2026: நாளை தைப்பூசம் விரதம் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
முருகப்பெருமான் வழிபாடுகளில் மிக முக்கியமான வழிபாடு தைப்பூசம் அன்று செய்யக்கூடிய வழிபாடு ஆகும். அதாவது இந்த நாளில் நாம் முருகப்பெருமானை மனம் உருகி வேண்டினால் தீராத பிரச்சனையும் தீரும். மேலும் இந்த தைப்பூசம் தினம் சிறப்புகளை கொண்டிருக்கிறது.
அதாவது சிதம்பரத்தில் நடராஜ பெருமான் ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்திய தினம் என்றும் வள்ளி முருகப்பெருமானை திருமணம் முடித்த தினம் என்றும் உலகில் முதன்முதலாக தண்ணீர் தோன்றிய தினம் என்றும் வடலூர் வள்ளலார் ஜோதியுடன் ஐக்கியமான நாள் என தைப்பூசத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருக்கிறது.
இருப்பினும் முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினமாகவே இந்த தைப்பூசத் திருநாள் மிகவும் சிறப்பாக உள்ளது. அதாவது தைப்பூச தினத்தன்று தான் முருகப்பெருமாள் அன்னை பார்வதி தேவியடமிருந்து ஞானவேலை பெற்றார்.

முருகன் கைகளில் இருக்கக்கூடிய வேல் என்பது முருகப்பெருமானின் அருவுருவமாக கருதப்படுகிறது. முருகப்பெருமான் திருக்கையில் இருக்கக்கூடிய வேல் என்பது சிவ சக்தியின் அம்சமாக போற்றப்படுகிறது.
ஆக பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த தைப்பூச தினமானது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று வருகிறது. அன்றைய தினம் நாள் முழுவதும் பௌர்ணமி திதியும் பூச நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. அதனால் அன்றைய நாள் முழுவதும் நாம் தைப்பூச விழாவை கொண்டாடலாம். இருப்பினும் குறிப்பிட்ட சில நேரத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.
அதிலும் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தைப்பூச வழிபாடு செய்வது என்பது நமக்கு மிகச் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும். அதாவது தைப்பூச நாளன்று காலை 4.20 மணி முதல் 6.30 மணி வரைக்கும் பிறகு காலை 8 மணி முதல் 9.30 மணி வரை உள்ள நேரத்தில் விளக்கு ஏற்றி படையல் போட்டு வழிபாடு செய்யலாம்.
இதை தவறவிட்டவர்கள் பகல் 1. 35 மணி முதல் 2. 35 மணி வரையிலும், மாலை 6 மணிக்கு மேலும் விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

விரதம் இருக்கும் முறைகள்:
தைப்பூச தினத்தன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளிப்பதாக நினைத்து முருகப்பெருமானின் திருநாமங்களை பாராயணம் செய்து தண்ணீரை தலையில் ஊற்றி குளிக்க வேண்டும்.
பிறகு முதலில் வீட்டினுடைய பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து ஒரு அகல் விளக்கை ஏற்றி வழிபாடு செய்த பிறகு முழு முதற் கடவுள் விநாயகரை வழிபாடு செய்துவிட்டு முருகப்பெருமானின் படத்திற்கு மற்றும் பிற சுவாமி படங்களுக்கு மலர்கள் அலங்கரித்து முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக ஆறு நெய் விளக்குகள் அல்லது நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். ஷட்கோண கோலமிட்டு அதன் மீதும் விளக்கேற்றலாம்.
விளக்குகளை நேரடியாக தரையில் வைத்து மட்டும் ஏற்றி விடாதீர்கள். ஒரு வாழை இலையோ அல்லது வெற்றிலை இலையோ தட்டு வைத்து விளக்கேற்ற வேண்டும்.
வழிபாடு செய்யும் முறை:
வீடுகளில் சிலர் வேல் வைத்து வழிபாடு செய்வார்கள். அப்படியாக வேல் வைத்திருப்பவர்கள் தைப்பூச தினத்தன்று பால், பன்னீர், சந்தனம் போன்ற பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். இது எதுவும் இல்லை என்றால் தண்ணீர் மட்டும் கொண்டு நாம் அபிஷேகம் செய்யலாம். பிறகு சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
முருகப்பெருமானுக்கு நெய் வைத்தியமாக தேன், தினை மாவு, பழங்கள், வெற்றிலை பாக்கு, சர்க்கரை பொங்கல், பருப்பு பாயாசம் போன்றவை படைக்க வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு உரிய 108 போற்றி மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை செய்யலாம்.

அர்ச்சனை முடிந்த பிறகு தீப தூப ஆராதனை காட்டி விரதத்தை துவங்கலாம். முக்கியமாக விரதத்தின் பொழுது ஆறுபடை வீடுகளுக்கும் உரிய திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல்மாறல் விருத்தம் போன்ற பதிகங்களை பாராயணம் செய்ய வேண்டும்.
அன்றைய தினம் முடிந்தவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயம் சென்று அங்கு முருக பெருமானுக்கு அபிஷேகத்திற்காக பால் வாங்கி கொடுக்கலாம்.
நீங்கள் பால் வாங்கி கொடுக்க வேண்டும் என்று எண்ணினால் பசும்பால் வாங்கி ஒரு சிறிய குடத்தில் நிறைத்து அதன் வாய் பகுதியில் மஞ்சள் நிற துணியால் மூடி அந்த குடத்தை தலை மீது வைத்து வீட்டிலிருந்து சுமந்து கொண்டு கொடுத்தால் நன்மை உண்டாகும்.
கோவில் தூரமாக இருந்தால் அங்கு சென்று கூடத்தில் பால் நிரப்பி தலையில் வைத்து கோவிலை மூன்று முறை சுற்றி வந்து வழிபாடு செய்யலாம். மேலும் விரதம் இருப்பவர்கள் மூன்று வேளையும் உணவை தவிர்த்து விரதம் இருக்கலாம் அல்லது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை மட்டும் சாப்பிட்ட விரதம் இருக்கலாம்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் எளிமையான தயிர் சாதமோ உப்பு சேர்க்காத உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது நல்லது. எந்த விரதம் மேற்கொள்வதாக இருந்தாலும் தண்ணீர் குடிப்பதை மட்டும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |