வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களின் கவனத்திற்கு....
வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது வனத்துறை
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது வெள்ளிங்கிரி மலை.
சுமார் 5.5 கிலோமீட்டர் தூரம் கொண்ட மலைப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவையை கடந்து சென்றால் 7வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும்.
கரடுமுரடான இந்த மலைப்பாதையில் ஏற ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை அனுமதி வழங்கப்படும்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மலையேறிய 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனை தடுக்கும்வகையில் வனத்துறை புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் வனத்துறை அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டும் செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது.
பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்க்கவும். பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் போட வேண்டாம்.
மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவளிக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றகூடிய பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. வனப்பகுதிக்குள் எங்கும் தீ மூட்டக்கூடாது.
வெள்ளிங்கிரி 6-வது மலை ஆண்டி சுனையில் குளித்துவிட்டு ஈர துணிகளை அங்கேயே போட்டு விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு கடந்த மாதங்களில் சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்து உள்ளனர்.
எனவே, இதய நோய் சம்மந்தப்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சு திணறல் உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், வயதில் மூத்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் ஆகியோர் மலையேறுவதை தவிர்க்க வேண்டும்.
வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்த பின் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும்போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
உயிரிழப்புகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கு கடும் சவாலாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.