2025 ஆடிப்பெருக்கு எப்பொழுது?அன்று தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் என்ன?
ஆடி மாதத்தில் வரக்கூடிய அனைத்து விசேஷங்களும் மிக சிறந்தது என்றாலும், ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பெருக்கு மிகவும் முக்கியமான நாளாக கொண்டாடப்படுகிறது. அப்படியாக, ஆடிப்பெருக்கு அன்று நாம் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்? அன்று தாலி கயிறு மாற்ற சிறந்த நேரம் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இந்த விழாவை கிராமப்புறங்களில் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்று வழிபாடு செய்வார்கள். இந்த காலத்தில் நல்ல மழை பெய்து வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடி வரும். அப்பொழுது ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள்.
அதுவும் குறிப்பாக இந்த விழா காவேரி நதிக்கரையை ஓட்டி மிக சிறப்பாக கொண்டாடப்படும். மேலும், விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். அவ்வாறு வழிபாடு செய்யும் ஆற்றின் கரையோரம் படித்துறைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.
ஆடிப்பெருக்கு அன்று ஆறுகளுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீடுகளில் இருந்தே காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளை கொண்டாடலாம்.
ஆடிப்பெருக்கு அன்று முக்கிய நிகழ்வாக மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இவ்வாறு செய்வதின் வழியாக கணவரின் ஆயுள் அதிகமாகும் என்பது நம்பிக்கை.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடிப்பெருக்கு 2025ம் ஆண்டில் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் பெண்கள் தாலி மாற்றுவதற்கான உகந்த நேரமாக காலை 7:45 முதல் 8:45 வரையும், மாலை 3:15 முதல் 4:15 வரையும் உள்ளது. அன்றைய தினத்தில் புதுமண தம்பதிகள் மதியம் 12 மணிக்குள் தாலி மாற்றிக்கொள்வது சிறப்பு.
ஆக, இத்தனை அற்புதம் நிறைந்த நாளில் கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல துணை கணவராக வரவும், திருமணம் ஆன தம்பதியர் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும், குடும்ப சந்தோஷத்திற்காகவும் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கை மிக சிறப்பான முறையில் அமையும் என்பது ஐதீகம். ஆதலால், நாமும் இந்த நாளில் தவறாமல் வழிபாடு செய்து செல்வ செழிப்பான வாழ்க்கையை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







