திருப்பதி ஏழுமலையான் பற்றிய 7 சுவாரசிய தகவல் தெரியுமா?
பெருமாள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் தான். இங்கு இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.
மேலும், திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகும் என்ற பழமொழியும் உண்டு. அப்படியாக, இவ்வளவு விஷேசம் கொண்ட திருப்பதியில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஏழு விஷயங்கள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
ஏழு மலைகள்:
திருப்பதியில் வீற்றியிருக்கும் வெங்கடாசலபதி சப்தகிரி என்று அழைக்கப்படும் 7 மலைகளின் மீது கோவில் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, கருடாத்ரி, வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி என்ற மலைகள் மீது இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
ஏழு நாமங்கள்:
அதே போல், இங்கு இருக்கும் பெருமாளுக்கு ஏழு திருநாமங்கள் இருக்கிறது. ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி ஆகியனவாகும்.
ஏழு தீர்த்தங்கள்:
திருப்பதியில் சிறப்பு பெற்ற 108 தீர்த்தங்கள் இருந்தாலும், குறிப்பாக 7 தீர்த்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.அவை, குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், சுவாமி புஷ்கரணி என்பவை ஆகும்.
ஏழு தலை ஆதிசேஷன்:
திருப்பதியில் இருக்கும் 7 மலையானது ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள் என்று நம்பப்படுகிறது. அதனால், இங்கு பிரமோற்சவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் 'பெரியசேஷ வாகனம்' என்ற ஏழு தலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.
ஏழு கலச ராஜகோபுரம்:
திருப்பதியில் இருக்கும் ராஜகோபுரத்தில் சப்த லோகங்களுடனும் தொடர்பு கொள்வதுபோல ஏழு கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு முக்கிய இடங்கள்:
திருப்பதி செல்பவர்கள், கட்டாயம் தரிசிக்க வேண்டிய முக்கியமான 7 இடங்கள் இருக்கிறது. அதாவது, கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சுவாமி சன்னிதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் ஆகியவை நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்கள்.
ஏழு மகிமைகள்:
திருப்பதி மலைவாசனுக்கு 7 மகிமைகள் இருக்கிறது. அவை, ஸ்ரீனிவாச மகிமை, ஷேத்திர மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவையாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |