2025 விநாயகர் சதுர்த்தி எப்போது? இந்த வருடம் இத்தனை சிறப்புகளுடன் வருகின்றதா?
நம் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய தடைகள் விலக வேண்டும் என்றால் நாம் சரணடைய வேண்டிய தெய்வம் விநாயகப்பெருமான். அதேபோல் நாம் செய்யும் காரியத்தில் எந்த ஒரு தடைகளும் வராமல் அது முழுமையாக நிறைவடைந்து வெற்றியைப் பெற்று மகிழ்ச்சியை தர வேண்டும் என்றாலும் நம் சரணடைய வேண்டிய தெய்வம் விநாயகப்பெருமான் தான் .
பலருக்கும் விநாயகப் பெருமான் இஷ்ட தெய்வமாக இருப்பதை நான் காணலாம். அப்படியாக விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு எல்லா நாளும் உகந்த நாள் என்றாலும் அவருக்குரிய நாளில் வழிபாடு செய்வது மிகச்சிறந்த பலன் அளிக்கும்.
அந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தி. இந்த விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளை பயன்படுத்தி நம் விநாயகப்பெருமானை முறையாக வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையிலும் ஜாதகத்திலும் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.
முழு முதற்கடவுளான விநாயகர் பெருமான் அவதரித்த தினத்தையே விநாயக சதுர்த்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகின்றோம். விநாயகப் பெருமான் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்தார் என்று புராணங்கள் சொல்லுகின்றது.
மேலும், சில பக்தர்கள் ஒவ்வொரு மாதம் வரக்கூடிய சதுர்த்தி தினத்தில் விநாயகப் பெருமானை மனதில் நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வதும் வழக்கம். அப்படியாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது.
அதாவது ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 2.22 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 27 ஆம் தேதி மாலை 3.52 மணி வரை சதுர்த்தி திதி உள்ளது. அதோடு கூடுதல் சிறப்பாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று காலை அஸ்தம் நட்சத்திரம் பிறகு சித்திரை நட்சத்திரம் வருகிறது.
இந்த இரண்டு நட்சத்திரங்களும் புதன் பகவானுக்கு உரிய கன்னி ராசிகளில் வரக்கூடிய நட்சத்திரமாகும். புதன் பகவான் கல்விக்கு அதிபதி. அதுமட்டுமல்லாமல் அஸ்தம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் காயத்ரி தேவி, சித்திரை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் சக்கரத்தாழ்வார். இந்த இரண்டு தெய்வங்களும் வாழ்க்கையில் சந்திக்க கூடிய தடைகளை போக்கி வெற்றியை தருபவர்கள்.
இந்த இரண்டு தெய்வங்களுக்கு உரிய நாளில் விநாயகர் சதுர்த்தி வருவது இன்னும் கூடுதல் சிறப்பாக அமைகிறது. பொதுவாகவே, விநாயகப்பெருமான் ஞான கடவுளாக போற்றி வழிபாடு செய்யப்படுகிறார். இவரை வழிபட ஒருவருக்கு ஞானமும் கல்வியும் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.
ஆக இவ்வளவு சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வைத்து, அவருக்கு விருப்பமான கொழுக்கட்டை, மோதகம் போன்ற உணவுகளை நெய்வேத்தியம் செய்து விநாயகப் பெருமானுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்வதால் நம்முடைய வீடுகளில் உள்ள தடைகள் யாவும் விலகி வெற்றி நம்மை வந்து சேரும்.
மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அருகம்புல், எருக்கம்பூ மாலை சாற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உள்ள எப்பேர்பட்ட துன்பமும் விலகி நன்மை நடப்பதை காணலாம்.
மேற்கண்ட நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஒரு வாழைப்பழத்தை வாங்கி வைத்து "ஓம் கம் கணபதயே நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபாடு செய்து விநாயகப் பெருமானின் அருளை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







