2026: நாளை சித்திரை மாதத்தின் முதல் பிரதோஷம்.. சிவன் அருள் பெற செய்யவேண்டியவை
தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு முதல் பிரதோஷம் நாளை ஏப்ரல் 15 ஆம் தேதி வர இருக்கிறது. தேய்பிறையில் வரக்கூடிய இந்த பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி ஆகியவை புதன்கிழமையில் இணைந்து வருவது இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது. பொதுவாகவே புதன்கிழமையில் வருகின்ற பிரதோஷத்தை நாம் புதன் பிரதோஷம் என்று அழைக்கின்றோம்.
இந்த நாளில் சிவபெருமானையும் பார்வதி தேவையும் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் சந்திக்கின்ற அனைத்து துன்பங்களிலிருந்தும் நாம் விடுபட்டு ஞானமும் தொழிலில் வளர்ச்சியும் பெறலாம். மேலும், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இந்த புதன் பிரதோஷம் வருவது இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு அதிபதி சனி பகவான் ஆவார்.

இதற்குரிய அதிதேவதை சிவபெருமான். அதனால் இந்த நாளில் நாம் சிவபெருமானை மனதார வழிபாடு செய்தால் சனி பகவானால் ஏற்படுகின்ற துன்பங்கள் யாவும் விலகும். அதோடு, எவர் ஒருவர் தொடர்ந்து பன்னிரண்டு வருடங்கள் பிரதோஷ விரதத்தை கடைபிடிக்கிறார்களோ அவர்கள் சிவ கணங்களில் ஒருவராகி சிவபெருமானுக்கு தொண்டு செய்யக்கூடிய பாக்கியத்தை பெறுவார்கள் என்பது ஐதீகம்.
அந்த வகையில் நாளை புதன் பிரதோஷம் அன்று செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். புதன் பிரதோஷம் அன்று அதிகாலை எழுந்து குளித்து சுத்தமான ஆடைகளை உடுத்தி விரதத்தை தொடங்க வேண்டும். நாளைய தினம் நாள் முழுவதும் பொழுதும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை பாராயணம் செய்வதும் எழுதுவதும் நமக்கு நல்ல பலன்கள் கொடுக்கும்.
மேலும் இந்த மந்திரங்களை கிழக்கு நோக்கி அமர்ந்து உச்சரிப்பது மிகச்சிறந்த பலன் தரும். பிறகு மாலை நேரத்தில் மீண்டும் குளித்துவிட்டு பிரதோஷ காலத்தில் அருள் இருக்கக்கூடிய சிவபெருமான ஆலயம் சென்று சிவலிங்கத்தை மனதார வழிபாடு செய்வது நல்ல மாற்றம் கொடுக்கும்.

அதோடு அங்கு நடக்கக்கூடிய சிவ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். சிவபெருமானுக்கு கங்கை நீர், பால், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும், சிவபெருமானுக்கு பழங்கள் மலர்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும்.
அதேபோல், நவகிரக சன்னதிக்கு சென்று புதன் பகவானை மனதார வழிபாடு செய்து நம் வாழ்க்கையில் செல்வ வளமும், ஞானமும் பெருக வேண்டும் என்ற மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஜாதகத்தில் புதன் தோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் பிற கிரக தோஷம் இருப்பவர்கள் நாளை சிவபெருமானையும் நந்தி பகவானையும் வழிபாடு செய்தால் அவையெல்லாம் விலகுகிறது. ஆக அற்புதமான இந்த பிரதோஷ தினம் சித்திரை வருட பிறப்பிற்கு மறுநாள் வருவது இன்னும் கூடுதல் சிறப்பை பெறுகிறது. அதனால் அந்த தினத்தை தவறவிடாமல் சிவவழிபாடு செய்து 16 செல்வங்களையும் பெற்று வாழ்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |