நாளை புரட்டாசி முதல் நாள் இத்தனை சிறப்புகள் உள்ளதா? இந்த வழிபாட்டை செய்ய தவறாதீர்கள்
விரதங்களில் பல வகைகள் இருந்தாலும் ஏகாதசி விரதம் என்பது அனைத்து விரதங்களையும் விட பல மடங்கு உயர்வை தரக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த விரதமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக முன்னோர்களை வழிபாடு செய்யக்கூடிய மகாளய பட்ச காலத்தில் இந்த ஏகாதசி விரதம் வருவது இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது.
அதோடு புரட்டாசி முதல் நாள் அன்று இந்த ஏகாதசி வருவது நமக்கு பல்வேறு பலன்களை அளிக்கிறது. அப்படியாக நாளை(17-09-2025) பிறக்க இருக்கும் புரட்டாசி முதல் நாள் அன்று வரக்கூடிய இந்திர ஏகாதசி நாளில் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
எவர் ஒருவர் ஏகாதசி நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி அவர்கள் வாழ்க்கையில் வெளிச்சம் உருவாகிறது. அதோடு இறந்த முன்னோர்களுக்காகவும் நாம் பிரார்த்தனை செய்து கொள்வது அவசியமாகும்.
இந்த ஆண்டு இந்திர ஏகாதசி செப்டம்பர் 17ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்கள் அஸ்வமேத யாகம் செய்வதற்கு இணையான பலன்களை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அன்றைய நாள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் சிரார்த்தம் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அதோடு பெருமாளையும் மனதார நினைத்து வழிபாடு செய்வது நமக்கு மிக சிறந்த பலனைக் கொடுக்கும். நாளை ஏகாதசி நாளில் பெருமாளுக்கு துளசி இலைகள் மலர்கள் அவருக்கு பிடித்த நெய்வேத்தியம் போன்றவை படைத்து வழிபாடு செய்வது நமக்கு பெருமாளின் முழு அருளையும் பெற்றுக் கொடுக்கும்.
முடிந்தவர்கள் அருகில் உள்ள பெருமாள் ஆலயம் சென்று வழிபாடு செய்யலாம். இந்த நாளில் இந்திர ஏகாதசி பற்றிய கதைகள் கேட்பதும் படிப்பதும் மிகச் சிறந்த புண்ணியத்தை கொடுக்கும். இந்திரசேனன் என்ற மன்னன் நாரதரின் அறிவுரைப்படி ஏகாதசி விரதத்தை கடைபிடித்து தனது தந்தையை நரகத்திலிருந்து விடுவித்தார் என்பது புராணம்.
அதனால் அவருடைய பெயரில் இந்திர ஏகாதசியை நாம் வழிபாடு செய்கின்றோம். இந்த நாளில் மனதார இறைவனை வழிபாடு செய்வதால் நம்முடைய இறந்த முன்னோர்கள் சாந்தி அடைவதோடு வைகுண்ட பதவியை அடைவார்கள். ஆதலால் நாளைய தினம் தவற விடாமல் விரதம் இருந்து வழிபாடு செய்து பல நன்மைகளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







