மகாபாரதம்: யார் இந்த சகுனி? உண்மையில் இவர் நல்லவரா? கெட்டவரா?
மகாபாரதம் மக்கள் போற்றும் மிக சிறந்த காவியம் ஆகும். வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களையும் மகாபாரதம் என்னும் பெருங்காவியத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படியாக மகாபாரத கதாபாத்திரத்தில் சகுனி என்னும் பெயர் பல திருப்பங்களை செய்து இருக்கிறது.
அப்படியாக, யார் அந்த சகுனி என்று பார்ப்போம். காந்தார மன்னன் சுபலனின் கடைசி மகன் சகுனி. அவனது தாய் சுதர்மா. சகுனியின் அக்கா தான் துரியோதனின் தாய் காந்தாரி ஆவாள். மேலும், காந்தாரியின் முதல் கணவனுக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பதால், ஜோதிட பரிகாரங்கள் படி காந்தாரியை ஒரு ஆட்டுக்குட்டிக்கு முதலில் திருமணம் முடித்து, பிறகு அந்த ஆட்டை பலியிட்டார்கள்.
கணக்குக்குப்படி காந்தாரி தற்பொழுது விதவை. பின் சுபலனின் உத்தரவின் பெயரில் ஆட்டுக்கிடாய் விவாகாரம் மறைக்கப்பட்டு திருதராஷ்டிரரை மறுமணம் முடிக்கிறார் காந்தாரி. அதோடு, காந்தாரியின் தம்பியான சகுனி அர்ஷியை மணந்து, உலுகன், விருகாசுரன், பட்டத்ரி, மற்றும் விருப்ரசித்தி ஆகிய நான்கு குழந்தைகளைப் பெற்றான்.
சிறிது காலம் கடக்க, பீஷ்மருக்கு இந்த செய்தி தெரிய வருகிறது. கடும் சினம் கொள்கிறார். காந்தாரி ஒரு விதவையா? ஒரு விதவை பெண் என் வீட்டு மருமகளா? உலகத்திற்கு தெரிந்தால் என்ன பேசுவார்கள் என்று கோபம் அடைகிறார்.
அதோடு பீஷ்மர் விட்டு விடாமல், காந்தாரியின் திருமண ரகசியம் வெளியே வராமல் இருக்க, சுபலன் மற்றும் சகுனி சகோதரர் நூற்றுக்கும் மேற்பட்டோர்களை பீஷ்மர் பிடித்துச் சிறையில் அடைக்கிறார். மேலும், பீஷ்மர் ஒரு குடும்பத்தையே மொத்தமாக கொல்வது என்பது தர்மம் ஆகாது என்று எண்ணி அவர்களுக்கு தினமும் ஒரு கைபிடி அரிசி மட்டும் உண்ணக்கொடுத்து வர நாட்கள் கடந்து நிலைமை மோசமானது.
சகோதரர்களுக்குள் உணவுக்காக சண்டை வந்தது. அந்த வேளையில் சுபலன் ஒரு யோசனை சொல்கிறார். நம்மில் ஒரு சிறந்த புத்திசாலி ஒருவன் மட்டும் பீஷ்மர் கொடுக்கும் உணவை உண்டு பிழைத்து அவர் செய்யும் இந்த அநியாயத்தைச் தட்டி கேட்டு பழிவாங்கட்டும் என்று யோசனை சொல்கிறார்.
இந்த யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர். அதோடு வயதில் இளையவனான சகுனிதான் உணவை சாப்பிட தேர்ந்தெடுக்கப்பட்டான். பீஷ்மர் கொடுக்கும் உணவை சகுனி மட்டும் எடுத்து கொள்ள, அவன் கண் முன்னே அவன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மாய்ந்து போகின்றனர்.
பிறகு சகுனியின் தந்தை இறப்பை நெருங்கும் நேரம், சகுனி அவனின் தந்தையை பார்த்து, என்னை அரவணைத்து கண்ணீர் துடைத்து, வால் வீசி போராட கற்று கொடுத்த என் உலகத்தின் கைகள் இது. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே என்று இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.
கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்து, சுபலன் சொல்கிறார், மகனே! சகுனி, எவ்வளவு அழகான குடும்பம் நம்முடையது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள்.
அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்து விடுவேன். ஆனால் நீ வாழ வேண்டும் மகனே. நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கின்றோம்.
நம் குடும்பத்தின் ஒவ்வொருவரின் இறப்பை பார்த்த நீ, நாளை பீஷ்மர் குலத்தில் ஒவ்வொருவராய் இறப்பதை நீ பார்த்து மகிழ வேண்டும் என்றார். அதற்கு சகுனி ஆனால், அத்தனை பலம் என்னிடம் இல்லையே தந்தை என்றான். சுபலன் சொல்கின்றான், மகனே பலம் என்பது ஒருபொழுதும் உடல் வலிமை சார்ந்தது அல்ல.
மன வலிமையை பொறுத்தது. அதை உன் புத்தி கூர்மையால் பயன் படுத்து என்றார். உன்னுடைய புத்திசாலியான திட்டங்களால் எதிரிகளை தகர்க்கமுயற்சிசெய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே என்று ஆலோசனை கொடுக்கிறார். வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. நல்லதோர் சந்தர்ப்பத்திற்கு காத்திரு.
குழப்பங்களை உண்டாக்கி நிர்மூலமாக்கு உன் எதிரிகளை என்றார். அது மட்டும் அல்லாமல், இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும். வெட்டிய உன் தந்தையின் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும்.
அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை என்றார் சுபலன். எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்றான் சுபலன்.
நாங்கள் இறந்து உன்னை உயிர்ப்பித்து இருக்கின்றோம் சகுனி. உன்னை உயிர்பித்தது அந்த பீஷ்மரின் குலத்தையே அழிக்க என்றார். எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல் வெறுப்பு பழி, வெஞ்சினம்,இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள் என்றான் சுபலன்.
இதை சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே சுபலனின் உயிர் பிரிந்து போவதை உணர்கின்றான். அந்த சமயத்தில் சுபலன் தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்து, தன் வாளினை எடுத்தான். பிறகு, சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான்.
வலி தாளாமல் அலறினான் சகுனி. அதிர்ச்சியில் உறைந்த சகுனி, என்ன தந்தையே இது? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள? வாழ்நாள் முழுவதும் என்னை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து என்னை அனைவரும் ஏளனம் செய்வார்களே? ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.
அதற்கு சுபலன் மகனே!என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். அந்த பார்வை தான் மற்றவர்கள் மேல் உனக்கு கோபத்தையும் வெறுப்பையும் கொடுக்கும்.
அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உனக்கு அன்பு உண்டாகாது. பிறர் உன்னை அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல.
அவர் காக்க நினைத்த இந்த குலம்தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு சத்தியம் செய் என்றார் சுபலன். இவ்வாறு பேசி கொண்டு இருக்கும் பொழுதே சுபலின் உயிர் பிரிந்தது.
சகுனி தன் தந்தையின் முகம் பிடித்து அலறிய சத்தம் பீஷ்மரின் காதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் பீஷ்மரின் குலத்தையே அழிக்க காத்திருக்கும் சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |