கேட்ட வரத்தை உடனே அருளும் குலசை முத்தாரம்மன்
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைய பெற்ற ஊராக தூத்துக்குடி மாவட்டம் திகழ்கிறது.பலரும் அறிந்திடாத பார்க்க தவறிய திருக்கோயில்கள் என மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைய பெற்றது சிறப்பு.அப்படியாக நாம் தூத்துக்குடி சென்றால் கட்டாயம் தரிசிக்க வேண்டிய கோயில்களின் வரலாறுகளை பற்றி பார்ப்போம்.
1.அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்,குலசேகரப்பட்டினம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில்களில் குலசை முத்தாரம்மன் கோயில் ஒன்று.இக்கோயிலுக்கு பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.அப்படியாக இங்கு தசரா திருவிழா மிக விஷேசமாக கொண்டாடப்படும்.
இங்கு உள்ள அம்மன் சுயம்புவாக தோன்றிய இந்த ஆலயத்தில் ஞானமூர்த்திஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் முத்தாரம்மனை மக்கள் பல ஊர்களில் இருந்து வந்து வழிபாடு செய்கின்றனர்.சுயம்புவாக சிவலிங்கம் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது.
பெரும்பாலான இடங்களிலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அம்பாள் சுயம்புவாக இங்கு தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனாலேயே இங்கு அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்தவளாகக் காட்சியளிக்கிறாள்.
ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் இருந்தால் இதனைப் பரிவர்த்தனை யோகம் என்று கூறுவர். அதேபோல இச்சன்னதியில் சுவாமியின் ஆற்றலை அம்பாள் வாங்கி இருக்கிறாள். எனவே அம்பாள் சிவமயமாகக் காட்சி தருகிறாள்.
இத்துடன் இல்லாமல், அம்பாளின் ஆற்றலை சிவனும் வாங்கியுள்ளார். அதனால் இங்கு சிவன் சக்திமயமாகக் காட்சி தருகிறார். இதனைப் பரிவர்த்தனை யோகநிலை என்று கூறுவர். இப்படியொரு அதிசய சக்தி இத்தலத்தில் அமைந்துள்ளது.
இதுபோன்ற காரணங்களால் இத்திருத்தலத்தில் அம்பாளின் ஆட்சியே மேலோங்கி இருக்கிறது.மக்கள் தங்களுடைய குறைகளை முத்தாரம்மனிடம் சொல்லி வேண்டுதல்கள் வைக்க அம்மன் அது கட்டாயம் நிறைவேற்றி வைப்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அப்படியாக வேண்டுதல்கள் நிறைவேற மக்கள் சில நேர்த்திக்கடன்களை செல்லுகின்றனர்.அந்த வகையில் மிகவும் விஷேசமான தசரா திருவிழாவில் பக்தர்கள் பல வேடம் அணிந்து அம்பாளுக்கு தங்களுடைய காணிக்கை செலுத்துவர்.இதை பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக இருக்கும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல வேடங்கள் அணிந்து இருப்பார்.அதாவது குறவன் குறத்தி காளி அம்மன் போன்ற வேடங்களில் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும்.இந்த கொண்டாட்டத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொள்வர்.
இடம்
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம் - 628206, தூத்துக்குடி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் 9 மணி வரை
2.அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,திருச்செந்தூர்
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கோயில்களில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஒன்று.தூத்துக்குடி மாவட்டத்தில் அமையப்பெற்று இருக்கும் இக்கோயிலுக்கு முருக பெருமானை தரிசிக்க பல மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.
முருகப்பெருமான் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு இந்த அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகும்.மேலும் ஆறுபடை வீடுகளில் கடல் நெருங்கி அமைந்த கோயில்களில் இக்கோயில் ஒன்று மட்டுமே என்ற தனி சிறப்புக்கள் கொண்டது இந்த திருச்செந்தூர் முருகன் கோயில்.
இங்கு கந்த சஷ்டி விழா மிக விமர்சையாக நடைபெறும்.அலைகடல் போல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருக்கும்.இங்குதான் முருகப்பெருமான் சூரபத்மனோடு போரிட்டு, வென்று, வெற்றிக் கொடியான சேவல் கொடியுடனும், பார்வதி தேவி அளித்த வேலுடனும் மயில் வாகனத்தில் அருள் பாலிக்கிறார். திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும்.
நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள்.மேலும்,ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.
மேலும்,அதிகம் பக்தர்கள் பல இடங்களில் இருந்து வந்து முருகனை வழிபாடு செய்து கோயிலில் திருமணம் செய்துகொள்வார்கள்.ஆக முகூர்த்த நாட்களில் இக்கோயில் திருமண விழா கோலமாக இருக்கும்.மேலும்,இங்குள்ள முருகப்பெருமானை கடலில் நீராடி வழிபாடு செய்ய பிடித்த தோஷம் எல்லாம் விலகி வாழ்க்கையில் மிக பெரிய முன்னேற்றம் கிடைக்கும்.
இன்னும் சிலர் ஓர் இரவு தங்கி முருகனை வழிபாடு செய்து வருவார்கள்.அவ்வாறு செய்வதால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்று நம்ப படுகிறது.ஆக வாழ்க்கையில் நாம் கண்டிப்பாக ஒருமுறையாவது கட்டாயம் சென்று தரிசிக்க வேண்டிய ஆலயம் இந்த திருச்செந்தூர் கோயிலாகும்.
இடம்
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628 205 தூத்துக்குடி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
3.அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்-திருக்கோளூர்
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான வைணவ திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் ஆகும்.பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதியில் இது 3 வது திருப்பதி ஆகும். நவக்கிரகத்தில் இது செவ்வாய் தலமாக விளங்குகிறது.
இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவகிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. நம்முடைய கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளூர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்களம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்களம்) சனிக்கிழமைகள் மற்றும் பல விஷேச நாட்களில் இங்குள்ள பெருமாளை தரிசிக்க மக்கள் பலரும் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.
இடம்
வழிபாட்டு நேரம்
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
4.அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில்,ஸ்ரீவைகுண்டம்
பொதுவாக நதிக்கரை ஓரங்களில் நாம் பிள்ளையார் கோயில் அமைந்து இருப்பதை பார்த்திருப்போம்.ஆனால் இங்கு முருகன் கோயில் அமைய பெற்று இருப்பது தான் மிகவும் சிறப்பு.கோயிலுக்கு எதிரில், சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் பின்னிப் பிணைந்தபடி நிற்க, மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் அமைந்துள்ளன.
சனிக் கிழமைகளில் அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமையில் வழிபடுவது கூடுதல் விசேஷம்.மேலும்,நாகதோஷம் இருப்பவர்கள் முதலில் தாமிரபரணியில் நீராடி, ஈரத்துணியுடனேயே சென்று பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் சிலைகளின் மீது தூவி, மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகித்து வழிபட சர்ப்ப தோஷம் விலகி சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பழநியாண்டவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் இந்த முருகப்பனை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும் ஒரு புது வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இடம்
அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி அருகில் தூத்துக்குடி.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
5.அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில்,ஸ்ரீவைகுண்டம்
தூத்துக்குடியில் நவ திருப்பதி மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்.அதன் அடைப்படையில் நவதிருப்பதிகளில் முதன்மையான திருத்தலம் இந்த வைகுண்டநாதர் திருக்கோயில் ஆகும். நவகிரகங்களில் சூரிய பகவானுக்குரிய திருத்தலம்.இங்கு இறைவன் வைகுண்டவாசன் வைகுண்ட காட்சியை தந்தருளிய திருத்தலம்.
மூலவர் கள்ளபிரான் ஸ்ரீ வைகுண்டநாதர் எனவும் தாயார்–வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார் , சோரநாத நாயகி)என்ற திருநாமங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். பொதுவாக, பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிசிறப்பு.
மகாவிஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானுக்குரியது கயிலாயம். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர். இத்தலத்தில் சுவாமியே, வைகுண்டநாதராக அருளுவதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை.
தவிர, இந்த ஊரிலேயே கயிலாசநாதர் (நவகைலாய தலம்) கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலில் வேண்டிக்கொள்பவர்களுக்கு கயிலாயத்தில் இடம் கிடைக்கும். இவ்வாறு, ஒரே ஊரில் வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.
இடம்
அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில் (80 வது திவ்யதேசம்),ஸ்ரீவைகுண்டம்,தூத்துக்குடி - 628 601.
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |