2025 பங்குனி உத்திரம் அன்று வீட்டில் விளக்கு ஏற்றி செய்யவேண்டிய வழிபாடு
தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதம் பல ஆன்மீக சிறப்புகள் கொண்டது. அதாவது 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம் ஆகும்.
இந்த 2025 வருடம் பங்குனி உத்திரம் ஏப்ரல் 10 ஆம் தேதி பிற்பகல் 12 மணி 24 நிமிடத்திற்கு தொடங்கி, ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணி 10 நிமிடத்திற்கு முடிவடைகிறது. இந்த பங்குனி உத்திரத்தின் சிறப்புக்கள் என்னவென்றால் அன்றைய தினம் தான் சிவன்-பார்வதி, முருகன் - தெய்வாணை, ஸ்ரீராமர்-சீதா தேவி போன்ற தெய்வ திருமணங்கள் நடைபெற்றதாக ஐதீகம்.
அதேபோல் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் சென்று ஐக்கியமானதும் பங்குனி உத்திர திருநாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. ஆதலால் இந்த நாளில் திருமணம் ஆகாதவர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கு நினைத்த கணவன் கிடைப்பார்கள்.
அதே போல் கலியுக வரதன் கண்கண்ட தெய்வமான முருகப்பெருமானை வழிபாடு செய்யவும் மிக சிறந்த நாளாகும். இந்த நாளில் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலையும் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
அன்றைய தினம் முருகப்பெருமானின் அருளை பெற நம்முடைய பூஜை அறையில் வாழை இலை பரப்பி, அதன் ஒரு புறம் பச்சரியும், மற்றொரு புறம் துவரம் பருப்பும் பரப்பி வைத்து மீது ஆறு அகல் விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி கொள்ள வேண்டும்.
அதோடு முருகப்பெருமானுக்குரிய மந்திரமான "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 11 முறை அல்லது 21 முறை மனதார உச்சரிக்க வேண்டும். இவ்வாறு விளக்கு ஏற்றி மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் முருகப்பெருமானின் அருளால் நாம் நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |