மனதில் அமைதி உண்டாக ஸ்ரீ ராமரின் குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்
பெருமாளின் அவதாரமான ஸ்ரீ ராம பிரான் தெய்விக பொலிவுடனும், மனதில் வற்றாத வலிமையுடனும் வந்த பிரச்சனைகளை சமாளித்தவர். இன்றைய கலியுகத்தில் நல்ல மனம் கொண்டவர்களை பார்ப்பதே அரிதாகி போனது.
தேவை இல்லாத விஷயங்களுக்கு மக்கள் மிகவும் துன்பப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அப்படியாக, வீரத்திலும் குணத்திலும் சிறந்து விளங்கிய ஸ்ரீ ராம பிரானின் குணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
அவருடைய குணங்களை கேட்க நமக்கு மோட்சம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்ரீ ராமபிரான், பறவையான ஜடாயுவை தன் தந்தையாகவே பாவித்து, அந்திம க்ரியைகளைச் அவருக்கு செய்தார். இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில், திருப்புட்குழி தலத்தில், ஜடாயு மகாராஜாவுக்கு ஈமச்சடங்குகள் செய்த ஸ்ரீவிஜயராகவனாக காட்சி கொடுக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் மிகவும் சுயநலமாக மாறி விட்டார்கள். ஆனால் ஸ்ரீ ராம பிரான், தனக்கு எவ்வளவு துன்பம் இருந்தாலும், அடுத்தவருடைய துன்பத்தையும் தன்னுடைய துன்பம் என்று கருதி அவர்கள் துயர் தீர்க்க முற்படுவது அவருடைய மிக சிறந்த குணமாக பார்க்கப்படுகிறது.
வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித: என்ற பிரமாணத்தின் மூலம் இதை நாம் அறியலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதாவது அடுத்தவர் நலனை கருத்தில்கொண்டு, அத்தனை துன்பங்களையும் தானே எவனொருவன் ஏற்றுக் கொள்கிறானோ, அவனையே உத்தமன் எனப் போற்றுகிறோம்.
எனவேதான் ஸ்ரீராமன் தான் முடிசூட்டிக் கொள்ளாமல், வனவாசம் சென்றார். தன் உடன்பிறவாத் தம்பிகளான சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் முடிசூட்டிய பிறகே, தனது முடிசூட்டு விழா நடைபெற வேண்டும் என்பது ராமனின் விருப்பம்.
ஆகவேதான், முதல் தடவை பட்டாபிஷேகம் தடைப்பட்டது. விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு, தான் செய்யவேண்டியதை செய்து முடித்ததாக திருப்தி கொண்டான். சீதையைப் பிரிந்து துன்பக் கடலில் மூழ்கியிருந்தபோதிலும், விபீஷணன் முடிசூட்டிக் கொண்ட வேளையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
அதேபோல், ஸ்ரீ ராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும்போது, அயோத்தி வாழ் மக்கள் அனைவரையும் தன்னுடன் மேலுலகத்துக்கு அழைத்துச் சென்றார். அது மட்டும் அல்லாமல் அயோத்தியில் இருந்த செடி, கொடி, புல், பூண்டு முதலியவற்றுக்கும் முக்தியை அருளினார்.
அதனால் இன்றளவும் ஸ்ரீ ராமரை எவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு நற்கதி உண்டாகும் என்பது தவிர்க்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும், ஸ்ரீ ராம நாமத்தை யார் உச்சரித்து வழிபாடு செய்தாலும் அவர்களுக்கு ஸ்ரீ ராமரின் அருளால் மனதில் நம்பிக்கையும் முகத்தில் பொலிவும் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |