சூழ்ச்சி செய்வதால் காரியம் சாதிக்க முடியுமா?
மனிதன் அவனுக்கு பல்வேறு குணாதிசயங்கள் இருக்கிறது.அதாவது போட்டி பொறாமை வஞ்சகம் சூழ்ச்சி என்று தீய எண்ணங்கள் கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.அதே போல் சாந்தம்,பரிவு அன்பு என்று நல்ல எண்ணங்கள் கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
இதில் நல்ல எண்ணம் படைத்தவர்கள் அவர்களுக்கு கடவுள் கொடுத்த அறிவை ஒரு பொழுதும் பிறரை வீழ்த்த வேண்டும் என்று பயன்படுத்துவதில்லை.பிறர் வாழ்க்கையை குழைக்க வேண்டும் என்று ஒரு நொடியும் எண்ணுவதில்லை.
ஆனால் தீய எண்ணம் படைத்தவர்களோ அவர்களின் புத்திசாலித்தனத்தை கொண்டு அடுத்தவர்களை எவ்வாறு சூழ்ச்சி செய்து வீழ்த்தலாம் என்று யோசித்து கொண்டு இருப்பார்கள்.அப்படியாக,எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அவர்களால் வெல்ல முடியுமா?பகவான் கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
பாரதம் போற்றும் மஹாபாரதத்தில் நம் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் எடுத்து கொள்ளலாம்.அப்படியாக,மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை,சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என்று மிக பெரிய சபதம் தனக்கு தானே போட்டு கொண்டான் அர்ஜுனன்.
அதனால்,அர்ஜுனனிடம் இருந்து தப்பிக்க காலையில் இருந்து ஜயத்ரதன் மறைவாகவே இருந்தான்.வீரத்தில் பலம் பொருந்திய துரியோதனன்,கர்ணன் போன்றவர்கள் ஜயத்ரதனுக்கு பாதுகாவலாக இருந்தனர்.ஆதலால்,அர்ஜுனனால் அவனை நெருங்கவே முடியவில்லை.அவனிருக்கும் இடமும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
மாலை நேரமும் நெருங்கிவிட்டது.என்ன கிருஷ்ணா!சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே. ஜயத்ரதனை எப்படிக் கொல்வது, என்றான் அர்ஜுனன்.உடனே கிருஷ்ணர் அர்ஜுனனுக்காக சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார்.உலகம் இருள் சூழ ஆரம்பித்தது.அதனை பார்த்து ஜயத்ரதன் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தான்.
சூரியன் அஸ்தமித்து விட்டது.இனி அர்ஜுனன் சொன்னது போல் தீக்குளித்து விடுவான்"என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான்.உடன் அர்ஜுனனைப் பார்த்து, " அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து,தலை கீழே விழாமல் ,அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார் கிருஷ்ணர்.
காரணம்,ஜயத்ரதனுடைய தந்தை தான் விருத்தட்சரன். அவருடைய தீவிரமான தவ வழிபாட்டால் ஜயத்ரதனைப் பெற்றார்.ஆகா,அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது."உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான்.மிக்க கோபமும்,பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால்,அவன் தலை அறுபட்டு மாள்வான்." என்றது.
அதை கேட்டு,விருத்தட்சரன்,தன் தவ வலிமையால் "யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ,அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும்" எனறு சாபமிட்டிருந்தான்.
அதனால்,அவனின் தலை கீழே விழும் முன் இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி " உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால்,உன் தலை வெடித்து விடும்.அதனால் அருகிலுள்ள அவன் தகப்பனார் விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு "எனறார் கிருஷ்ணன்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான்.அந்த வேளையில் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால்,மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார்.அது பூமியில் விழுந்தது.
தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது. ஆக,பிறர் நமக்கு என்னதான் சூழ்ச்சி செய்யட்டும்,சாபம் விடட்டும்.நம் வாழ்க்கை இறைவன் கையில் உள்ளது.
அவனாலே இந்த உலகம் இயங்குகிறது.அவன் பார்வைக்கு முன் மனிதனின் சாதுர்ய பேச்சும்,வஞ்சக சிந்தனையும்,சூழ்ச்சியும் வேலை செய்யப்போவது இல்லை.ஆக,அவனிடம் விட்டு விடுங்கள் எல்லாம் அவன் பார்த்து கொள்வான்.நம் உயிர்க்கு பகவான் பொறுப்பு.நம்மை காப்பாற்றுவது பகவானின் கடமை.
ஓம் நமோ நாராயணாயா நமஹ
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |