ஒருவர் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் எப்பொழுது நிகழ்கிறது தெரியுமா ?
மனிதர்களுடைய வாழ்க்கையே பல கற்றலுக்கு நடுவில் தான் இருக்கிறது. மேலும், எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான வாழ்க்கை முறையும், அனுபவங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் பெறக்கூடிய அனுபவமுமே அவர்களுக்கு பெரியதாகவும் அதுவே அவர்களுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுப்பதாகவும் அதுவே அவர்களுடைய உலகமாகவும் உள்ளது. அந்த உலகத்தில் ஏதேனும் ஒரு சிறிய பாதிப்பு, தோல்வி, அவமானம் என்று வருகின்ற பொழுது அவர்களால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அந்தப் பிரச்சினையிலேயே அவர்களுடைய உலகம் முடிந்து விட்டது என்று நினைக்கிறார்கள். அதில் இருந்து விடுபட பிரார்த்தனை செய்கிறார்கள். பரிகாரம் செய்கிறார்கள். பிடித்ததை செய்து பார்க்கிறார்கள்.

இப்படி எல்லாம் செய்தும் அவர்களால் ஒரு சில கஷ்டங்களிலிருந்து வெளிவரவே முடியவில்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய தோல்வி, துன்பம், அவமானம் இருந்தாலும் நொடியில் வெளியே வரலாம்.
அதற்கு அவர்களுக்கு தேவை "ஒப்புக் கொள்ளுதல்". முதலில் வாழ்க்கையில் நடப்பதை நாம் ஒப்புக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
ஆம்! நான் இதுதான். சில விஷயங்களை தெரியாமல் செய்து தவறு இழைத்து விட்டேன். என்னுடைய வாழ்க்கை நிலை இதுதான். என் சூழ்நிலை இதுதான். நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று ஒப்புக்கொள்கின்ற பொழுது தான் மனதில் இருக்கக்கூடிய பயம் விலகுகிறது.
இங்கு பலருக்கும் தன்னுடைய நிலையை அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கிற பொழுதுதான் அவர்களால் எதிர்காலத்தை நோக்கி சரியாக பயனிக்க முடியவில்லை. நிகழ்காலத்திலும் சரியாக வாழ முடியவில்லை.

ஆக, பரிகாரம் செய்வதை காட்டிலும் பிரார்த்தனை செய்வதை காட்டிலும் ஆமாம்! என்னுடைய வாழ்க்கை சில காலதாமதத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது! நான் ஒரு விஷயத்தை செய்து அதில் தோல்வி அடைந்து விட்டேன்!என்று ஒப்புக்கொள்கின்ற பொழுது நீங்கள் ஒரு விடுதலையைப் பெறுகிறீர்கள்.
அந்த விடுதலையே உங்களுக்கு அடுத்த ஒரு வாழ்க்கைக்கு நல்ல நகருதலாகவும், எதையும் பயமின்றி அணுகக் கூடிய ஒரு அசாத்திய தைரியத்தையும் கொடுக்கிறது. ஆக, நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்து அதை ஒப்புக்கொள்ள எப்பொழுதும் தயங்காதீர்கள்.
நீங்கள் ஒப்புக்கொள்கின்ற அந்த நொடியில் இருந்து தான் புது வெற்றி பாதை பிறக்கிறது. அந்த நொடியில் தான் உங்களை சுற்றி இருக்கக்கூடிய "பயம்" என்கின்ற அந்த பிசாசு விலகுகிறது. ஆக, "ஒப்புக்கொள்ளுங்கள்" அதிலிருந்து வாழ்க்கை துவங்கும். அங்கிருந்து பல மாயாஜாலங்கள் நிகழும். வெற்றி உங்கள் வசம் ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |