நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லையா?தாண்டிக்குடி முருகனை ஒருமுறை தரிசனம் செய்யுங்கள்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்என்பதற்கு சான்றாக முருகப்பெருமான் பழனி மலையில் இருந்து தாண்டிக் குதித்து வந்த மலையே கொடைக்கானலில் இருக்கும் தாண்டிக்குடி தலமாகும். பழனிக்கு காவடி எடுத்து வழிபாடு செய்த பின்னர், தாண்டிக்குடி முருகப்பெருமானை வழிபாடு செய்தால் மட்டுமே விரதம் முழுமை அடையும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது.
அதோடு இந்த கோயிலை ஒருமுறை தரிசித்து வந்தால் திருமண தடை விலகும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது. இத்தகு சிறப்பு மிக்க தாண்டிக்குடி முருகன் கோயிலை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
திண்டுக்கல் மாவட்டத்தின் தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஸ்ரீபாலமுருகன் கோயில்அமைந்துள்ளது . திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில், சுமார் 50 கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.
வத்தலகுண்டு கொடைக்கானல் சாலையில் ஊத்து என்னும் ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று பண்ணைக்காடு வழியாகவும் தாண்டிக்குடி செல்லலாம். வத்தலகுண்டுவிலிருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ளது. வத்தலகுண்டு மற்றும் கொடைக்கானலில் இருந்து இங்கு செல்ல நகரப் பேருந்துகள் உள்ளன.
மலைக்கிராமம் என்பதால் போக்குவரத்து வசதி மிக குறைவு. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்து தாண்டிக்குடி கிராமத்துக்கு செல்ல பேருந்து வசதிகள் இருந்தாலும் அங்கிருந்து மலை மீதுள்ள கோயில் செல்ல வாடகை வாகனங்களில் தான் செல்ல வேண்டும்.
தல வரலாறு 1:
போகர் முனிவருக்கு முருகப் பெருமான் காட்சி தந்ததுபோல, கற்பக மகா முனிவருக்கு கந்தக் கடவுள் காட்சி தந்த தலமே இது என வரலாறு கூறுகிறது. ஒருமுறை, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பகுதிக்கு குறிசொல்ல வந்த பன்றி மலை சாமியார், மாட்டுத் தொழுவமாகத் திகழ்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி “இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இடம்.
உடனே, இங்கு முருகனுக்குக் கோயில் கட்டுங்கள்” எனக் கூறியுள்ளார். உடனடியாக மக்கள், அந்த இடத்தை சுத்தம் செய்தனர். அங்கே, ஏற்கெனவே கோயில் இருந்ததற்கான சுவடுகள் தெரிந்தன. அதையடுத்து, கற்பக மகா முனிவர் வழிபட்ட இடம் அது என்பது தெரிந்து அந்த ஊர் மக்கள் பூரித்து போயினர். தற்போது அந்த இடம் தாண்டிக்குடி என அழைக்கப்படுகிறது.
தல வரலாறு 2:
அகத்திய முனிவரின் ஆணைப் படி, திருக்கயிலாயத்தில் இருந்து இரண்டு மலைகளை அவரது சீடரான இடும்பன் தூக்கி வந்தான். அந்த இரண்டு மலைகளையும் அவன் பழனியில் வைத்து இளைப்பாறிய போது அங்கே பாலமுருகனாக வந்த முருகக்கடவுள், ஒரு மலையின்மீது ஏறி அமர்ந்து கொண்டார்.
அதன் பிறகு, அந்த மலையை இடும்பனால் அசைக்கக்கூட முடியவில்லை. அதுவே பழனிமலை ஆகும். அதனால் அந்த மலையை அங்கேயே விட்டு விட்டு மற்றொரு மலையை இடும்பன் எடுத்துச் சென்றான். அதுவே தாண்டிக்குடி மலை என அழைக்கப்படுகிறது. பழனிமலையை சிவகிரி என்றும், தாண்டிக்குடி மலையை சக்திகிரி என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.
தல அமைப்பு:
கோயிலின் உள்ளே நுழையும் முன்பாக உள்ள அலங்கார வளைவில் ஆண்டிக்கோலத்தில் முருகப்பெருமானின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே முதலில் நமக்கு விநாயகப்பெருமான் தரிசனம் தருகிறார். அவரை தரிசித்து விட்டு நேராக சென்றால், அழகிய கொடி மரம், பலிபீடம் அமைந்துள்ளது.
அடுத்ததாக மகா மண்டபத்திற்குள் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான மயில் வாகனம், கருவறையில் இருக்கும் முருகப்பெருமானை நோக்கியவாறு உள்ளது. அர்த்த மண்டபத்தில் சன்னிதிகள் எதுவும் கிடையாது. அதற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதும் இல்லை.
மகா மண்டபத்தில் இருந்துதான் முருகப்பெருமானை தரிசனம் செய்ய முடியும். கருவறையில் முருகப் பெருமான், ராஜ அலங்காரத்தில் கையில் வேலோடு அற்புதமாக காட்சி தருகிறார். சண்முக கடவுளை மனதார வணங்கி விட்டு கோவிலை சுற்றி வந்தால், இடும்பன், பைரவர், நாகராஜர், நவக்கிரக சன்னிதிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
தல சிறப்புகள்:
கோவிலின் வலதுபுறம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படும், மலைப் பாறை ஒன்று உள்ளது. பழனி திருத்தலத்தை நோக்கி இருக்கும் அந்த பாறையில் கால் தடம் ஒன்றும் காணப்படுகிறது. அது முருகப்பெருமானின் கால் தடம் எனவும் இங்கிருந்துதான் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பழனி மலைக்கு முருகப்பெருமான் தாண்டிச் சென்றதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இந்தப் பாறையில் வேலின் தோற்றம், மயிலின் தோற்றம், அனுமனின் தோற்றம், பாம்பின் தோற்றம் காணப்படுகின்றன. மிக சிறப்பு வாய்ந்த அம்சமாக இங்குள்ள பாறையின் மீது எப்போதும் வற்றாத சுனை ஒன்றும் காணப்படுகிறது.
சுனையில் ஒரு வேலும் நடப்பட்டுள்ளது. இங்கிருக்கும் குன்றின் மேலே நின்று, கீழே அடிவாரத்தில் இருக்கும் தாண்டிக்குடி கிராமத்தைப் பார்த்தால் முருகப்பெருமானின் வாகனமான மயிலின் வடிவத்தில் இருப்பது மெய்சிலிர்ப்பை உண்டாக்குகிறது.
தல நன்மைகள்:
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், வற்றாத சுனை நீரை எடுத்துச் சென்று சுவாமியின் திருவடியில் வைத்து வழிபட்ட பின்னர், கோயிலில் தரப்படும் விபூதி மற்றும் சந்தனத்தை சுனையில் இருந்து எடுத்து வந்த நீரில் கலந்து அருந்தினால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதோடு திருமணத்தில் தடை இருப்பவர்கள், இங்கிருக்கும் காலபைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 27 மிளகை ஒரு அகல் விளக்கில் வைத்து அதில் நெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 11 வாரங்கள் செய்தால், விரைவில் திருமணம் கைகூடும் என மக்கள் கூறுகின்றனர்.
சிறப்பு பூஜைகள்:
இத்தலத்தில் மாதம் தோறும் வரும் கிருத்திகை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. உற்சவர் சிலையை தேரில் வைத்து கோயிலை சுற்றி வந்து சிறப்பு பூஜை செய்கிறார்கள். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
இங்குள்ள பாலமுருகனிடம் மன முருகி வேண்டி, அது நடந்துவிட்டால் கோயிலுக்கு திருப்பணி செய்வதை பக்தர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். தாண்டிக்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த கோயிலை கட்டிய பன்றிமலை சுவாமிகளுக்கு வளாகத்துக்குள்ளேயே தனியாக ஒரு கோயில் உள்ளது. இங்கும் தினமும் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. இங்கும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள்.
முருகப்பெருமான் அருள்:
மலை உச்சியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த அற்புத தலத்தை அடைவது மிகவும் கடினம் என்பதால், அங்கு செல்ல முருகப்பெருமானின் பரிபூரண அருள் நமக்கு மிகவும் அவசியம். அதனால்தான் மலை அடிவாரத்தில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள மக்கள் மேலே வந்து சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆலயத்தில் ஓர் மணி கட்டப்பட்டுள்ளது.
இறைவனுக்கு பூஜை செய்யப்படும்போது ஒலிக்கப்படும் இந்த மணி, அடிவாரம் வரையிலும் நன்றாக கேட்கும். அப்போது கிராம மக்கள் அங்கிருந்தபடியே முருகப்பெருமானை நினைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கோயில் நேரம்:
தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோயில் திறந்து வைக்கப்பட்டிருக்கும். காலையில் முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம் செய்யப்படும். பிற்பகலில் பலவிதமான காவடிகள், கோவிலின் அடிவாரத்தில் உள்ள தாண்டிக்குடி கிராமத்திற்குச் சென்று வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |