திருமண தடை நீக்கும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில்
சென்னையில் வைசியர் பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் வியாசர்பாடி என்று பெயர் மாறிய பகுதியில் காணப்படும் மிகப் பழைய கோவில் சூரிய சேத்திரமான ரவீஸ்வரர் கோவில் ஆகும். இங்கே உள்ள சிவலிங்கத்தின் மீது தினமும் சூரிய ஒளி பட்டதால் ரவி வழிபடும் ஈஸ்வரர் என்ற பொருளில் இக்கோவிலை ரவீஸ்வரர் கோவில் என்று அழைக்கின்றனர். தற்காலத்தில் கோவிலைச் சுற்றி வீடுகள் நிறைய கட்டப்பட்டதனால் சமீப காலங்களில் சூரிய ஒளி சாமி மீது படுவது கிடையாது.
தீர்த்தங்கள்
வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில் உள்ள தீர்த்தத்தின் பெயர் பிரம்ம தீர்த்தம் அல்லது சூரிய தீர்த்தம் ஆகும். சூரிய பகவான் தனக்கு ஏற்பட்டிருந்த பிரம்மதோஷத்தில் இருந்து விமோசனம் பெற இங்கு வந்து சிவபெருமானை வணங்கினார். இத் திருத்தலத்தில் அவர் நீராடிய குளம் சூரிய தீர்த்தம் அல்லது பிரம்ம தீர்த்தம் ஆகும்.
பாஸ்கர க்ஷேத்திரம்
வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் தென்குடி திட்டை சிவன் கோயில், வெள்ளலூர் சிவன் கோயில், திருவிசைநல்லூர் சிவன் கோயில் போல் தமிழகத்தில் உள்ள சூரிய ஷேத்திரங்களுள் ஒன்றாகும். சூரிய ஒளி சிவபெருமான் மீது நேரடியாக விழாமல் கருவறைக்கு எதிரே உள்ள சுவரின் சிவலிங்க வடிவத் துளையின் வழியாக சிவலிங்கத்தின் மீது ஆண்டின் அனைத்து நாட்களிலும் வந்து விழுந்தது.
தற்போது கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் அதிகமாகி விட்டதால் அந்த வீடுகள் சூரிய ஒளி கோவிலுக்கு வருவதை மறைத்து விட்டன என்கின்றனர். இத்தலம் சூரிய சேத்திரம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்கு வந்து பலரும் வழிபட்டு செல்கின்றனர்
தலவிருட்சம்
வியாசர்பாடி ரவீஸ்வரன் கோவிலின் பழைய தல விருட்சம் நாகலிங்க மரமாகும். இத்தலம் நாகர் வழிபாட்டுக்குரிய தலமாக ஆதியில் இருந்தது. பின்பு சிவத்தலமாக மாறியதும் வில்வமரம் தலவிருட்சமாக சேர்க்கப்பட்டது. அத்துடன் வன்னி மரமும் இப்போது தலவிருட்சமாக வழங்குகின்றது.
கோவில் அமைப்பு
வியாசர்பாடி ரவீஸ்வரன் கோவிலின்
கருவறை நாதர் ரவீஸ்வரர் ஆவார். இக் கருவறைக்கு மேல் உள்ள இந்திர விமானம் கூடு போல அமைந்துள்ளதைப் பார்க்கலாம். ரவிஸ்வரன் கிழக்கு நோக்கி உள்ளார். கருவறையின் வாசலில் சுவர் எழுப்பப்பட்டு இருப்பதால் தென்பக்கமாக வந்து தான் கருவறைநாதரை தரிசிக்க லாம் தரிசிக்க முடியும்.
திரு சுற்றுத் தெய்வங்கள்
வியாசர்பாடி ரவீஸ்வரன்
கோவிலுக்குள் சுற்றி சைவக் கோவில் மரபுப்படி நடராஜர், பைரவர் ஆகியோர் தனிச் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கிருக்கும் விநாயகர் சுந்தர விநாயகர் எனப்படுகின்றார்.
முருகன் வள்ளி தெய்வானையோடு தனி சன்னதியில் காட்சியளிக்கின்றார். பிற்காலத்தில் ஐயப்பனுக்கு தனி சன்னதிகட்டப்பட்டுள்ளது. தமிழ் சைவ மரபில் சிவன் கோயிலுக்குள் ஐயப்பனுக்கு சந்நிதி கிடையாது. இங்கு நவகிரக சன்னதியும் காணப்படுகின்றது.
வியாச ரிஷிக்கு சிலை
ரவீஸ்வரர் கோவிலில் ஒரு ரிஷியின் சிலை உள்ளது. இந்த ரிஷியை வியாசர் என்று கூறும் புராணக்கதை ஒன்று வழங்குகின்றது. இவருக்கு பவுர்ணமி நாட்களில் வில்வமாலை அணிவித்துச் சிறப்பு பூஜை செய்யப்படுகின்றது.
இவர் புலித்தோல் மீது பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது கையில் சின்முத்திரை காட்டியும் இடது கையில் ஏட்டுச்சுவடியும் வைத்திருக்கின்றார். இவரது உருவம் பிரம்மனை ஒத்துள்ளது. இங்குள்ள பிரம்ம தீர்த்தமும் இக்கருத்துக்கு அரண் சேர்க்கின்றது.
கதை ஒன்று
ரவிச்வரன் பெயர்க் காரணம்
ரவீஸ்வரர் கோவிலுக்கு பக்தி இயக்க காலத்தில் எழுதப்பட்ட ஸ்தல புராணம் சூரிகன் வழிபட்ட தலம் என்பதற்கு ஒரு காரணக் கதையை விவரிக்கிறது.
ஒரு முறை சூரியனின் வெப்பத்தை தாள இயலாது அவனது மனைவி சமிஞ்சசா தேவி தன்னுடைய சாயலாக ஒரு பெண்ணாக வடித்து சூரியனிடம் விட்டுவிட்டு அவள் தன் தந்தையின் வீட்டுக்குப் போய் விட்டாள். அவளது சாயல் சாயாதேவி எனப்பட்டது. இந்த உண்மையை அறிந்த சூரியன் தன் மனைவியைத் தேடி மாமனார் வீட்டுக்குப் போகும் வழியில் பிரம்மா ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார்.
அவரை கவனிக்காத சூரியன் தன் போக்குக்குப் போய்க் கொண்டிருந்தார். சூரியன் தன்னை வணங்கி செல்லாமல் போவதை கண்ட பிரம்மன் சூரியனைச் சபித்து பூலோகத்தில் போய் பிறக்கும்படி ஆணையிட்டார். (தேவலோகத்தில் இருப்பவர்களுக்கு பூலோகம் ஒரு தண்டனைச் சிறைச்சாலையாகும்) சாபம் பெற்ற சூரியன் நாரதரிடம் போய் தன் சாபம் தீர வழி கேட்டான்
அதற்கு நாரதர் வைசியர் பாடியில் வன்னி மரத்தடியில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வார என்றார். சூரிய பகவானும் பூமிக்கு வந்து ஒரு தீர்த்த குளம் அமைத்து தினமும் அதில் குளித்து வன்னி மரத்தடியில் ஒரு லிங்கத்தை வைத்து வழிபட்டு வந்தான்.
சூரியனின் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவனுக்குக் காட்சி அளித்து அவனை மீண்டும் சூரியலோகம் செல்லும்படி ஆணையிட்டார். சூரியன் வழிபட்ட ஈஸ்வரன் என்பதால் இத்தலத்தின் கருவறை நாதர் ரவீஸ்வரன் என்று இன்றும் அழைக்கப்படுகின்றார்.
கதை இரண்டு
முனைகாத்த பெருமாள் கதை
வியாசர் சன்னதிக்கு அருகில் முனை காத்த பெருமாள் சன்னதி உள்ளது. இதற்கு ஒரு காரணக் கதை உண்டு. வியாசர் மகா பாரதக்கதையை விநாயகரிடம் சொல்லிக் கொண்டு வந்த போது விநாயகர் தனது தந்தத்தை உடைத்து அதை எழுதுகோலாகக் கொண்டு எழுதினார்.
அவருடைய தந்தம் கூர்மழுங்கிப் போகாமல் இருக்க இந்தப் பெருமாள் தந்தத்தின் கூர்மையைக் காத்து அருளினார். எனவே இவர் முனைகாத்த பெருமாள் என அழைக்கப்பட்டார்.
கதை மூன்று
மரகதாம்பிகை பிறப்பு
ஒரு காலத்தில் இப்பகுதியில் வீச்சாவரன் என்ற ஒரு மன்னன் அரசாட்சி செய்து வந்தான். அவனுக்குக் குழந்தை இல்லை என்ற கவலை மனதை அரித்தது. தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று அம்பிகையிடம் தாயே நீயே வந்து எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும், என்று வேண்டிக் கொண்டு வந்தான்.
ஒருநாள் மன்னன் அரண்மனை நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது மகிழ மரத்தடியில் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. அருகே சென்றபோது ஒரு பெண் குழந்தை அங்கு அழுது கொண்டிருந்தது. அம்பாளே தனக்கு மகளாக அங்கு அவதரித்து இருக்கின்றாள் என்ற நம்பிய மன்னன் அக்குழந்தைக்கு மரகதாம்பிகை என்று பெயர் சூட்டி வளர்த்தான்.
அவளுக்குத் தக்க பருவம் வந்ததும் சிவபெருமானே வந்து அவளை ஆட்கொண்டார். அம்பிகை சிவன் திருமணம் இக்கோவிலில் ஆனி மாதம் பிரம்மோற்சவத்தில் நடைபெறுகின்றது.
திருமணத் தடை நீக்கும் ஸ்தலம்
ரவிச்வரன் மரகதாம்பிகை திருமணம் நடைபெற்ற தலம் என்பதால் இங்குப் பெண்கள் வந்து அம்பிகையை வேண்டிக் கொண்டால் அவர்களின் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். மகிழ்ச்சியான மண வாழ்க்கை கிடைக்கும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |