சாதுர்மாஸ்ய விரதத்தின் ஆச்சர்யப் பலன்கள்
மகான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களால் பல வகையான விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. பொதுவாக, விரதங்கள் நல்ல பலன்களைத் தரக்கூடியவை. உடலுக்கு ஆற்றலையும் மனதிற்கு அமைதியையும் தருபவை.
இத்தகைய சக்தி மிக்க விரதங்களில் ஒன்றுதான் சாதுர்மாஸ்ய விரதமாகும். இந்த விரதத்தைப் பற்றிய தகவல்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
‘சதுர்‘ என்றால் நான்கு என்று பொருள். ‘மாஸ்ய’ என்றால் மாதம் என்று பொருள். நான்கு மாதங்கள் கொண்ட இந்த விரதமானது, ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள் ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று அதாவது, ‘குருபூர்ணிமா’ அன்று தங்கள் குருமார்களை நினைவு கூறும் வகையில் வேத வியாசரை வழிபட்டுத் விரதத்தைத் துவக்குவார்கள்.
இந்த தினத்தை மகான்கள், ‘வியாச பூர்ணிமா’ என்றும் அழைப்பது வழக்கம். ஆடி மாதத்தில் துவங்கி கார்த்திகை மாதத்தில் ஏகாதசியில் இந்த விரதம் முடிவடையும்.
இந்த நான்கு மாதங்களும் மகாவிஷ்ணு யோக நித்திரையில் இருக்கும் காலமாகும். ஆஷாட மாதத்தின் சுக்லபட்ச ஏகாதசியில் இருந்து கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி வரை மகாவிஷ்ணு ஆதிசேஷனுடன் திருப்பாற்கடலில் யோக நித்திரையில் இருப்பார்.
இந்த காலகட்டத்தில் அனுஷ்டிக்கப்படும் சாதுர்மாஸ்ய விரதமானது மிகுந்த பலனைத் தரும்.பொதுவாக, இந்த நான்கு மாதங்களும் மழைக்காலங்களாகும்.
இந்த காலத்தில் புழு பூச்சிகள் முதலான பல ஜீவராசிகள் இடம்பெயர்ந்து வாழும். உயிரினங்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் ரிஷிகள், சன்னியாசிகள் முதலானோர் ஆஷாட பௌர்ணமி தினத்தன்று வியாச பூஜையினைச் செய்து அன்று முதல் எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் தங்கி இருந்து இந்த விரதத்தை மேற்கொள்ளுவது மரபாகும்.
இந்த நான்கு மாதங்களும் பூஜைகளைச் செய்து மந்திரங்களை உச்சரித்தபடி இருப்பர். வேதாந்தங்களை மக்களுக்கு உபதேசிப்பதும் வழக்கம்.
கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து வாழ்வர். சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடிக்கும் நான்கு மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பொருளை தம் உணவிலிருந்து விலக்கி வைப்பர்.
முதல் மாதத்தில் காய்கறிகளும் பழங்களும் இடம் பெறும். இரண்டாவது மாதத்தில் பாலைத் தவிர்ப்பது வழக்கம். மூன்றாவது மாதத்தில் தயிரைத் தவிர்ப்பர்.
நான்காவது மாதத்தில் பருப்பு வகைகளை உணவிலிருந்து தவிர்ப்பது வழக்கம். சாதுர்மாஸ்ய காலத்தில் குருபூர்ணிமா, விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி முதலான விழாக்கள் வரும்.
இந்த நல்ல நாட்களில் சன்னியாசிகள் மற்றும் மகான்களைச் சந்தித்து ஆசி பெற வேண்டும். இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
ரிஷிகள், சன்னியாசிகள் மட்டுமின்றி, அனைவரும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |