பேய்களை விரட்டும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரையில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 2000 ஆண்டுகள் பழைமையானது.
இந்த அம்மனை வழிப்பட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமும், தீர்க்க ஆயிளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பில்லி, சூனியம் ஏவல் போன்றவற்றில் இருந்தும் அம்மனை வழிப்பட்டு பக்தர்கள் பலன் பெறுகிறார்கள்.
இங்கு சிறப்பம்சமாக ஒரே நாளில் 3 வித ரூபங்களில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். காலையில் வெள்ளாடையும், மத்தியானம் சிவப்பாடையும், மாலையில் நீல நிற ஆடையும் அணியப்படுவதிலிருந்து சரஸ்வதி, லட்சுமி, துர்காவாக ஆராதிக்கப்படுகிறார்.
பசு வடிவில் வந்த அம்மன்
முன்னொரு காலத்தில் வேடன் ஒருவனும், அவனது மகளும் இணைந்து கன்றுக்குட்டி ஒன்றை வளர்த்து வந்தனர். ஒரு நாள் மகள் உயிரிழந்தாள். யாருமற்ற தந்தை அந்த பசுமாட்டு கன்றுக் குட்டியின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்து வளர்த்து வந்தார். ஒரு நாள் இரவு வடனின் தூக்கத்தில் பசுமாடு காணாமல் போவது போல் கனவு வந்தது. உடனே விழித்த வேடனோ பசுமாட்டை பார்த்தபோது அது அங்கேயே இருந்தது. ஆனால், விடிந்ததும் அந்த பசு காணாமல் போயிற்று. பசு கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்தில் அதே அளவில் ஒரு கல் இருந்தது. இந்நிலையில், அங்கே வந்த துறவி ஒருவர் அந்தப் பசு மகாலட்சுமி என்றும் உன் கனவில் வந்தது மகாவிஷ்ணு என்றும் விளக்கினார். பின், வேடனின் இறப்பிற்குப் பின் அந்தக் கல் கவணிப்பாரின்றி போனது.
இச்சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு காட்டுக்குள் ஒரு நாள், பெண் ஒருவர் புல் வெட்டும் கத்தியை ஒரு பாறையில் தேய்க்க, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் அங்கு பராசக்தியின் பேரொளி பரவியிருப்பதை அறிந்து, அந்தக் கற்சிலை பகவதிதான் என்றும், அதை சரஸ்வதி, லட்சுமி, துர்காவாக வழிபட வேண்டும் என்றும், அருகிலுள்ள சிறிய கல் மகா விஷ்ணுவினுடையது என்றும் கூறினார். அன்னை தன்னை ஜோதி வடிவில் வெளிப்படுத்திக் காட்டியருளியதால் அது சோதி ஆன கரை ஆயிற்று. பின்னர் காலப்போக்கில் சோற்றானிக்கரையாக மருவியுள்ளது.
தல வரலாறு
பிரதான கோபுர வாயில் வழியாக நுழைந்தால் பகவதியின் கருவறை கிழக்கு நோக்கியிருக்கிறது. அபிஷேகம் செய்யும் தீர்த்தம் வெளியே செல்வதில்லை. விக்ரஹங்களைச் சுற்றியுள்ள மணலில் மறைந்து, ஒன்றரை மைல் தூரம் வடக்கே உள்ள ஒணக்கூர் தீர்த்தக் குளத்தில் போய்ச் சேர்ந்துவிடுகிறது.
வடகிழக்கில் மேற்கே பார்த்தவாறு தர்மசாஸ்தா திருச்சன்னதி உள்ளது. இதன்முன் தான் பேய், பிசாசு பிடித்தவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அதற்கு அடையாளமாக சன்னதிக்கு முன்னுள்ள தூண் ஒன்றில் ஆணிகள் அடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இங்கு 12 ஆயிரம் புஷ்பாஞ்சலி செய்வதும், அம்மனுக்கு சிவப்பு நிற பட்டுபுடவை காணிக்கையாக கொடுப்பதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் இங்கு உயிர் பலி கொடுக்கப்பட்டாலும் தற்போது அது கைவிடப்பட்டு, சைவ வழிபாடு நடை பெறுகிறது.
வழிபாடுகள்
குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பவர்கள் பிரகாரத்தின் வடக்கு பக்கம் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் விசேஷ பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார்கள். இந்த கோவிலின் கீழ்காவில் நடைபெறும் குருதிபூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொள்கின்றனர். வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த பூஜை தற்போது ஒவ்வொரு நாளும் நடைபெறுகிறது.
மேலும், சோட்டானிக்கரை மகம் என்ற திருவிழா ஆண்டுதோறும் மாசிமகத்தில் நடைபெறுகிறது. அப்போது வந்து வழிபடும் திருமணமான பெண்களுக்கு தீர்க்க ஆயுளும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது.