தமிழ்நாட்டில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர ஆலயம் எங்கிருக்கிறது தெரியுமா?
நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக சனி பகவான் இருக்கிறார். இவருக்கு இந்தியாவில் பல்வேறு இடங்களில் பல கோயில்கள் இருக்கின்றன. அப்படியாக விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் பிரபலமான சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு சனீஸ்வர பகவான் எங்கும் இல்லாத அளவு 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவானாக நமக்கு காட்சி கொடுக்கிறார். இக்கோயிலுக்கு செல்லும் முன் 80 அடி உயரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட மகா கும்ப கோபுரம் மற்றும் 54 அடி கொண்ட மகா கணபதியின் முதுகு பகுதியை தான் நாம் முதலில் தரிசிக்கிறோம்.
மேலும் கோயிலுக்குள் சனீஸ்வர பகவான் நான்கு கைகளுடன் நமக்கு காட்சி அளிக்கிறார். அதில் மேலே உள்ள கரங்களில் அம்பையும் வில்லையும் ஏந்தி நிற்கிறார். கீழே உள்ள கரங்கள் முத்திரைகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் சனீஸ்வரரின் வாகனம் காக்கை என கருதப்படுகிறது.
ஆனால் இங்கு காக்கையுடன் இல்லாமல் சனீஸ்வர பகவான் கழுகு வாகனத்துடன் சிலையில் காட்சி அளிக்கிறார். அதோடு 80 அடி உயரம் கொண்ட மகா கும்ப கோபுரத்தில், 8000 லிட்டர் எண்ணெய் ஊற்றப்பட்டு விளக்கு ஏற்றப்படுவது இக்கோயிலின் சிறப்புகள் ஆகும்.
இக்கோயிலுக்கு சனிபகவானால் பாதிக்கப்பட்டவர்கள் வருகை தந்து சனிபகவானை மனதார வழிபாடு செய்து அவர்களுடைய தோஷங்களை போக்கிக் கொள்வதாக நம்மப்படுகிறது. மேலும் இத்தலத்தில் உள்ள சனிபகவானை வழிபாடு செய்வதால் சனி பகவானால் நமக்கு ஏற்படக்கூடிய பல பிரச்சனைகள் நிவர்த்தியாகி நம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக திருமணத்தடை, வியாபார தடை, குடும்ப பிரச்சனைகள் போன்றவற்றால் மன நிம்மதியை இழந்தவர்கள் இங்கு உள்ள கோசாலையில் கோதானம் செய்தும் கோ பூஜை செய்தும் வழிபாடு செய்தால் அவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
வாய்ப்பு கிடைப்பவர்கள் கட்டாயம் ஒருமுறை 27 அடி உயரம் கொண்ட மகா சனீஸ்வர பகவானை வழிபாடு செய்து அவருடைய அருளை பெற்று வாருங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







