2025 பரணி தீபம் எப்பொழுது? இன்று இந்த நேரத்தில் விளக்கு ஏற்ற தவறாதீர்கள்
தமிழ் மாதம் 12 மாதங்களில் திருக்கார்த்திகை என்பது மிகவும் விசேஷமான திருநாளாக கொண்டாடப்படுகிறது. அப்படியாக திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் வரக்கூடிய பரணி நட்சத்திரத்தன்று ஏற்றப்படக்கூடிய தீபத்திற்கு பரணி தீபம் என்று பெயர்.
அதாவது நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் தெரிந்தும் தெரியாமலும் செய்து விடுகின்ற பாவங்கள் விலகுவதற்காக இந்த பரணி தீபம் ஏற்றி நாம் வழிபாடு செய்கின்றோம். அதோடு பரணி நட்சத்திரம் எமதர்மராஜாவிற்கு உரியதாகும்.
அதனால் பரணி நட்சத்திரம் வரும் நாளில் தீபம் ஏற்றி எமதர்மராஜாவை வழிபடுவதால் எமலோகத்தில் இருக்கக்கூடிய நம்முடைய முன்னோர்கள் துன்பம் நேராமல் இருப்பதாக நம்பிக்கை. மேலும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கக்கூடிய அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மட்டும் தான் திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படும். முதலில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றுவார்கள்.

அதற்குப் பிறகு மண்டபத்தில் 5 பெரிய அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவார்கள். இந்த ஐந்து தீபங்களும் சிவபெருமானின் ஐந்து தொழில்களை பஞ்சபூதத்தின் வடிவமாக அவர் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் ஏற்ற படுகிறது.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். ஆனால் வீடுகளில் திருக்கார்த்திகை தீபத்திற்கு முந்தைய நாள் மாலையில் நாம் பரணி தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த பரணி தீபம் வீடுகளில் ஏற்றுவதால் நம் முன் ஜென்மங்களில் செய்த பாவங்கள் மற்றும் நம்முடைய முந்தைய தலைமுறையினர் செய்தபாவங்கள் விலகி நம்முடைய குடும்பம் நல்ல நிலைமையிலும் இறந்த முன்னோர்களுக்கு ஒரு நல்ல நிம்மதியான சூழலும் உருவாகும் என்பது ஐதீகம்.
இந்த 2025 ஆம் ஆண்டு பரணி தீபமானது டிசம்பர் இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. இன்றைய நாள் மாலை 6. 24 மணிக்கு துவங்கி டிசம்பர் 3 மாலை 4 .47 மணி வரை பரணி நட்சத்திரம் இருக்கிறது. இதனால் டிசம்பர் இரண்டாம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு பிறகு இந்த பரணி தீபத்தை ஏற்ற வேண்டும்.

பரணி தீபம் ஏற்றுவதற்கு ஒரு தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு அதில் கோலமிட்டு ஐந்து அகல் மண் தீபங்களுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து நெய் தீபமாக ஏற்ற வேண்டும். இந்த ஐந்து அகல் விளக்குகளும் ஐந்து திசைகளை நோக்கி இருக்குமாறு நாம் ஏற்ற வேண்டும்.
அதோடு வீடுகளில் இருக்கக்கூடிய பூஜை அறையில் வழக்கமாக ஏற்றக்கூடிய தீபங்களுடன் சேர்த்து இந்த ஐந்து தீபங்களையும் நாம் அன்றைய தினம் ஏற்ற வேண்டும். வீட்டு நிலை வாசலில் இரண்டு புறமும் இரண்டு தீபங்களும் முடிந்தால் வீடு முழுவதும் கூட தீபங்களை ஏற்றலாம்.
மற்ற தீபங்களை எண்ணெய் ஊற்றி ஏற்றினாலும் தாம்பூலத்தில் இருக்கக்கூடிய ஐந்து விளக்குகளையும் கண்டிப்பாக நெய் தீபமாக ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றும் பொழுது நிச்சயம் நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |