பெருமாள் கோவிலில் நவகிரக சன்னதி இல்லை.. ஏன் தெரியுமா?
சிவன் கோவில்கள் மற்றும் பிற ஆலயங்களில் நவகிரக சன்னதிகளை நாம் காண முடியும். ஆனால் பெருமாள் ஆலயங்களில் நவகிரக சன்னதியை நாம் காண முடியாது. இதற்கு காரணம் என்னவென்று பலருக்கும் தெரிவது இல்லை.
ஒரு சில பெருமாள் கோவிலில் நவகிரக சன்னதி இல்லை என்பதே அறியாத நிலையிலும் சிலர் இருப்பார்கள். ஆக எதற்காக பெருமாள் ஆலயங்களில் மட்டும் நவகிரக சன்னதிகள் இல்லை என்று விரிவாக பார்ப்போம்.
கலியுக வரதன் பகவான் கிருஷ்ணர் வாமன அவதாரத்தில் மூன்று அடிகளால் பூலோகம், வானுலகம், பாதாள உலகம் மட்டுமல்ல அண்ட சராசரங்களையும் அளந்தார். இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்களும் காலமும் கர்மமும் எல்லாம் பெருமாளுக்குள் அடங்கியதே ஆகும் என்று நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
அதன் அடிப்படையில் தான் வைணவ மரபில் பெருமாளை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட முழு பலன் நமக்கு கிடைக்கும் என்று காலம் காலமாக நம்பக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. வைணவர்கள் பொறுத்தவரை இந்த உலகத்தில் இருக்கின்ற ஒரே இறைவன் என்றால் அது பகவான் கிருஷ்ணராகவே இருக்கிறார். அதனால்தான் பெருமாளுடைய அவதாரங்களே நவகிரக சக்திகளாக விளங்குகின்றன.

1. ராமாவதாரம் - சூரியன்
2. கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
3. நரசிம்மாவதாரம் - செவ்வாய்
4. கல்கி அவதாரம் - புதன்
5. வாமனாவதாரம் - குரு
6. பரசுராமாவதாரம் - சுக்ரன்
7. கூர்மாவதாரம் - சனி
8. வராக அவதாரம் - ராகு
9. மச்சாவதாரம் - கேது
இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது நவகிரகங்கள் பெருமாளை ஆட்சி செய்யவில்லை. பெருமாள் தான் லோகத்தில் இருக்கக்கூடிய எல்லா கிரகங்களையும் எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறார்.

நவதிருப்பதிகளும் நவகிரகத் தலங்களும் :
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகள், நவகிரக தலங்களாகவே போற்றப்படுகின்றன:
1. ஸ்ரீவைகுண்டம் - சூரியன்
2. வரகுணமங்கை - சந்திரன்
3. திருக்கோளூர் - செவ்வாய்
4. திருப்புளியங்குடி - புதன்
5. ஆழ்வார்திருநகரி - குரு
6. தென்திருப்பேரை - சுக்ரன்
7. பெருங்குளம் - சனி
8. இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) — ராகு
9. இரட்டை திருப்பதி (அரவிந்த லோசனர்) — கேது
இதன் வழியாக பெருமாளே எல்லாம் என்று நமக்கு உணர்த்துகிறது. இதனால் தான் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் பெருமாளை மனதார வேண்டி வழிபாடு செய்தாலும் அவர்களுக்கு பாவங்கள் அனைத்தும் விலகி மோட்சம் மற்றும் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |