பிரம்ம முகூர்த்தத்தில் இந்த 5 விஷயங்கள் செய்தால் கட்டாயம் நாம் நினைத்தது நடக்குமாம்
ஆன்மீக ரீதியாக அதிகாலை வேளை எப்போதும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதைத்தான் பிரம்ம முகூர்த்தம் என்றும் சொல்வார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் செய்யும் காரியங்களும் மிகச் சிறந்த வெற்றியையும் நல்ல பலன்களையும் கொடுப்பதாக ஐதீகம்.
பிரம்ம முகூர்த்தம் நேரம் ஆனது சூரிய உதயத்திற்கு முன்பாக காலை 4 மணி முதல் 5. 30 மணி வரையிலான இந்த ஒன்றரை மணி நேரத்தை தான் பிரம்ம முகூர்த்தம் என்கின்றோம். இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு நட்சத்திரமும், நல்ல நேரம் பார்க்க வேண்டியது அவசியமில்லை.
இவ்வளவு அற்புதம் நிறைந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண் விழிப்பது என்பது நமக்கு அதீத நற்பலன்களை கொடுப்பதாக சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் இந்த ஐந்து விஷயங்களை செய்தால் கட்டாயமாக நாம் நினைத்தது நடக்கும் என்கிறாரக்ள்.
அதோடு நம் வாழ்க்கையும் நல்ல நிலைக்கு பிரகாசமாக மாறும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. ஒருவர் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளிக்கிறார் என்றால் அவர்களை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் உண்டாகிறது. மேலும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து ஒருவர் நீராடுவது என்பது பாலில் நீராடுவதற்கு சமமாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்களுடைய ஆரோக்கியம் செல்வ வளம் ஆகியவை சிறப்பாக அமையும் என்று சொல்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் நாம் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளிக்கும் பொழுது நம்முடைய மனமும் உடலும் புத்துணர்ச்சி அடைந்து அன்றைய தினத்தில் நாம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஒரு தன்மையை நமக்கு கொடுக்கிறது.
2. பிரம்ம முகூர்த்த நேரத்தில் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி துளசி தேவியை மனதார நினைத்து துளசி செடிக்கு முன்பாக ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் வீடுகளில் சூழ்ந்துள்ள எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் விலகி நமக்கு பொருளாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அது மட்டுமல்லாமல் விளக்கு ஏற்றிவிட்டு துளசி செடிக்கு முன்பாக நாம் அமர்ந்து தியானம் செய்து வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் யாவும் விலகும்.
3. பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமக்கு மிகவும் பிடித்த இஷ்ட தெய்வங்களை மனதில் நினைத்து அவர்களுக்கு உரிய மந்திரத்தை நாம் பாராயணம் செய்து வழிபாடு செய்யும்பொழுது நமக்கு ஆன்மீக ரீதியாக நல்ல முன்னேற்றமும் நம் வாழ்க்கையில் ஒரு நல்ல புத்துணர்ச்சியும் கிடைக்கும். அதோடு இஷ்ட தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைத்து நாம் நினைத்ததை சாதிக்க கூடிய தன்மையை பெறுகிறோம்.

4. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விளக்கேற்றி விட்டு நம்முடைய வழிபாடுகளை செய்த பிறகு முடிந்த அளவிற்கு பறவைகள் அல்லது பசு மாட்டிற்கு உணவுகளை வழங்கலாம். இது நம் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும். அதோடு நம்முடைய பாவங்கள் விலகி புண்ணியங்கள் சேருகிறது.
5. மிக முக்கியமாக நாம் மனதில் நினைத்தது நடக்கவும், நம் மனதை ஒருமுக நிலைக்க கொண்டு வர பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது அதிகாலை 4 மணிக்கு எழுந்து தியானம் அல்லது யோகா செய்தால் நம் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை காணலாம். இதனால் நம் மனம் புத்துணர்ச்சி அடைந்து மன அழுத்தம் குறைகிறது. அதோடு உடல் நிலையும் நல்ல முன்னேற்றம் அடைந்து ஆரோக்கியத்தில் இருக்கக்கூடிய குறைகளும் விலகுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |