2025 திருக்கார்த்திகை எப்பொழுது? விளக்கு ஏற்ற உகந்த நேரம் என்ன?
வேத சாஸ்திரங்களில் கோவில்களிலும் வீடுகளிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது ஒரு மனிதனுக்கு ஒரு மிகச் சிறந்த பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனை நமக்கு எடுத்துக்காட்டும் வகையில் அன்றைய காலத்தில் வாழ்ந்த அரசர்களும் கோவில்களுக்கு விளக்கேற்றி திருப்பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
இப்படியாக நாம் ஒவ்வொரு நாளும் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்தாலும் கார்த்திகை மாதத்தில் மகா கார்த்திகை தீபம் திருநாளன்று நம் வீடுகளில் அனைத்து இடங்களிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வோம். மேலும் திருவண்ணாமலையில் சிவபெருமான் அக்னி வடிவமாக இருந்து நமக்கு அருள் வழங்குகிறார்.

அதாவது சிவபெருமான் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை அன்று ஜோதி வடிவமாக நமக்கு அருள் தருகிறார். இந்த திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் ஏற்றப்படுகின்ற மகா தீப திருவிழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து ஈசனின் அருள் பெறுவார்கள். அப்படியாக 2025 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாள் நவம்பர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது.
அதோடு கார்த்திகை தீபத் திருவிழாவின் கடைசி நாள் உற்சவம் டிசம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைகிறது.
மேலும், கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலையில் தொடங்கிய நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி புதன்கிழமை அன்று திருக்கார்த்திகை மகா தீப திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் சிவபெருமான் நமக்கு அக்னி வடிவமாக ஜோதி உருவத்தில் நமக்கு காட்சியளித்து முக்தி அளிக்கிறார். இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்று திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிய பிறகு அதனை வழிபாடு செய்து பக்தர்கள் அவர்களுடைய வீட்டில் விளக்குகளை ஏற்றுவார்கள்.

அதாவது திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிய பிறகு மாலை 6 மணிக்கு வீடுகளில் நிலை வாசல் துவங்கி பின்வாசல் வரை அனைத்து இடங்களிலும் தீபங்கள் ஏற்றுவார்கள். மேலும் இந்த திருக்கார்த்திகை அன்று நாம் வீடுகளில் மொத்தமாக 27 விளக்குகள் ஏற்றுவது சரியான முறையாகும். இதற்கு மேல் விளக்கேற்ற விருப்பம் உள்ளவர்கள் விளக்கேற்றலாம் அல்லது குறைந்தபட்சம் அவர்கள் அன்றைய நாள் 27 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும்.
இந்த 27 எண்ணிக்கை என்பது 27 நட்சத்திரங்களை குறிப்பதாகும். அதோடு இந்த 27 தீபங்களில் குறைந்தது ஒரு நெய் தீபம் ஆவது ஏற்ற வேண்டும். இந்த நெய் தீபத்தை சுவாமியின் படத்திற்கு முன் வைத்து ஏற்றுவது சிறந்தது.
பொதுவாகவே வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது வீடுகளில் சூழ்ந்துள்ள இருளை போகக்கூடியது. ஆக வரக்கூடிய இந்த திருக்கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி வீடுகளில் அனைவரும் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்து நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற இருள் விலகி நன்மை பெற வழிபாடு செய்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |