குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வைரவன்பட்டி பைரவர் கோயிலுக்கு செல்லுங்கள்
தல அமைவிடம்:
சிறப்புமிகு பைரவர் கோவில், காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் பாதையில் திருப்புத்தூரில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 14 கி.மீட்டர் தொலைவிலும், குருஸ்தலம் பட்டமங்கலத்தில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவிலும், திருக்கோட்டியூரில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து திருமெய்யம் வழியாகவும் திருப்புத்தூருக்குச் செல்லலாம்.
கால பைரவர்:
சிவபெருமான் பிரம்மனுடைய அகந்தையை அகற்ற, அவருடைய நெற்றிப் புருவ மத்தியில் இருந்து பைரவரை உருவாக்கியதாக சிவபுராணம் கூறுகிறது. தன்னை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று பைரவர் சிவனிடம் கேட்டபோது பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஐந்தாவது தலையை கொய்ய கூறினார்.
சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்றிய பைரவர், ஒரு கையில் தண்டமும், மற்றொரு கையில் பிரம்மனுடைய தலையும் கொண்டு, காலில் சிலம்புடனும், கழுத்தில் முத்துமாலையும், கபால மாலையும் அணிந்து இருப்பவராக காட்சியளிக்கிறார். நான்கு வேதங்களையும் நாய் உருவத்திற்குள் அடக்கி அதனையே தனது வாகனமாகவும் மாற்றிக் கொண்டார்.
தல வரலாறு:
காசிப முனிவருக்கும் - மாயைக்கும் சூரபத்மன், சிங்கன், தாரகன் எனும் மூன்று அசுர புத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் கடுந்தவமியற்றி ஈசனிடம் பெருவரங்கள் பெற்றனர். சிவபெருமானிடம் பெற்ற அளவற்ற வரங்களால் தேவருலகையே தங்கள் வலிமையால் ஆட்டிப் படைத்தனர். இதனால் கலக்கமுற்ற தேவர்கள், பூலோகம் வந்து அழிஞ்சல் வனத்தில் ஒளிந்திருந்தனர். ஆயினும் தேவர்கள் மறைந்திருந்த இடங்களைத் தேடிப்பிடித்து அசுரர்கள் அழித்தனர். அசுரர்களின் தொல்லையைத் தாங்கமுடியாத தேவர்கள் அழிஞ்சல் வனத்திலிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து, ஈசனிடம் முறையிட்டனர்.
அவர்களுக்கு அபயம் அளிக்க எண்ணிய சிவபெருமான், பைரவரை உருவாக்கினார். பைரவரிடம் இருந்து பூதப்படைகளும் தோன்றின. அந்தப் பூதப்படைகளுக்கு விநாயகரும், நந்திதேவரும் தலைமை தாங்கினர். போர்க்களத்தில் சூரபத்மனின் படைத் தளபதிகளான மகாதமிட்டிரன், வக்கிரதமிட்டிரன், கும்பாண்டார்களுடன் கடும்போர் நடைபெற்றது. கடைசியாக அழிஞ்சல் வனத்தின் நாயகியான, வடிவுடை நாயகி அம்பாளிடம் சூலத்தினைப் பெற்ற பைரவர் அதனை அசுரர்களை நோக்கி ஏவுகிறார்.
ஏவப்பட்ட சூலமானது அவர்களைக் கோர்த்துக்கொண்டு இழுத்து வருகிறது. பைரவர் சூலத்திடம், “அவர்களை மலைகளாக்கிடுக” என ஆணையிடுகிறார். சூலம் அவ்வாறே செய்ய அவர்கள் கீழே விழுந்து மலைகளாயினர். பின்னர் சூலம் அந்த அழிஞ்சல் வனத்தில் இருந்த சிவ தீர்த்தத்தில் மூழ்கி, பைரவரின் திருக்கரத்தை அடைகிறது. தேவர்கள் பைரவரைத் துதித்தனர்.
பைரவர், “தேவர்களே! பயப்பட வேண்டாம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறுமுகன் தோன்றி அசுரர்களை அழிப்பான். அதுவரை நீங்கள் அருகிலுள்ள இடத்தில் தங்கியிருங்கள்” என அருளினார். தேவர்கள் அங்கு இளைப்பாறியக் காரணத்தால்தான் அத்தலத்திற்கு ‘இளையாற்றங்குடி’ என்று பெயர் வந்தது.
பின்பு அழிஞ்சல் வனத்தில் இருந்த சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் இடையே பைரவர் கோயில் கொண்டார். அன்றுமுதல் இந்த அழிஞ்சல் வனம் ‘வைரவன் பட்டி' என வழங்கப்பட்டு வருகிறது. வைரம் எப்படி உறுதியாக இருக்கிறதோ அவ்வாறே பைரவரும் தம்மைச் தஞ்சமென்று தேடி வரும் பக்தர்களை உறுதியாகக் காத்து அருள் புரிகிறார். இத்தல பைரவரை, ‘வைரவர்’ என்றும், ‘வயிரவர்’ என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.
தல அமைப்பு:
வைரவன்பட்டி பைரவர் கோயில் கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலானது கற்பகிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நடராஜர் சபை, முன் மண்டபம், பலி பீடம், கொடி மரம், அம்மன் சன்னதி, பள்ளியறை, பைரவர் சன்னதி, நந்தி மண்டபம், மேல் சுற்று பிரகாரம், திருச்சுற்று மாளிகை, நடராஜர் கோபுரம், பரிவார சன்னதிகள், யாக சாலை, கோயில் கிணறு, மாலை கட்டும் மேடை, சந்தனம் இழைக்கும் மேடை, இராஜகோபுரம், வயிரவர் பீடம், வயிரவர் தீர்த்தம், ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
இங்கு கணபதி, முருகன், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதி அருகே தல விருட்சமான அழிஞ்சி மரம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. உள் பிரகாரத்தில் நாயன்மார்கள் அறுபத்து மூவர், கன்னி மூலை கணபதி, தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஆறுமுகப் பெருமான், வள்ளி, தெய்வயானை, சரஸ்வதி, ஆதி வடிவுடையம்மன், போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன.
இராஜ கோபுரத்தின் எதிரே கோயில் ஊருணி நான்கு துறைகளுடன் மிக அழகாக காட்சியளிக்கிறது. கோயிலின் உள்ளே வளரொளிநாதர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கருவறை மூலவர் பழங்காலத்தில் அழிஞ்சி மரத்தின் அடியில் அமைந்து இருந்ததாக மக்கள் கூறுகின்றனர். மஹா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்ணையும் மனதையும் கவர்கின்றன. மகாமண்டபத்தூண்கள் முழுவதும் புடைப்புச் சிற்பங்கள் அழகுற காட்சியளிக்கின்றன. சிவன் கோயிலில் ராமரது சிற்பமும் ஹனுமனது சிற்பமும் அருகருகில் அமைக்கப்பட்டுள்ளது எங்கும் காணாத அதிசயமாகும்.
[கருவறை சுற்றுப் பிரகாரத்தில் ஸ்ரீ ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கி நிற்பது அதிசயக் கோலமாகும். ராமரது சிலையை விட ஹனுமனது சிலை சற்று பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஹனுமான் இலங்கைக்குச் சென்று சீதா தேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியை ஸ்ரீ ராமரிடம் சேர்த்தார். அந்த நல்ல செய்தி கேட்டு மகிழ்ந்த இராமர் நன்றிப் பெருக்குடன் ஹனுமனை கை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவ காட்சியாகும்.]
தல சிறப்புகள்:
பைரவ தீர்த்தம்: ஸ்ரீபைரவர் மட்டுமல்ல, அவருக்கான வழிபாடுகளும் இங்கே விசேஷமாகும். பைரவர் சன்னதிக்கு எதிரே உள்ள பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவுவதற்காக பைரவர் உருவாக்கிய தீர்த்தம் என புராணங்கள் கூறுகின்றன.
தெய்வ விருட்சம்: தொடர்ந்து 3 புதன்கிழமை (அ) சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்குச் சென்று பைரவ தீர்த்தத்தில் நீராடி, பைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதோடு இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம் எனவும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
இந்த மரத்துக்கு வேறொரு மகத்துவமும் உள்ளது. இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதன் இறந்ததும் மீண்டும் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, ஏறு அழிஞ்சில் மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்கின்றன. மேலும், மாசி மாதத்தில் இந்த மரத்தில் பூக்கும் சூரிய வெண்மை கொண்ட பூக்களைக் காண்பதே புனிதமாகும்.
துலாபாரம்: பைரவருக்குப் பிடித்தமான உளுந்து, வெல்லம், பச்சரிசி ஆகியவற்றைத் துலாபாரம் செலுத்தி வழிபடுவதால், அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி, சனி தசை நடைபெறும் அனைவரும் சனிக் கிரக பாதிப்புகள் யாவும் நீங்கி நலம் பெறுவார்கள். மேலும், கல்வியில் மந்தமாக உள்ள குழந்தைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து வழிபடச் செய்தால், விரைவில் அவர்களின் கல்வியறிவு மேம்படும்.
இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு ஸ்ரீவடிவுடையம்மன் ஆவார். மற்ற கோயில்களில் உள்ள அம்மன்களைவிட ஸ்ரீவடிவுடையம்மனின் காது பெரிதாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவு ஸ்ரீவடிவுடையம்மனைப் பிரார்த்தித்து, அங்கேயே தங்கியிருந்து, மறுநாள் உச்சிப் பொழுதில் பைரவரை வழிபட, நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
நித்யாக்னி பூஜை: வளரொளி நாதர் அக்னி சொரூபராக இருப்பதால், வருடத்தின் 365 நாட்களும் இங்கே நித்ய அக்னி பூஜை நடைபெறும். இதில் கலந்து கொண்டு வழிபடுவதால் தீராத பீடைகளும் நோய்களும் நீங்கும். திருமண தோஷங்கள் விலகும்.
அம்மன் சன்னதிக்கு நேர் பின்புறம் உள்ள இரண்டு பல்லி உருவங்களை வழிபடுவதன் மூலம் பில்லி தோஷங்கள் அகலும்.
வழிபாட்டு நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.45 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.45 மணி வரை மக்கள் வழிபாட்டிற்காக கோயில் திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |