உங்கள் ஜாதகத்தில் சனிபகவான் இந்த இடத்தில் இருந்தால் ஆபத்தாம்
நவகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் ஒருவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப அந்த மனிதனுடைய வாழ்க்கை அமைத்து அவருக்கான பாடத்தை வழங்க கூடியவர். அப்படியாக ஜோதிடத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார்.
இவர் ஜாதகத்தில் அமர்ந்திருக்கக்கூடிய இடமும் அமர்ந்திருக்கக்கூடிய வீடும் ஒருவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அப்படியாக ஒருவருடைய ஜாதகத்தில் சனிபகவான் லக்னத்தில் இருந்து எந்த கட்டத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் வீட்டினுடைய பலன் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
1 ஆம் வீடு:
முதல் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு மனரீதியாக சில கவலைகள் உண்டாகலாம். ஆனால் இவர்களுக்கு அரசாங்க ரீதியாக ஆதரவு வருமானமும் பதவிகளும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
2 ஆம் வீடு:
இரண்டாம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருந்தால் குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்களுடன் இவர்களுக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்படலாம். கண் பார்வையால் சில தொந்தரவுகளை இவர்கள் சந்திக்ககூடும். பொதுவாக சனி பகவான் இரண்டாம் வீட்டில் அமைந்து இருப்பது அவ்வளவு விசேஷம் இல்லை என்று சொல்வதுண்டு.
3 ஆம் வீடு:
சனி பகவான் மூன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்றால் இந்த ஜாதகருக்கு இளமையில் அதிக அளவிலான துன்பமும் முதுமையில் நல்ல யோகமும் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் பெறக்கூடிய யோகம் இருக்கும். ஜோதிடத்தில் இந்த நபர்களுக்கு ஆர்வம் அதிகம் உண்டாகும்.
4 ஆம் வீடு:
சனிபகவான் நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுது தந்தையின் சொத்துக்களால் இவர்களுக்கு சில வருத்தம் உருவாகலாம். உறவினர்கள் இடையே இவர்களுக்கு அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும். முன்கோபக்காரராக இருப்பார்கள்.
5 ஆம் வீடு:
சனிபகவான் ஐந்தாம் வீட்டில் இருக்கும் பொழுது நோய் ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். இந்த ஐந்தாம் வீட்டில் இருக்கக்கூடிய சனிபகவான் மீது சுப கிரகங்களின் பார்வை பெற்றால் அந்த ஜாதகருக்கு நல்ல பலன் கிடைக்கக்கூடும்.
6 ஆம் வீடு:
ஆறாம் வீட்டில் சனிபகவான் இருக்கும் பொழுது இவர்களுக்கு வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது சில விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த ஆறாம் வீடு என்பது துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய வீட்டில் அமைந்திருந்தால் நல்ல யோகத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
7 ஆம் வீடு:
ஏழாம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருக்கும் பொழுது திருமணத்திற்கு பிறகு இவர்கள் கணவன் மற்றும் மனைவி ரீதியாக சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். சிலருக்கு குடும்பத்தை பிரிந்து வாழக்கூடிய யோகமும் உண்டாகும். ஏழாம் இடத்தை சுப கிரகங்கள் பார்த்தால் நன்மை உண்டாகும்.
8 ஆம் வீடு:
எட்டாம் வீட்டில் சனிபகவான் இருக்கும் பொழுது நீண்ட ஆயுள் கொண்டவராக இருப்பார். தொழில் காரணமாக குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாத நிலை உருவாகலாம். அடிக்கடி எதிர்பாராத மனக்கவலைகள் உருவாகும்.
9 ஆம் வீடு:
சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுது ஜோதிடத்தை படிக்கும் ஆர்வம் உடையவராக இருப்பார். இந்த ஒன்பதாம் வீடு துலாம், தனுசு, மகரம், கும்பம் மீனமாக இருந்து அதில் சனி அமர்ந்திருந்தால் மிகச் சிறந்த நற்பலனை கொடுக்கக் கூடியவராக இருப்பார்.
10 ஆம் வீடு:
சனிபகவான் பத்தாம் வீட்டில் இருக்கும் பொழுது ஒரு கூட்டத்திற்கு தலைவராக இருப்பார். ஊரை விட்டு வெளியூரில் வாழக்கூடிய நிலை உருவாகும். திருமண பந்தத்தில் ஒரு சில சிக்கல்களை சந்திக்க கூடும்.
11 ஆம் வீடு:
சனிபகவான் 11ஆம் வீட்டில் இருக்கும்பொழுது மிகுந்த ஞானம் கொண்டவராக இருப்பார். நிறைய சொத்துக்கள் இவர்களுக்கு சேரும். மனைவி குடும்பத்துடன் மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
12 ஆம் வீடு:
சனிபகவான் 12 ஆம் வீட்டில் இருக்கும் பொழுது உறவினர்களே இவர்களுக்கு சமயத்தில் எதிரியாக மாறக்கூடிய நிலை உண்டாகும். பணம் சம்பாதிப்பதில் இவர்கள் குறிக்கோளாக இருப்பார்கள். இவர்களுடைய கண்டிப்பான முறையே இவர்களுக்கு எதிரிகளை உருவாக்கி விடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |