காலத்திடமிருந்து யாரும் தப்பவே முடியாது.. சீதை சொல்லும் ரகசியம்
மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் துன்பமே இல்லாத ஒரு நிலையே வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறார்கள். ஆனால் துன்பமில்லாமல் ஒரு மனிதனுக்கு இன்பம் இல்லை என்ற ஒரு ரகசியம் புரிவதில்லை. சிலர் தாங்க முடியாத துன்பம் எனக்கு மட்டுமே என்று தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் துணிந்து விடுகிறார்கள்.
அப்படியாக மனிதர்கள் சந்திக்கக்கூடிய இந்த கஷ்டத்தை குறித்து வால்மீகி முனிவர் ராமாயணத்தில் ஒரு சில கருத்துக்கள் கூறுகிறார். அதை பற்றி பார்ப்போம்.
சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் சீதை ஸ்ரீ ராமரை பிரிந்து இருக்கின்ற துன்பத்தையும் அவர் அந்த காலகட்டத்தில் சந்தித்து வந்த அவமானத்தையும் தாங்க முடியாமல் சீதையும் ஒரு காலகட்டத்தில் அவருடைய உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்து இருக்கிறார்.

அப்பொழுது மரத்தில் மறைந்திருந்த அனுமார் ஸ்ரீ ராமர் கதைகளை சொல்லி அவருடைய உயிரை காப்பாற்றி இருக்கிறார். அப்போது "கல்யாணி பத" என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தை சீதை சொல்கிறாள்.
அதாவது ஒருவர் தன்னுடைய கடமைகளை செய்து உயிர் வாழ்ந்து கொண்டிருந்தால் என்றாவது ஒருநாள் அதாவது நூறு வருடங்கள் கடந்து நாளும் அவர்களுக்கு உரிய சந்தோஷம் என்பது அவர்கள் அனுபவித்து ஆக வேண்டும் என்ற லோக வார்த்தை என் விஷயத்தில் சரியாக போனது என்கிறார் சீதை.
பிறகு இதே ஸ்லோகத்தை வால்மீகி இரண்டாவது முறையாக யுத்த காண்டத்திலும் ஒரு வார்த்தை கூட மாறாமல் அப்படியே சொல்லுகிறார். அதாவது ஒருவர் தன்னுடைய துன்பம் என்பது நிலையானது, அதிலிருந்து என்னால் விடுபடவே முடியாது என்ற ஒரு நிலையில் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய அந்த நிலையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தவே இவர் இரண்டாவது முறையாக எழுதி இருக்கிறார்.
அப்படியாக இந்த ஸ்லோகம் சொல்லக்கூடிய கருத்து என்பது மிகவும் முக்கியமானது. பிறந்த எல்லா மனிதர்களுக்கு துன்பம் என்பது சமமானது. அதாவது எல்லாரும் ஒவ்வொரு காலகட்டங்களில் அவர்களுக்கு உரிய துன்பத்தை அவர்கள் அனுபவித்தாக வேண்டும். வெளியே இருந்து பார்க்கும் பொழுது அவர்களுடைய துன்பம் நமக்கு சிறியதாக தெரியலாம்.
நம்முடைய துன்பம் அவர்களுக்கு சிறியதாக தெரியலாம். ஆக வெளி பார்வை என்பது அவரவர் மனநிலைக்கு ஏற்ப என்பதை தாண்டி துன்பம் என்பது எல்லோருக்கும் சமமானது மற்றும் கடந்து செல்லக்கூடியது.

அதை மனதில் வைத்துக் கொண்டு தாங்க முடியாது என்று தற்கொலை செய்து விடக் கூடாது. நிச்சயம் ஒரு நாள் எல்லாருக்கும் காலம் கடந்தாவது அவர்களுக்கான பதிலும் அவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடும் பொறுமையோடும் துன்பத்தை சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் வால்மீகி மகரிஷி அவர்கள் இதை நமக்கு வலியுறுத்தும் வகையில் சொல்லுகிறார். பிறகு யுத்த காண்டத்தில் மறுபடியும் இந்த ஸ்லோகம் வருகிறது.
அதாவது ஸ்ரீ ராமர் 14 ஆண்டு காலம் வனவாசம் முடிந்தும் கூட இன்னும் அயோத்தி திரும்பவில்லையே என்று பரதன் துன்பம் தாங்க முடியாமல் தீயில் குதிக்க செல்கிறார். எவ்வாறு அசோகவனத்தில் சீதை இவ்வாறு முடிவை எடுக்க துணியும் பொழுது அனுமன் சென்று காப்பாற்றினாரோ அதேபோல் இங்கேயும் பரதனை நல்ல செய்தி சொல்லி காப்பாற்றுகிறார்.
பிறகு வால்மீகி சொன்ன அந்த ஸ்லோகத்தை வார்த்தைக்கு வார்த்தை மாறுபடாமல் சொல்லி சந்தோஷப்படுகிறார்கள். ஆக, புராணங்கள் எல்லாமே நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கக் கூடிய ஒரு அற்புதமான வழிகாட்டுதலாகவே இருக்கிறது.
அது வெறும் கதையாக ஒரு உணர்வாக மற்றும் பார்த்து அதனுடன் ஒரு இணைப்பு கொள்ளாமல் அதை நம் வாழ்க்கையில் எவ்வாறு செயல்முறைக்கு கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து வாழ்வதே அது படித்ததற்கான முழு பலனை பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |