2025 ஆடி அமாவாசை எப்பொழுது? அன்று நாம் மறக்காமல் செய்யவேண்டியவை
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் விஷேசம் நிறைந்த மாதமாகும். மேலும், இந்த ஆடி மாதம் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது, சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம் ஆகும்.
இந்த தட்சிணாயன காலத்தின் முதல் அமாவாசை என்பதால், இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், இந்த ஆடி அமாவாசை தென்னிந்தியாவில் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான நாளாகும்.
ஒரு வருடத்தில் வரும் முக்கியமான அமாவாசையில் இந்த ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் முன்னோர்களை வழிபாடு செய்து அவர்களுக்கு உரிய பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்தும் விடுபட முக்கியமான நாளாகும்.
இந்த ஆடி அமாவாசை அன்று சூரியன் (சிவன்) மற்றும் சந்திரன் (சக்தி) ஒன்று சேர்கிறார்கள். ஆதலால், அன்றைய நாளில் சந்திரனின் சக்தி அதிகமாக இருக்கும். அன்றைய தினம் இறந்த முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினரை ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது.
ஆதலால், அன்றைய தினம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது முக்கியம். இவ்வாறு நாம் தவறாமல் செய்யும் பொழுது அவர்களின் ஆசீர்வாதத்தால் நம் குடும்பத்தில் உள்ள துன்பங்கள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
அப்படியாக, இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 24ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்று அதிகாலை 03.06 மணிக்கு துவங்கி, ஜூலை 25ம் தேதி அதிகாலை 01.48 வரை அமாவாசை திதி உள்ளது. அன்று வியாழக்கிழமை என்பதால் காலை 6 முதல் 07.30 வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது.
இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை 07.30 மணிக்கு பிறகு கொடுப்பது சிறப்பு. முடிந்த வரை முன்னோர்களை ராகு காலம், எமகண்டம் நேரத்தில் வழிபடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆதலால், நாம் மறவாமல் ஆடி அமாவாசை தினத்தை கணக்கில் கொண்டு முன்னோர்களுக்கு செய்யவேண்டிய காரியங்களை சரியாக செய்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |