பகவத் கீதை: கடினமான நாட்களைக் கடக்க இந்த 5 விஷயங்களை செய்து பாருங்கள்
பகவத் கீதை என்பது மனிதர்கள் வாழும் காலம் வரை அவர்களை வழிநடத்தி செல்லக்கூடிய ஒரு அற்புதமான படைப்பாக இருக்கிறது. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு உபதேசித்த இந்த பகவத் கீதையானது நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து வருகிறது.
அப்படியாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நிறைய நேரங்களில் மிகவும் கடினமான நேரங்களை சந்திப்பதுண்டு. அவ்வாறு கடினமான நேரங்களை பல நபர்களாலும் கடக்க முடியாத ஒரு நிலையும் இருக்கிறது. இவ்வாறான நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? நம் கடினமான காலத்தை எவ்வளவு எளிதாக கடந்து செல்ல வேண்டும் என்று பகவத் கீதையில் நமக்கு எடுத்துரைக்கப்படுகிறது. அதைப் பற்றி பார்ப்போம்.

1.நம்மில் நிறைய நபர்களுக்கு ஏதேனும் ஒரு காரியத்தை செய்வதற்கு முன் அந்த காரியம் முடிந்த பிறகு கிடைக்கக்கூடிய பலன் மீது தான் அதிக ஆர்வம் செல்கிறது. அவ்வாறு ஆர்வம் கொள்வது என்பது ஒரு பற்றுதலை உருவாக்கி விடுகிறது.
இந்த பற்றுதல் தான் நம்மை பல நேரங்களில் துன்பத்திற்கு கூட்டிச் செல்கிறது. ஆக நம்முடைய கடமையை நாளை என்ற ஒரு பிரதிபலன் பாராமல் நம்முடைய வேலையைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு ஏற்படுகின்ற பாதி மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
2. மனிதர்களுடைய மனம் ஆனது கட்டாயம் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். இந்த மனதை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்றால் நாம் சந்திக்கின்ற பாதி பிரச்சனைகளை நாம் தவிர்த்து விடலாம்.
அதாவது தனிமையில் இருக்கும் பொழுது, கோபத்தில் இருக்கும் பொழுது, மகிழ்ச்சியில் இருக்கும் பொழுது, வறுமையில் இருக்கும் பொழுது நம்முடைய மனதை கட்டுப்படுத்திக் கொண்டு நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதில்தான் நம்முடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. ஆக முடிந்த அளவு மனதை நாம் கட்டுப்படுத்தி வாழ்ந்தோம் என்றால் பாதி வெற்றியை நாம் அடைந்து விடலாம்.
3. இந்த உலகத்தில் பிறப்பு என்றால் இறப்பு என்று கட்டாயம் இருக்கிறது. ஆக வெற்றி என்றால் தோல்வியும் அதனுடன் வருவது இயல்புதான். நாம் செய்கின்ற வேலையில் வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அந்த வேலையில் நமக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

4. மனிதர்களாகிய நாம் கட்டாயமாக இந்த உலகம் மாற்றத்திற்கு உரியது என்பதை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். மனிதர்களாக இருக்கட்டும் அல்லது நேர காலமாக இருக்கட்டும் எல்லாம் மாற்றம் என்ற சுழற்சியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அது பகவானின் செயல் என்று நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை கொண்டு வர வேண்டும்.
5. மனிதர்கள் பல நேரங்களில் அவர்களுடைய வலிமையை காண்பதற்கு தவறி விடுகிறார்கள். அவர்கள் பிற மனிதர்களிடம் ஒப்பிட்டு அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை குறைத்துக் கொண்டு வெற்றி பெறுவதற்கு தடைகளை அவர்களுக்கு அவர்களே போட்டுக் கொள்கிறார்கள்.
இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் தங்களுடைய மனதை ஒரு நிலைப்படுத்தி தர்மத்தோடு அவர்களுடைய கடமையை செய்து போராடினால் கட்டாயமாக அவர்களுக்கான பிரதிபலனை பெறுவார்கள். ஆக குழப்பம் இல்லாமல் போராடினோம் என்றால் கட்டாயமாக நமக்கு வெற்றி கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |