எமகண்ட நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜை
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது, திருச்சிற்றம்பலம் என்னும் கிராமம். இங்கு எமதர்ம ராஜாவிற்கு ஒரு ஆலயம் உள்ளது.
ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதாயுதத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்ம ராஜா.
அதாவது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தான், இப்பகுதி மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கி வருகிறார்.
இக்கோயிலில் ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில், இத்தல எமதர்மனுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த நேரத்தில் எமனை ஒரு நீதிபதியைப் போல்தான் பாவிக்க வேண்டும்.
திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை, எமதர்மனின் காலடியில் வைத்து வழிபடும் வழக்கம் நெடுங்காலமாக இருக்கிறது.
பணத்தை வாங்கிக்கொண்டு யாரேனும் ஏமாற்றி இருந்தால் அவர்களின் பெயரை ஒரு தாளில் எழுதி, அதைப் பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கமும் இங்கே உண்டு.இதற்குப் 'படி கட்டுதல்' என்று பெயர்.
படி கட்டிய சில நாட்களிலேயே பணம் பலருக்குத் திரும்ப கிடைத்து விடும். அதாவது ஒருவருக்கு வழக்கை பயம் எமபயத்தை போக்கிக்கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், திருமணத் தடை நீங்கவும் பலர் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
அது மட்டுமின்றி, நவக்கிரக தோஷம், பெண்பாவ தோஷம், நட்சத்திர தோஷம், ராசி அதிபதி தோஷம் போன்றவற்றிற்கும் பரிகார தெய்வமாக இவ்வாலயத்தில் அருளும் எமதர்மராஜா விளங்குகிறார். நாளுக்கு நாள் இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
வருடம்தோறும் ஆடி மாதத்தில் திருவிழாவும், மாசி மாதத்தில் மன்மதன் திருவிழாவும் நடக்கும். எமதர்ம மகாராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும் என்கிறார்கள்.
இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |