இலங்கையில் பலரும் அறிந்திடாத சிலை இல்லாத முருகன் ஆலயம்
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு கேட்ட நேரத்தில் அவர்களுடைய குறைகளை தீர்த்து வரம் வழங்குபவர். அப்படியாக முருகப்பெருமானுக்கு உலகம் எங்கிலும் கோவில்கள் பல இருக்கிறது. அந்த வகையில் இலங்கையில் தென்கிழக்கு கரையில் ஊவா மாகாணம் கதிர்காமம் எனும் முருகன் கோயில் இருக்கிறது.
இங்கு "காப்புறாளைமார்"என்னும் சிங்களர்கள் அவர்களுடைய வாயை கட்டிக்கொண்டு கருவறையில் உள்ள திரைக்குப் பின்புறம் நின்று பூஜை செய்கிறார்கள். இதைவிட வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் திரைக்குப் பின்புறம் முருகப்பெருமானுக்கு சிலை இல்லை. கருவறையில் உள்ள பெட்டிக்கு தான் பூஜை நடக்கிறது.

சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த முருகப்பெருமான் இங்கு வள்ளியை காதல் திருமணம் செய்ததால் இத்திருத்தலம் கதிர்காமம் என பெயர் பெற்றது. இங்குள்ள முருகப் பெருமானை கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி, கந்த கடவுள் என பக்தர்கள் அழைக்கிறார்கள்.
மறுபுறம் வேறு ஒரு வரலாற்றின் அடிப்படையில் சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் கதிர் காமத்திற்கு வந்திருக்கிறார். இங்கு ஓடுகின்ற மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்திருக்கிறார்.
சூரபத்மனிடம் போரிட்டு வெற்றி பெற்ற பின் நவகங்கை தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கள் வழிபடுவதற்காக இங்கு எழுந்தருளியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இக்கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்தல், கற்பூர சட்டி எடுத்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல் என அவர்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள். இங்கிருக்கின்ற பழங்குடி மக்கள் முருகப்பெருமானை தங்களுடைய மாப்பிள்ளையாக கருதுகிறார்கள்.

இக்கோயிலை பற்றி அருணகிரிநாதரும் "வனமுறை வேடன் அருளிய பூசை மயில் கதிர் காமம் உறைவோனே" என பாடியுள்ளார்; அதோடு இங்கு பூஜை செய்கின்ற "காப்புறாளைமார்" சிங்களர்கள் தங்களை வள்ளி அம்மையின் வழி தோன்றல்கள் எனவும் எண்ணுகின்றனர்.
இங்கு முருகப்பெருமானின் கருவறை வண்ணத்திரையால் மூடப்பட்டிருக்கும். அதில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானின் ஓவியம் வரைந்திருக்கும். பக்தர்கள் தருகின்ற அர்ச்சனை பொருட்களை திரைக்குள் சென்று "காப்புறாளைமார்" சுவாமிக்கு சமர்ப்பித்து பூஜை செய்கிறார்கள்.
அதோடு காஷ்மீரை சேர்ந்த துறவி கல்யாணி கிரி என்பவர் இங்கு 12 ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அவருடைய சமாதியும் இங்கே இருக்கிறது, மேலும் முத்துலிங்க சுவாமிகள் எனப்படும் இவர் வழிபட்ட சரவணபவ எந்திரமே கருவறையில் இருப்பதாக சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |