2025 டிசம்பர் மாதம் இந்த 6 நாட்களை மட்டும் கட்டாயம் தவறவிடாதீர்கள்
2025 ஆம்ஆண்டு ஆங்கில மாதங்களில் கடைசி மாதத்தில் நாம் இருக்கின்றோம். அதாவது இந்த 12 வது மாதமான டிசம்பர் மாதமானது ஆன்மீக ரீதியாக பல்வேறு சிறப்புகளை வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் இந்த நாட்களை கட்டாயம் நாம் தவற விடக்கூடாது. அந்த நாட்களில் இருக்கக்கூடிய விசேஷங்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
டிசம்பர் மாதம் 1ஆம் தேதி கார்த்திகை மாதத்தின் உடைய சோமவாரம் வருகிறது. அதோடு பெருமாளுக்கு மிக உகந்த ஏகாதசி விரதமும் அன்றைய தினம் வருகிறது. இந்த நாள் சிவபெருமானையும் பெருமாளையும் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது நிச்சயம் அவர்கள் இருவரின் பரிபூரண அருள் நம் வாழ்க்கையில் கிடைத்து நிம்மதி உண்டாகும்.
அதேபோல், டிசம்பர் 2ஆம் தேதி கார்த்திகை மாதத்தின் உடைய செவ்வாய்க்கிழமை அன்று பிரதோஷம் வருகிறது. அன்றைய தினம் பரணி தீபமும் வருகிறது.

பரணி தீபம் வரும் நாளில் சிவபெருமானை வழிபாடு செய்து யமதர்ம ராஜாவை நினைத்து யம தீபம் எனப்படும் பரணி தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால் யம பயம் விலகி நம்முடைய முன்னோர்களுடைய அருளும் நமக்கு மோட்சமும் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் பஞ்சு பூத தத்துவத்தின் அடிப்படையில் ஏற்றப்படும் இந்த பரணி தீபத்தன்று சிவ வழிபாடு செய்வது மிக மிக சிறப்பானதாகும்.
இதனை தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. அன்றைய நாள் தான் திருக்கார்த்திகை தீபமும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்த பிறகு வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள்.
அன்றைய தினம் கிருத்திகை நட்சத்திரம் வருவதால் முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கும் மிகச்சிறந்த நாளாக இருக்கிறது. கார்த்திகை தீபத்திருநாள் அன்று வீடுகளில் கட்டாயம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். 27 என்பது 27 நட்சத்திரத்தை குறிக்க கூடியதாகும்.
ஆக இந்த எண்ணிக்கையில் விளக்கேற்றுவது அவர்களுடைய வீட்டிற்கு செல்வ வளத்தை சேர்க்கும். ஆனால் இவ்வாறு 27 விளக்குகள் என்ற எண்ணிக்கையில் ஏற்ற முடியாதவர்கள் குறைந்தபட்சம் மூன்று விளக்காவது ஏற்ற வேண்டும்.
கார்த்திகை தீபத்தை தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி கார்த்திகை பௌர்ணமி வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு மிகவும் உகந்த நாளாக இருக்கிறது. அன்றைய தினம் மகாவிஷ்ணு கூறிய பாஞ்சராத்திர தீபமும் வருகிறது. இந்த நாளில் பெருமாளையும் மகாலட்சுமியை வழிபாடு செய்து விளக்கேற்றி மந்திரங்களை உச்சரித்து பாராயணம் செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கிறது.
அடுத்தபடியாக டிசம்பர் 19ஆம் தேதி மார்கழி மாதம் அமாவாசை வருகிறது. மார்கழி அமாவாசை என்பது ஹனுமன் அவதரித்த தினமாகும். அதனால் இதை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள்.
இந்த நாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசிமாலை, வடை மாலை சாற்றி வழிபாடு செய்யலாம். அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் "ஸ்ரீராம ஜெயம்" உச்சரிப்பது அவர்களுக்கு ஒரு நல்ல ஆசீர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும். அனுமனுடைய மந்திரங்களையும் சொல்லி வழிபாடு செய்தால் அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்துக்கள் தீமைகள் எதுவும் நெருங்காது.
இந்த வழிபாடுகளை தொடர்ந்து டிசம்பர் 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி நன்னாள் வருகிறது. மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி என்ற பெயர் உண்டு. வருடத்தின் மற்ற மாதங்களில் வரக்கூடிய ஏகாதசி விரதம் இருந்து வழிபாடு செய்ய முடியாவிட்டாலும் இந்த ஒரு ஏகாதசியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |