ஆன்மீகம் நமக்கு கொடுக்கக்கூடிய முக்கியமான சவால் என்ன தெரியுமா?
ஆன்மீகம் என்பது இறைவனை நாடிச் செல்வதை கடந்து நம்மை நாம் தேடி செல்கின்ற ஒரு நிலையாகும். அப்படியாக முழுமையான ஆன்மீகமும், நிறைவான பக்தியும் ஒருவர் கடைபிடிப்பது மிகவும் கடினமான சவாலாகும்.
அந்த சவால்களை எந்த ஒரு அச்சமும் தயக்கமும் இல்லாமல் எவர் கடந்து செல்கிறார்களோ, அவர்களே இறைவனுக்கு நெருங்கியவர்கள் ஆகிறார்கள். அப்படியாக ஆன்மீகம் நமக்கு கொடுக்கக்கூடிய முக்கியமான சவால்கள் என்னவென்று பார்ப்போம்.
இந்த உலகத்தில் புரிதல் என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் நாம் எதை புரிந்து கொண்டிருக்கின்றோமோ அதை நாம் செயல் முறையில் கொண்டு வருவது தான் நமக்கு உரிய சவால். உதாரணமாக பகவத் கீதை அல்லது எந்த ஒரு ஆன்மீக தொடர்பான புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் நமக்கு போதிக்கக்கூடிய ஒரு முக்கியமான ஒன்று பற்றின்மை.

இந்த பற்றின்மையை நாம் புத்தகத்தில் படிக்கும் பொழுது அல்லது ஒருவர் சொல்லி கேட்கும் பொழுது மிகவும் எளிதாக தெரியும். அதாவது நடைமுறை வாழ்க்கையில் ஒரு நிகழ்வை சந்திக்காத வரை தான் எல்லாம் எளிமையாக இருக்கும்.
ஆனால் நிஜத்தில் ஒரு உண்மையான நிகழ்வுகளோடு போராட வேண்டிய நிலை வரும் பொழுது தான் நாம் நம்மை அறிவோம், நம்முடைய உண்மை நிலையை புரியும். அப்படியாக நம்முடைய வளர்ப்பும் நம்முடைய இயல்பும் ஒரு பற்றுதல் மீதே இருந்தே தொடங்குகிறது.
அந்தப் பற்றுதல்களை நாம் அவ்வளவு சாதாரணமாக விட்டு விட முடிவதில்லை. ஒரு விஷயத்தை இழக்கின்றோம் என்றால் பல வருடங்கள் கடந்து காலத்தினாலே அந்த காயங்கள் ஆறுகின்றதே தவிர்த்து, நிகழ் காலத்தில் கஷ்டம் வருகின்ற பொழுது நம்மால் அதை தைரியமாக அணுகுகின்ற பக்குவம் நமக்கு கிடைப்பது இல்லை.

இதுதான் ஆன்மீகம் நமக்கு கொடுக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆக, புத்தகத்தில் படிப்பதாலோ , செவி வழியை கேட்கக்கூடிய செய்திகளினாலோ நாம் ஆன்மீகத்தை புரிந்து கொள்ளமட்டுமே முடியும்.
படித்ததை செயல்முறைக்கு கொண்டு வரும் பொழுது தான் இறைவனோடு ஐக்கியம் ஆக உண்மையான பக்திக்குள் செல்கின்றோம். இதற்கு சிறந்த ஒழுக்கமான வாழ்க்கை முறை அவசியம். ஞானத்தை தேடி செல்வது முக்கியம். ஆதலால் பக்தியை நாம் முதலில் பற்றின்மையில் இருந்து தொடங்கினால் வாழ்க்கை எளிதானதாகவும், புதிதானதாகவும், தெளிவானதாகவும் மாறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |