சங்கடங்கள் தீர்க்கும் ஆடி சங்கடஹர சதுர்த்தி
முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கினால் துயரம் யாவும் விலகும் என்பது அனைவரும் தெரிந்தது. அப்படியாக ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றியடையும்.
மேலும் இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.
அனுமன் சீதையை கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது, பாண்டவர்கள் துரியோதனனை வென்றது போன்றவை நிகழ்ந்ததும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையால்தான்.
சதுர்த்தி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் ஒரு நாளைக் குறிக்கும்.
இந்த நாட்கள் பொதுவாக 'திதி' என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் நான்காவது திதி சதுர்த்தி ஆகும்.
'சங்கஷ்டம்' என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
இந்த சங்கஷ்டமே பின்பு 'சங்கட'மாக மருவி, உருமாற்றம் பெற்று விட்டது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாக கடைபிடிக்கப்படுகிறது.
நமக்கு வரும் துன்பங்கள், தடைகள், கஷ்டங்கள் ஆகியவற்றை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்தபோது, அவர்கள் விநாயகரை வணங்கி நலம் பெற்றுள்ளனர்.
சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் பொதுவாக விரதம் இருக்கும் நாளில் செய்வது போல, காலை எழுந்ததும் வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
பின் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விநாயகரை வணங்கி 11 முறை வலம்வர வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் அவசியம். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம்.
மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.
நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம். விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.
ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் தடை, தாமதங்கள் போன்றவை நீங்கும்.
புதிதாக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். திருமண தடைகள் நீங்கி இனிதே திருமணம் நடைபெறும்.
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடுவோருக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கப் பெறுவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருகும்.
ஆடி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் கேது தோஷம் நீங்கும்.
குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை அகலும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |