திருப்பூரில் உள்ள சிறப்புவாய்ந்த கோவில்கள் - வழிபாடுகளும், பலன்களும்
தமிழ்நாட்டிலுள்ள கொங்கு நாட்டின் ஒரு பகுதிதான் திருப்பூர். இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களின் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
துணி ஆலைகள் மட்டுமின்றி, சோழ, பாண்டிய மன்னர் காலத்திய, பல்வேறு மழமையான கோவில்கள் இங்கு அமைந்துள்ளன. அவற்றின் தகவல்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.
அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில்
அவினாசியில் அமைந்துள்ள இந்தக் கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், 15 ஆவது நூற்றாண்டில் சுந்தர பாண்டியன் என்னும் மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது.
இங்குள்ள தேர் தென்னிந்தியாவிலுள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
சிவன் தலங்களில் முதன்மை பெற்ற தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலில் சுவாமிக்கு வலது புறம் அம்பாள் அமைந்திருப்பது பெரும் சிறப்பாக கருதப்படுகிறது.
திருப்பூர் திருப்பதி கோவில்
இந்த கோவில் மேல திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. நான்கு தெருக்களின் குறுக்கே கோவில் வசதியாக உள்ளது. கோவிலின் கருவறையில் முக்கிய தெய்வம் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியில் வைகுண்ட நாராயணமூர்த்தி தனது மனைவியான லட்சுமிதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர். சுவாமி தரிசனம் செய்வோர் அவல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை வைத்து வழிப்படுகின்றனர்.
சிவன் மலை
காங்கேயத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் சிவன் மலை அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற ஸ்தலம் இது. இக்கோவில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முருகப்பெருமான் இங்கு எளுந்தருளியுள்ளார்.
புகழ்பெற்ற தைப்பூச விழாவில், கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் வருகை தருகிறார்கள். மற்ற திருத்தலங்கள் போல் அல்லாது இங்கு முதல் வழிபாடு முருக பெருமானுக்குத்தான் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சுக்ரீஸ்வரர் ஆலயம்
நொய்யல் ஆற்றின் கிளை ஆறான நல்லாற்றின் கரையில், இக்கோவில் அமைந்துள்ளது. பத்தாவது நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்த இக்கோவிலின் உள்ளே சோழர்களால் பல்வேறு மண்டபங்களும் கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன.
சிவன் மற்றும் பார்வதி முக்கிய தெய்வங்களாக உள்ளனர். மூலவர் சுக்ரீஸ்வரர் லிங்கமாக வீற்றியுள்ளார். வழக்கமாக, சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும்.
இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ளன.
கொங்கணகிரி முருகன் கோவில்
முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், சிக்கலான அலங்கார வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1200 ஆண்டு கால வரலாறு கொண்ட பழமையான கோவில்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பரிபூரண கோலத்தில் அருளும் நவக்கிரகங்களைத் தரிசிப்பதால் கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். சஷ்டி வழிபாடுகளும், செவ்வாய்க் கிழமைகளில் திரிசதி வழிபாடும் விமர்சையாக நடைபெறுகின்றன.
மேலும் திருமண தோஷம் உள்ளவர்கள் திருமணத் தடை இங்குள்ள வக்கனை மரத்தில் தாலிச் சரடு கட்டியும், புத்திர தோஷம் உள்ளவர்கள்வளையல் மற்றும் தொட்டில் கட்டியும் வழிபட்டுச் செல்கின்றனர்.
விஸ்வேஸ்வர ஸ்வாமி கோவில்
சுந்தரபாண்டியன் எனும் மன்னன் கட்டிய கோயில் இது. எனவே முன்னதாக இந்தப் பகுதி சுந்தரபாண்டிய நல்லூர் என அழைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சரபேஸ்வரரை, தொடர்ந்து 24 ஞாயிற்றுக்கிழமைகள் வணங்கி வழிபட்டால் பில்லி, சூனிய ஏவல்கள் அனைத்தும் விலகி ஓடும் என நம்பப்படுகிறது.
மகா சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடவே, நல்ல வாழ்க்கைத் துணை வாய்க்கப்பெறும், பிள்ளை வரம் கைக்கூடும் எனக் கூறப்படுகிறது.
முருகன் ஆலயம், ஊத்துக்குளி
மலையின் மீது அமைந்திருக்கும் இக்கோயில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நம்பப்படுகிறது. கட்டிடக்கலை, சிக்கலான வேலைப்பாடுகள் மற்றும் பிரமிக்க வைக்கும் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.
கந்த சஷ்டி, கோயிலில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்று. இதன் சிறப்பம்சம் இம்மலையின் ஏற்ற இறக்கங்களில் பக்தா்களால் பக்தி பரவத்தோடு இழுக்கப்படும் திருத்தோ்.
திருமுருகன்பூண்டி ஆலயம்
பெரும்பாலான கோவில்களில், சுப்ரமணியர் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன.
ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, முருகன் முகத்தை பார்த்தால் சரியாகிவிடும் என்று நம்பப்படுகிறது.
சென்னிமலை
சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது.
இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்று அழைக்கின்றனர். இங்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வு. மலையின் மீதும் காகம் பறப்பதில்லை.வள்ளி-தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, அமிர்தவல்லி-சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் செய்த சிறப்புமிக்க ஆலயம்.
காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயில்
இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், மேற்கூரையின்றி மூலஸ்தானத்தில் அனுமன் நிற்பதுதான். தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இது வியாசராயரால் நிறுவப்பட்ட 89வது ஹனுமந்த கோவில் என்று கூறப்படுகிறது.
மூல மூர்த்தியாக அனுமன் விளங்கினாலும், பிரம்மோத்சவமாக நரசிம்மர் சன்னதியும் உள்ளது. காட்டு பிரதேசமாக விளங்கியதால் "காடு" என்னும் அடைமொழியுடன் கூறப்படுகிறது.