ஐயப்ப பக்தர்கள் கருப்பு ஆடை அணிவதற்கான காரணம் என்ன தெரியுமா?
ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கருப்பு ஆடை அணிந்து கொள்வதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.
ஒரு சமயம் சனீஸ்வர பகவான் ஐயப்ப பக்தர் ஒருவரைப் பிடிப்பதற்காகச் சென்றபோது, அவரை தடுத்து நிறுத்திய ஐயப்பன், "எனது பக்தர்களை ஏன் தண்டிக்கிறீர்கள்? அவர்களுக்குக் கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா?" என்று கேட்டார்.
அதற்கு சனீஸ்வரர், "எனக்கு ஏழை, பணக்காரர், கடவுள் பக்தி உள்ளவர், இல்லாதவர் என்ற பாகுபாடு கிடையாது. ஏழரைச் சனியின் காலம் வரும் நேரத்தில் பாரபட்சம் இல்லாமல் அவர்களைப் பிடிப்பேன். அதுதான் என்னுடைய தர்மம்" என்றார் சனி பகவான்.
மேலும், "பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் எப்படி தங்களுடைய படைத்தல், காத்தல், அழித்தல் என அவரவர் தொழிலை செய்கின்றார்களோ, அதேபோல் என்னுடைய வேலையை உரிய நேரத்தில் சரியாகச் செய்கிறேன். அது போலவே மானிடர்கள் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களை தண்டிக்கிறேன். அந்த வேலையை நான் ஒழுங்காக செய்யாவிட்டால் தர்மம் எப்படி வாழும்" என்றும் சனீஸ்வரர் கேட்டார்.
சனீஸ்வரரின் பதிலில் திருப்தியடைந்த ஐயப்பன், "சரி, இனிமேல் நீ தரும் தண்டனைகளை என்னிடம் சொல். அந்த தண்டனைகளை ஒரு மண்டல காலத்திலேயே அனுபவிக்குமாறு என்னுடைய பக்தர்களுக்கு விரதம் முறைகளாக நான் வகுத்துத் தருகிறேன்" என்றார் ஐயப்பன்.
"நான் கொடுக்கும் கஷ்டங்களை, தண்டனைகளை ஒரு மண்டல காலத்திலேயே எப்படி கொடுக்க முடியும்?" என்று கேட்டார் சனீஸ்வரர்.
அதற்கு புன்முறுவலுடன் பதில் அளித்த தர்ம சாஸ்தாவான ஐயப்ப சுவாமி, "கவலைப்படாதீர்கள், நீங்கள் குறிப்பிட்ட அத்தனை தண்டனைகளையும் அளிப்பேன். என்னுடைய பக்தர்கள் மண்டல விரத காலத்தில் மிகவும் எளிமையாக ஒரு வேளை உணவை உண்டு திருப்தி அடைவார்கள்.
வெறும் தரையிலேயே படுத்து உறங்குவார்கள். தாம்பத்தியத்தில் அறவே ஈடுபடாமல், கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடித்து, ஒரு மண்டல காலத்தில் எப்போதும் என்னுடைய நாமமான சுவாமியே சரணம் ஐயப்பா என்று சொல்லி காடு, மலைகளைக் கடந்து என்னை வந்து தரிசிப்பார்கள்" என்று சொன்னார்.
அதோடு, "உனக்குப் பிடித்த நிறம் கருப்பு ஆடைகளிலேயே எனது பக்தர்களை உடுத்தச் செய்து காலணிகளை அணிய விடாமல், முடி திருத்திக் கொள்ளாமல், என்னுடைய அணிகலனான துளசி மாலை அணிந்து சுக, துக்கங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கச் செய்து, அனைவராலும் சுவாமி என்று அழைக்கச் செய்வேன்.
அதிகாலையிலும் மாலை நேரத்திலும் குளிர்ந்த நீரில் எனது பக்தர்களை நீராடச் செய்வேன். எனது பக்தர்கள் அனைவருமே இந்த விரத முறைகளை சிரமேற்கொண்டு செய்து முடித்து என்னை வந்து தரிசிப்பார்கள். அவர்களை நீ உனது கொடூர பார்வையை செலுத்தாமல் மனம் கனிந்து கருணை மழை பொழிந்து அருள் ஆசி வழங்கி வர வேண்டும்" என்று கேட்டார் ஐயப்பன்.
ஐயப்பன் சொன்ன விரத முறைகளை பக்திப் பெருக்குடன் ஏற்றுக்கொண்ட சனீஸ்வர பகவான் அன்றிலிருந்து இன்று வரையிலும் ஐயப்ப பக்தர்களிடம் தன்னுடைய கொடூர பார்வையை செலுத்தாமல், நன்மைகளை மட்டுமே அளித்து வருகிறார்.
அதனாலேயே ஐயப்ப பக்தர்கள் சனீஸ்வரருக்கு உகந்த கருப்பு ஆடை அணிகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |