சனிபகவான் பாதிப்புகளில் இருந்து விடுபட செய்ய வேண்டிய 7 முக்கிய பரிகாரங்கள்
ஜோதிடத்தில் சனிபகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் கிரகங்களிலே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். காரணம் இந்த கிரகம் மெதுவாக நகரும் பொழுது தான் ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையில் கற்றுக்கொள்ளக்கூடிய பாடத்தை அவனால் முழுமையாக கற்றுக் கொள்ள முடிகிறது.
ஆக சனி பகவான் ஒரு மனிதனுக்கு துன்பத்தை கொடுப்பதற்காக இயங்கவில்லை. அவர் ஒரு மனிதனுக்கு அவன் செய்த தவறுகளை சுட்டிக் காண்பித்து அதை திருத்திக் கொண்டு ஒரு நல்ல மனிதனாக வாழ்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான கிரகமாக இருக்கிறார்.
மேலும் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய அவமானங்கள், அடிமைத்தனம் போன்றவை இந்த சனிபகவானுடைய பாதிப்புகளால் வருகிறது. ஆக இந்த சனி பகவானின் தாக்கமானது மிகப்பெரிய அளவில் இருக்கக்கூடியது தான். அப்படியாக, இந்த தாக்கத்திலிருந்து ஒருவர் விடுபடுவதற்கு அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

1.சனி திசை மற்றும் சனி புத்தி காலங்களில் இடம் மாறுதல் அந்த நபருக்கு நிச்சயம் ஒரு நல்ல பலனை கொடுக்கும். அதாவது வெளிநாடு, வெளியூர் என்று அவர்கள் இருப்பிடத்தை விட்டு தூரமாக இருந்தால் ஒரு நல்ல நிலையில் அவர்கள் இருக்கலாம் இதுவும் ஒரு பரிகாரம் தான்.
2. இந்த காலகட்டங்களில் குளிர் பிரதேசங்களுக்கு சென்று நாம் வாழலாம். அதிக குளிரின் தன்மையால் நம்மை நாம் சுருட்டி கொள்வோம். ஆக நாம் ஒரு வெப்பத்திற்கு அடிமையாக இருக்கக்கூடிய நிலை உருவாகுவதால் அது ஒரு பரிகாரமாக அமைகிறது.
3. வேறு மொழி பேசும் இடங்களுக்கு பயணம் சென்று வரலாம். அல்லது அங்கே சென்று தங்கி வேலை செய்யலாம். காரணம் நாம் மொழி தெரியாமல் ஒரு இடங்களில் இருக்கும் பொழுது நாம் நிறைய கற்றுக் கொள்வோம். அங்கு நிறைய அவமானங்களை சந்திப்போம். ஆக அந்த அவமானங்கள் வழியாக நம்மை உணர்ந்து முன்னேற்றிக் கொள்வோம்.vஅதனால் இவ்வாறான ஒரு கட்டமைப்பும் நமக்கு ஒரு பரிகாரமாக தான் இருக்கும்.
4. முடிந்த வரையில் பழைய உடைகளை அணிந்து கொள்வது அவசியம். மிகவும் பிரம்மாண்டமான உடை அணியாமல் எல்லாவற்றிலும் எளிமையை கடைப்பிடித்தால் நிச்சயம் அதுவும் ஒரு சிறந்த பரிகாரம் தான்.

5. சமுதாயத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு மிகச்சிறந்த பரிகாரமாகும். அதிலும் குறிப்பாக துப்புரவு தொழிலாளர்கள், கழிவுநீர் தொழிலாளர்கள், செருப்பு மற்றும் குடை தைப்பவர்கள் போன்றவற்றவர்களுக்கு உதவி செய்வது அவர்களுக்கு ஒரு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
6. இந்த காலகட்டங்களில் நாம் பிறரிடம் பேசும் பொழுது மிகவும் மென்மையாக நடக்க வேண்டும். நமக்குகீழே வேலை செய்யக்கூடிய நபர்கள் தவறு செய்தாலும் அவர்களிடம் கோபித்துக் கொள்ளாமல் மிகவும் மென்மையாக எடுத்துச் சொல்வது அவசியமாகும்.
7. வெளி ஊர்களில் இருக்கக்கூடிய கால பைரவர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். பிறகு வெளி ஊர்களில் இருக்கக்கூடிய நாய்களுக்கு உணவு வைத்து வழிபாடு செய்யும்பொழுது சனிபகவானுடைய தாக்கம் என்பது முற்றிலுமாக குறையும்.
ஆக சனி பகவான் நாம் செய்யக்கூடிய காரியத்தை மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டிருப்பவர். நீங்கள் எதார்த்தமாக பேசிய ஒரு விஷயம் ஒருவருக்கு காயத்தை ஏற்படுத்திருந்தால் கூட அந்த காயத்திற்கான தண்டனையை உங்களுக்கு கொடுக்கக் கூடியவர். அதுமட்டுமல்லாமல் ஒரு பற்றற்ற வாழ்வை நமக்கு கற்றுக் கொடுக்கக் கூடியவர்.
ஒரு மனிதனாக யோகியாக ஒரு மனிதன் வாழ்வதற்கு தயார் நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு அற்புதமான கிரகம் என்றால் அது நிச்சயம் சனி பகவான் தான். ஆக எதன் மீதாவது நம்மை அறியாமல் அதிக பற்று வைத்து அந்த பற்றினால் நாம் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியாகவும் பிறரை உதாசீனம் செய்து கொண்டு இருந்தோம் என்றால் அதற்கான பாடத்தை வழங்கி எல்லாவற்றையும் பற்றற்ற நிலையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தன்மையை கொடுக்கக்கூடியவர் சனி பகவான்.
அதனால் இங்கு சனி பகவானுக்குரிய பரிகாரம் என்று எடுத்துக் கொண்டால் நாம் நல்ல மனிதராக ஒரு நல்ல மாணவனாக வாழ்க்கை கொடுக்கக்கூடிய பாடத்தை கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்லக்கூடிய ஒரு அற்புதமான மனிதராக இருந்து விட்டோம் என்றால் அதுதான் நாம் அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ள செய்யக்கூடிய ஒரு மிகச் சிறந்த பரிகாரமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |