2026: நாளை மோகினி ஏகாதசி.. பல அற்புதங்கள் நடந்த இந்த தினத்தை தவற விடாதீர்கள்
பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த தினம் என்றால் அதில் ஏகாதசியும் ஒன்றாகும். மேலும், விரதங்களில் ஏகாதசி விரதம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படியாக, வைகாசி மாதம் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர்.
இந்த 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று இந்த மோகினி ஏகாதசி வர இருக்கிறது. அன்றைய நாளின் சிறப்பையும் அன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பார்ப்போம்.
விஷ்ணு பகவான் வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசியின் போது தான் மோகினி அவதாரம் எடுத்தார் என்பது புராணம். அதனால் தான் இந்த ஏகாதசிக்கும் மோகினி ஏகாதசி என்ற பெயர் வந்தது. அதாவது மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியது போல் இந்த விரதம் மேற்கொள்கின்ற எல்லோருக்கும் இறைவன் நன்மையை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை.

அதேபோல், இந்த மோகினி ஏகாதசியில் விரதம் இருந்தால் நாம் பல பிறவிகளில் செய்த பாவங்கள் மற்றும் கர்ம வினைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.
அதோடு கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழக்கூடிய நிலை இருந்தால் அவர்களும் மனதார இந்த மோகினி ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்புகள் விலகும் என்பது ஞான நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது சீதை பிராட்டியை புரிந்து வாடிய ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவர்கள் பிரிந்து வாழக்கூடிய அந்த துன்பத்தை தீர்க்கக்கூடிய வழியை தனக்கு உபதேசம் செய்யுமாறு வசிஷ்ட முனிவரை வேண்டினார். ஆனால், வசிஷ்டர் ஸ்ரீ ராமபிரானின் திரு உள்ளத்தை அறிந்து கொண்டார்.
இந்த உலகத்திற்கு மோகினி ஏகாதசியின் சிறப்பை உணர்த்தவே ஸ்ரீ ராமபிரான் கேட்பதாக உணர்ந்த வசிஷ்டர் குருவின் ஸ்தானத்திலிருந்து ஸ்ரீ ராமபிரானுக்கு மோகினி ஏகாதசியின் மகிமையை எடுத்து சொல்லியதோடு ஸ்ரீ ராமபிரானையும் மோகினி ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்குமாறு உபதேசித்தார்.

மோகினி ஏகாதசி பூஜை முறை:
மோகினி ஏகாதசி அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு மகாவிஷ்ணுவின் திரு உருவப்படத்திற்கு மாலை சாற்றி, துளசி இலைகள், தேங்காய் பழங்கள் மற்றும் இனிப்புகள் போன்ற பிரசாதங்கள் படைத்து "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரத்தை 21 முறையாவது கட்டாயம் பாராயணம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய நாள் முடிந்தவர்கள் ஏழை எளியவர் பிராமணர்களுக்கு முடிந்த தானத்தை வழங்கலாம்.
மோகினி ஏகாதசி என்று கேட்க வேண்டிய கதை:
மோகினி ஏகாதசி அன்று இந்த கதையை கேட்பதால் பாவங்கள் விலகி பெருமாளின் முழு அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதாவது, பண்டைய சாஸ்திரங்களின்படி ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த மன்னனின் மகன் பாவம் செயல்களில் மூழ்கி போனான். அவனது செயல்களால் மனம் உடைந்த மன்னன் அவனை ராஜ்ஜியத்தில் இருந்து வெளியேற்றினார்.

மிகவும் துன்பப்பட்டு பல இடங்களுக்கு அலைந்து திரிந்த அந்த இளைஞன் ஒரு முனிவரின் ஆசிரமத்தை சென்றடைந்தார். அவர் அந்த இளைஞனுக்கு மோகினி ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தையும் அதை கடைபிடிக்குமாறு அறிவுரை கூறினார். பக்தியுடன் விரதத்தை அந்த இளைஞன் கடைபிடித்ததால் அவர் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நடந்தது.
பகவான் அவனுடைய பாவங்களை நீக்கி அவன் வாழ்க்கையில் புதிய பாதையை காட்டினார். ஆக, எவ்வளவு பாவங்கள் செய்தாலும் நேர்மையாக மனம் திருந்தி ஒரு நல்ல செயல்களை செய்யும் பொழுது அவன் வாழ்க்கை மாறியது போல் மனிதர்கள் அறியாமையால் கால சூழ்நிலையால் செய்து விடுகின்ற பாவங்களில் இருந்து விடுபட மனதார நாம் இறைவனை வழிபாடு செய்து அதற்கான மோட்சம் கேட்கும் பொழுது கட்டாயம் இறைவன் நமக்கான நல்வழியை காட்டுவார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |