில்கள் சிவன் கோயில்களான் போது இந்திரன் சபிக்கப்பட்டவன் ஆனான். எனினும் மக்கள் ஆதரவின் காரணமாக சில விழாக்களும் சமயச் சடங்குகளும் தொடர்ந்தன.
கதை 4
ஐராவதம் சாபம் தீர்த்த கதை இந்திரன் தன்னுடைய ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது பவனி வரும்போது துர்வாச முனிவர் கொண்டு வந்து கொடுத்த மாலையை கொஞ்சமும் மதியாமல் ஒரு கையால் வாங்கி யானையின் மத்தகத்தில் வைத்தான். அம்மாலை தவறிக் கீழே விழுந்து யானையின் காலில் மிதிபட்டது.
இதைக் கண்ட துர்வாச முனிவர் தனது பிரசாத மாலையை காலால் மிதித்த யானையை அதன் தெய்வத்தன்மை இழந்து காட்டு யானையாக கருப்பு நிறத்துடன் பூமியில் போய் திரியும் படி சாபம் கொடுத்தார். திருவெண்காட்டீஸ்வரரைத் தொழும்போது அச்சாபம் நீங்கும் என்றும் கூறினார். ஐராவதம் திருவெண்காட்டிற்கு வந்து சிவபெருமானுக்குரிய ஈசானிய மூலையில் ஒரு குளம் வெட்டி அங்கு ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவ தியானம் செய்து வந்தது.
ஒருநாள் சிவபெருமான் கருப்பு யானையின் சாபத்தை நீக்கி தெய்வத் தன்மையை அளித்து வெள்ளை யானை ஆக்கி இந்திரலோகத்துக்கு அனுப்பி வைத்தார். யானை வெட்டிய குளம் இன்று யானை மடு என்று அழைக்கப்படுகின்றது.
திருஞானசம்பந்தர் தன் பதிகத்தில் 'வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான்' என்றும் 'பெரிய உருவத்தான் வணங்கும் வெண்காடு' என்றும் 'இந்திரன் கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல்' என்றும் வெள்ளை யானை சிவபெருமானை வழிபட்டு சாபம் தீர்த்த கதையைக் குறிப்பிட்டுள்ளார்.
கதை 4
யானை குத்திய கதை
சிவப்பிரியர் என்ற முனிவர் ஒரு சமயம் திருவெண்காட்டில் இருந்து சிவபெருமானை நோக்கி தவம் செயதார். அவர் தாமரை மலர்களைக் கொண்டு வந்து சிவபெருமானுக்குத் தினமும் அர்ச்சனை செய்வது வழக்கம். அவ்வாறு அவர் தாமரை மலர் பறித்துக் கொண்டு வரும்போது ஒரு யானை அவரைத் தாக்கியது. தன் தந்தத்தால் குத்தியது.
ஆனால் அவர் நெஞ்சமெல்லாம் நமச்சிவாய என்ற அஞ்செழுத்து மந்திரம் நிறைந்திருந்த காரணத்தால் யானையின் தந்தம் அவர் நெஞ்சை த் துளைக்கவில்லை, மாறாக திருப்பி அதன் முகத்திற்குள்ளேயே அழுத்தி யானையின் வயிற்றுக்குள் தந்தம் போய்விட்டது. யானை சுய உணர்வு பெற்று சிவப்பிரியரிடம் மன்னிப்பு கேட்டது. சிவப்பிரியாரும் அதன் பரிதாப நிலை கண்டு மன்னித்து பழைய நிலைக்கு திரும்பும் படி வரம் அருளினார். அதன் பின்பு தொடர்ந்து தவம் செய்து வந்த சிவப்பிரியர். வைகாசி அமாவாசை அன்று இறைவனோடு கலந்தார்.
கதை 5
அந்தணனுக்கு விஷச்சோறு
வேதராசி என்பவன் தன் ஊரில் இருந்து அயல் ஊருக்கு புறப்பட்டுச் சென்றான். அப்போது அவன் தான் கொண்டு வந்த கட்டுச்சொற்றை தரையில் வைக்காமல் ஒரு ஆலமரத்தின் பொந்தில் பத்திரமாக வைத்தான். அந்த ஆலமரப் பொந்தில் வசித்து வந்த பாம்பு அந்த சோற்றில் தன் விஷத்தை கக்கிவிட்டது. இதனை அறியாத அவன் தான் கொண்டு வந்த கட்டுச்சோற்றை பசியோடு வந்த ஒரு மறையவனுக்குக் கொடுத்தான்.
விஷம் கலந்த சோற்றை உண்ட மறையவன் இறந்து போனான். இதனால் வேதராசிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவன் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட திருவெண்காட்டுக்கு வந்தான். இங்கு வந்ததும் அவன் தோஷம் அவனை விட்டு நீங்கியது. இதனால் அவன் எமனுடைய பாசக் கயிறில் சிக்காமல் உயிர் பிழைத்தான்.
கதை ஐந்து
எமனை விரட்டிய சிவன்
ஸ்வேத கேது ஒரு முனிவரின் புதல்வன். அவனுக்கு எட்டு வயது நிறைவடையும்போது இறந்து போவான் என்பதுஜோதிடர்கள் கூறினர். சுவேதகேதுக்கு எம பயம் ஏற்பட்டது. எமனிடம் இருந்து தப்பிக்க திருவெண்காட்டுக்கு வந்து சிவ பூஜை செய்தான். அங்கு வந்த எமன் அவன் மீது பாசக்கயிற்றை வீச முனைந்தான். ஆனால் அவனுடைய சிவ பூஜை தடைபடுமே அவன் பூசையை முடிக்கட்டும் என்று காத்திருந்தான். அப்போது சிவன் எமனுடைய வழியை அழித்தார். இதனால் எமனால் முன்னேறிப் போய் சுவேதகேதுவை பாசக் கயிற்றில் பிணிக்க இயலவில்லை. எமன் தோற்றுப் போனான். ஸ்வேத கேது நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தான்.
கதை 6
சிவனை தழுவி எமனை வென்றவன்
நீண்ட காலம் சிவ தியானத்தில் இருந்து வந்த ஸ்வேதன் என்ற மன்னன் தன் மகன் வாதாபி தக்க பருவம் எழுதியதும் அவனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு தன் மனைவி சுலோச்சனாவுடன் காட்டுக்கு வந்து தவம் இயற்றத் தொடங்கினான். பின்பு மனைவியையும் பிரிந்து திருவெண்காட்டுக்கு வந்து இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான்.
ஒரு நாள் எமன் சுவேதனை அணுகி தன் பாச கயிறை வீசினான். சுவேதன் தான் தினமும் வணங்கி வரும் சிவலிங்கத்தைப் போய் கட்டித் தழுவிக் கொண்டான். திருவன்காட்டீசன் நேரில் தோன்றி எமனை விரட்டி அடித்தார். ஸ்வேதனும் சிவயோகம் பெற்றான்.
பூமியின் பாரம் கண்டு அஞ்சி தேவர்கள் எமனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமானும் எமனை உயிர்ப்பித்தார்.
கதை 7
அந்தணர் கொடுத்த/குடித்த கள்
நாகப்பட்டினத்தை சத்தியநல்விரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்போது பசி மயக்கத்தில் தள்ளாடி வந்த பிராமணர் ஒருவருக்கு வேறொரு சாக்த மத பிராமணர் தன்னிடமிருந்த கள்ளை அருந்தக் கொடுத்தார். சாக்தர்களுக்கு மது, மாமிச விலக்குக் கிடையாது. எனவே தான் அவர் தான் வைத்திருந்த கள்ளை மற்றொரு பிராமணருக்குக் கொடுத்து உதவினார். பின்பு அவர் வேறு பிரிவைச் சேர்ந்த பிராமணர் என்பதை அறிந்ததும் 'அடடா தவறு செய்து விட்டோமே! அவருடைய பிராமண தர்மத்திலிருந்து அவர் நழுவும் வகையில் நாம் அவருக்கு கள் ளை க் கொடுத்து விட்டோமே' என்று வருந்தி தான் செய்த தவறுக்குத் தானே பிராயச்சித்தம் தேட முனைந்தார்.
கள்ளுண்ட பிராமணரை திருவெண்காட்டிற்கு அழைத்து வந்தார். அங்கு வந்து அவரை சிவ தியானத்தில் ஆழ்த்தினார். கள் உண்ட பாவத்திலிருந்து அவரை மீட்டெடுத்தார். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட சத்திய நல்வரதன் தன்னுடைய ஆட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு திருவெண்காட்டிற்கே வந்து விட்டான். இங்கு வந்து தங்கி தினமும் சிவ வழிபாட்டில் தன் நாட்களை கடத்தினான்.
இங்கே உள்ள நடராச சபை தில்லை அம்பலத்தைப் போல செப்பு தகட்டினால் ஆனது. நடராசர் அசைந்தால் 14 லோகங்களும் அசையும் என்பதை குறிக்க அவரது காலில் 14 சலங்கைகள் உள்ள காப்பு காணப்படுகின்றது. 81 பதம மந்திரங்களை உணர்த்த அவரது இடுப்பில் உள்ள அரைநாணில் 81 வளயங்கள் உள்ளன. 28 சதுர யுகங்கள் முடிந்து இருப்பதை உணர்த்தும் வகையில் நடராசர் 28 எலும்பு மணிகளை அணிந்திருக்கின்றார்.
வராக கூர்மா அவதாரங்களை அடக்கியதன் அடையாளமாக ஆமையின் ஓட்டையும் பன்றியும் கொம்பையும் மார்பில் அணிந்துள்ளார் .அவருடைய அவருடைய தலையில் 16 சடாமுடிகள் தொங்குகின்றன அந்த 16 ல் ஒரு முடி மட்டும் கட்டப்பட்டுள்ளது. பதினாறு சடை முடிகளும் 16 கலைகளைச் சுட்டுகின்றன. நடராசரின் தலைமுடியில் மயில் பீலியும் கங்கையும் பிறைமதியும் ஊமத்தம்பூவும் வெள்ளருக்கும் உள்ளன இதன் உள்ளன.
திருத்தாண்டவத் தலம்
திருவெண்காடு திருத்தாண்டவச் சிறப்புடையதாகும். இங்கு இறைவன் ஆனந்த தாண்டவம், காளி நிருத்தம், கௌரி தாண்டவம், முடி நிருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம் ஆகிய ஒன்பது நடனங்களை ஆடிக்காட்டி உள்ளார்.
திருத்தலத்தின் சிறப்புகள் திருவெண்காட்டில் மேற்கு நோக்கிய துர்க்கை சன்னதி உள்ளது. திருமண தடை தாமதம் தோஷம் உள்ளவர்கள் வந்து வணங்கினால் அத்தடை விலகி சிறப்பாக திருமணம் நடைபெறும்.
பூசை முறைகள்
திருவெண்காட்டு ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகின்றது. காமிகா ஆகமத்தின் படி வேதாரண்யேஸ்வரருக்கும் காரணகமத்தின் படி அகோர மூர்த்திக்கும் மகுடாகமத்தின் படி நடராச பெருமாளுக்கும் தினந்தோறும் பூசைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் அகோரருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றது. பிரம்மோற்சவத்தின் போது பூரம் நட்சத்திரத்தில் அகோர மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் வீதி உலாவும் நடைபெறுகின்றது.
திருவிழாக்கள்
சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தன்று நடராசருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது.
வைகாசி மாத அமாவாசை அன்று சிவப்பிரியரின் திதி என்பதால் மணிகர்ணிகை நதியில் நீராடுதல் நடைபெறுகின்றது .வெள்ளை யானைக்கு சாப விமோசனம் கொடுத்த நிகழ்ச்சியும் அன்று கோவிலில் நடைபெறும்.
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடராசருக்கு மீண்டும் அபிஷேகம் நடைபெறும்.
ஆடி மாதம் பட்டினத்தார் சிவதீட்சை பெற திருவெண்காட்டிற்கு வந்த சம்பவம் நிகழ்த்தப்படும். சிவபெருமான் பிச்சாடனார் வடிவில் வந்து மணிகர்ணிகை நதியில் தீர்த்தம் கொடுப்பார். சிவபூசை செய்விப்பார். சிவபெருமான் இன்று இரவில் ரிஷப வாகனராக காட்சி தருவார். ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு 10 நாள் திருவிழா நடைபெறும். ஆடி அமாவாசை அன்று சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருள்வார்.
ஆவணி மாதம் வளர்பிறை சதர்த்துசியில் நடராஜருக்கு மூன்றாவது அபிஷேகம் நடைபெறும். கோகுலாஷ்டமி பெருமாள் சேவையும் விநாயகர் சதுர்த்தியும் ஆவணி மாசம் நடைபெறும். ஆவணி மாதத்தில் மூல நட்சத்திரத்தன்று பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு வரக் காணலாம்.
புரட்டாசியில் நடராசர் அபிஷேகமும் தேவேந்திர பூசையும் நவராத்திரி விழாவும் நடைபெறும். விஜயதசமி அன்று சுவாமி மணிக்கர்ணிகை ஆற்றின் கரையில் பரிவேட்டைக்குப் போவார். அம்பாளுக்கு அன்று லட்சார்ச்சனை நடைபெறும்.
ஐப்பசி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். வளர்பிறை பிரதமை தொடங்கியதும் கந்த சஷ்டி விழா தொடங்கிவிடும்.
கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் அகோர மூர்த்திக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறன்று மகா ருத்ரா அபிஷேகமும் விபூதி அலங்காரமும் மிகச் சிறப்பாக இருக்கும். எல்லா திங்கட்கிழமைகளிலும் சுவேதாரண்யேஸ்வருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். மேலும் இம்மாதத்தில் பரணி கார்த்திகை தீப விழாக்களும் சிறப்பாக நடக்கும்.
மார்கழி மாதம் தனுர் மாத பூசை நடைபெறும். சதய நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகர் விழா டோலோற்சவம் நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராசர் தரிசனம் கிடைக்கும்.
தை மாதம் சங்கராந்தி பூசையும் மறுநாள் அம்பாள் கணு குளிக்க மணிக்கர்ணிகை ஆற்றுக்குப் போவதும் உண்டு. சாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்வார்.
தை மாதம் அய்யனாருக்கு 10 நாள் விழாவும் பிடாரிக்கு 10 நாள் விழாவும் நடக்கும்.
மாசியில் இந்திரப் பெரு விழா தொடங்கும். இதற்கு வளர்பிறை துவாதசி புனர்பூசம் நட்சத்திரத்தில் கொடியேற்றம் நடக்கும். இது இரண்டாம் திருவிழாவாகும். மூன்றாம் திருவிழா ஸ்வேதகேதுவை பிடித்த எமனை எரித்ததை நினைவு கூரும் வகையில் பூத வாகனத்தில் சாமி எழுந்தருள்வார். நாலாம் நாள் திருவிழா மகா நட்சத்திரத்தன்று பௌர்ணமி ஒளியில் சுவாமி காவேரி சங்கமத் துறைக்கு வந்து அருள்வார். ஐந்தாம் நாள் திருவிழா பூர நட்சத்திரத்தன்று இறைவன் அகோர மூர்த்தியாக ஏழுந்தருள்வார். இரவு மருத்துவ என்ற அசுரனை சங்காரம் செயத நிகழ்ச்சி நடைபெறும்.
பின்பு இடப வாகனத்தில் இறைவன் காட்சி அருள்வார். ஆறாம் நாள் திருவிழா அன்று சாமி யானைவாகனத்தில் பவனி வருவார். ஏழாம் நாள் திருவிழா அன்று திருக்கல்யாணமும் அதைத் தொடர்ந்து மணமக்களை பூப்பல்லக்கு பவனியும் உண்டு. எட்டாம் நாள் பிச்சாடனார் விழாவாக கொண்டாடப்படும். மேலும் அறுபத்து. மூவர் திருவீதி உலாவும் அன்று நடைபெறும். ஒன்பதாம் நாளன்று திருத்தேர் நடக்கும். பத்தாம் நாள் அன்று காலை நடராசர் வீதி உலாவும் முக்குள தீர்த்தம் கொடுத்தலும் நடைபெறும். மாலையில் பஞ்ச மூர்த்திகள் இடப வாகனத்தில் மணிக்கரணிகை நதிக்கு எழுந்தருள்வர். பங்குனி சுக்லாம் பட்ச பிரதமையில் வளர்பிறை பிரதமையில் அகோர மூர்த்திக்கு லட்ச்சார்னை தொடங்கும்.
பங்குனி உத்திரத்தன்று பத்து நாள் திருவிழா பூர்த்தியாகி மறுநாள் விடாயாற்று சம்பவம் நடைபெறும்.
பிடாரியம்மன் -பிள்ளையிடுக்கி அம்மன்
திரு வெண் காட்டு கோவிலில் நம் முன்னோர்களின் மூத்த குடியான நாகர்களின் தெய்வமான பிடாரி அம்மனுக்கு தை மாதம் இரண்டாம் நாள் தனித் திருவிழா நடக்கும். பிடாரி என்பவள் மயானத்தில் வசிப்பவளாகவும் தவறு செய்தவர்களின் பிள்ளையை தின்பவளாகவும் வாரிசுகளை அழிப்பவளாகவும் வழிபடப்பட்டாள். அவள் எந்நேரமும் தன் கை இடுக்கில் ஒரு பிள்ளையை இடுக்கிக் கொண்டே திரிவாள். எனவே இங்கே எழுந்தருளி இருக்கும் அம்பாளுக்கு பிள்ளை இடுக்கி அம்மன் என்ற பெயரும் உண்டு. இவ்வாறு இத்தலத்தில் பிடாரி வழிபாடு தொடர்கின்றது. இதற்கு ஒரு புதிய கதையும் உருவாக்கப்பட்டுள்ளது.
கதை 8
கால்பட்ட இடமெல்லாம் சிவலிங்கம்
திருஞானசம்பந்தர் இத்திருத்தலத்திற்கு வந்தபோது ஊரெல்லாம் சிவலிங்கங்களாக தோன்றின. அவரால் கால் எடுத்து வைத்துத் தரையில் வைத்து நடக்க இடமில்லாமல் போயிற்று. எனவே அம்பாள் தன் குழந்தையான சிவஞானசம்பந்தரை இடுப்பில் ஒரு குழந்தையைப் போல இடுக்கிக் கொண்டு வந்து கோவிலில் விட்டாள். இக்கதை பிள்ளை இடுக்கி அம்மன் என்று அம்பாளை அழைப்பதற்குச் சரியான காரணமாயிற்று.
தொற்று நோய்த் தடுப்பு
தொற்று நோய் பரவும் போது யாராவது ஒருவர் மீது அகோர மூர்த்தி வந்து ஆவேசம் கொண்டு விபூதி கொடுத்தால் அவர்களின் தொற்றுநோய் மறைந்துவிடும் என்பது இங்கே உள்ள நம்பிக்கையாகும். பௌத்த மடங்களில் பல புத்தர் தெய்வங்கள் மருத்துவ தெய்வங்கள் ஆகும். பரநஷ்வரி தொற்று நோய் பரவலைத் தடுக்கும் பௌத்தப் பெண் தெய்வம் ஆவாள். இத்தலத்தில் சாமியாடி விபூதி பூசுவது வைதிக கோயில்களில் இல்லாத பழைய பௌத்த முறை ஆகும்.
வேறு பல சிறப்புகள்
சுந்தர நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும் அவளது தோழி சந்தன நங்கையும் இவ்வூரில் பிறந்து வளர்ந்தவர்கள் ஆவர் எனவே அவர்கள் ஊர் பெயரையும் தங்கள் பெயரோடு இணைத்துள்ளனர்.
இக் கோயிலுக்கு சோழ பாண்டிய மன்னர்களும் விஜயநகர அரசர்களும் நிபந்தங்கள் அளித்துள்ளனர். இறைவனுக்கு திருமேனிகள் செய்து வைக்கவும் அவற்றிற்கு விளக்கேற்றவும் திருவிழாக்கள் நடத்தவும் நந்தவனம் அமைக்கவும் இசைக்கருவிகள் வாசிப்பவர்க்கும் வேதம் ஓதுவருக்கும் நிலங்கள் கொடுக்கவும் சிவ துரோகிகளாக இருந்த மூவரிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டதாக ஒரு கல்வெட்டுச் செய்தி காணப்படுகின்றது.
முன் வரலாறு
வராற்றுக்கு முற்பட்ட குமரி கண்டத்து மக்கள் இயற்கை வழிபாடு செய்தனர். சூரிய சந்திர அக்கினி வழிபாடு ஆதி கால வழிபாடு ஆகும். இதுவே இன்றும் மூன்று தீர்த்தங்களின் பெயர்களாக இருந்து தொடர்கிறது. பௌத்த சமயம் ஒளி வழிபாட்டை சூரிய தியானம் சந்திர தியானம் என்றும் வளர்த்து வந்தது . சைவம் சூரிய சந்திரன் சிவனை வழிபட்ட தளம் இது என்று புராண கதை உருவாக்கியது. ஆக பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபாடுகள் வெவ்வேறு பெயர்களில் தொடர்கின்றன.
பிடாரி அம்மன் வழிபாடும் நாகர் காலத்தியது. வரலாற்று காலத்துக்கு முந்திய மயான தெய்வ வழிபாடு ஆகும்.
பௌத்தம் பிரமனையும் இந்திரனையும் புத்தருக்கு இணையாகக் கொண்டாடியது. பௌத்தத்தத்துக்கு சமாதி கட்டியபோது பிரமனுக்கும் சமாதி கட்டப்பட்டது
இந்திரன், ஐராவதம் ஆகியவற்றின் மதிப்பு கதைகளின் மூலம் குறைக்கப்பட்டாலும் மக்களை திருப்திபடுத்தவே இந்திரப் பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது. இதுவும் முன்பு இங்கு பௌத்த ஆலயம் இருந்ததை உறுதி செய்கிறது.
அய்யனார் விழாவும் இங்கு பௌத்த சமயம் முன்பு கோலோக்சியதைச் சுட்டுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |