குழந்தை வரம் அருளும் தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் கோயில்
தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் கோயில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மைசூர் சாலையில் சென்னப்பட்டினத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு மிகத் தொன்மை வாய்ந்த திருக்கோயிலாகும்.
இத்திருக்கோயிலில் ராமஅப்ரமேயர் அரவிந்தவல்லி தாயார் சன்னதிகளையும், தவழும் கோலத்தில் அருள்பாலிக்கும் நவநீதகிருஷ்ணன் சன்னதியையும் காணமுடியும். இத்தலம் சர்வ தோஷங்களையும் குறிப்பாக புத்திர தோஷத்தினையும் சயன தோஷத்தையும் நீக்கும் ஒரு சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. இப்போது இந்த கோயிலின் வரலாற்றினையும் அமைப்பினையும் சிறப்புகளையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தல வரலாறு:
தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் சென்னப்பட்டினம் அருகே அமைந்துள்ளது. இக்கோயின் மூலவர் ஸ்ரீராம அப்ரமேயர் என அழைக்கப்படுகிறார். ‘அப்ரமேயன்’ என்றால் ‘எல்லை இல்லாதன்’ என்பது பொருளாகும்.
வனவாசத்தின்போது ஸ்ரீ ராமர் இங்கு வந்து தாங்கி மூலவரான அப்ரமேயர் பெருமாளை வழிபட்டதாக புராணங்கள் கூறுகிறது. இதனால் இந்த இடம் ‘தட்சிண அயோத்தி’ அதாவது ‘தெற்கு அயோத்தி’ என அழைக்கப்படுகிறது. ராமரால் வடிக்கப்பட்ட பெருமாள் என்பதால் இதற்கு ராமர் அப்ரமேயர் என்ற பெயர் ஏற்பட்டது.
இக்கோயில் நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ மன்னனால் கட்டப்பட்டதாக கல்வெட்டு சான்றுகள் கூறுகிறது. ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள நவநீத கிருஷ்ணரின் திருவுருவம் சாளக்கிராம கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை புகழ்பெற்ற மகான் விஜயராசர் பிரதிஷ்டை செய்தார் என்று வரலாறு கூறுகிறது.
புகழ்பெற்ற தாச சாகித்திய கவிஞரான மகான் புரந்தரதாசர் ஒருமுறை இந்த கோயிலுக்கு வருகை புரிந்துள்ளார். அப்போது அந்த கோயிலின் நடை மூடப்பட்டு இருந்ததால் அவர் வெளியே இருந்தபடி தவழ்ந்து வரும் கண்ணனின் அழகை பார்த்து, “ஜகதோதரணா அடிசிதள யசோதா..” என்ற கீர்த்தனையை பாடியுள்ளார்.
அவரது பக்தியை கண்டு மெச்சி, கோயில் கதவுகள் தானாக திறந்து உள்ளிருந்த தவழும் கண்ணன் தலையை திருப்பி புரந்ததாசரை பார்த்ததாக புராணம் கூறுகிறது. இந்த அற்புதம் நிகழ்ந்ததன் காரணமாக இந்த தலத்தின் நவநீதகிருஷ்ணன் சிலை வந்து தலை திருப்பி பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தவழும் கண்ணனின் திருக்கோலத்தை இந்தியாவில் வேற எங்கேயும் பார்க்க முடியாது. ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் போன்ற வைணவ ஆச்சாரியர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் புரிந்துள்ளனர். இதனால் இந்த தலம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புண்ணிய பூமியாக விளங்குகிறது.
தல அமைப்பு:
தொட்டமளூர் கோயில் திராவிட கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான கோயிலாகும். இங்கு ராஜா கோபுரம் மற்றும் பிரதான நுழைவாயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. அழகிய வெளிப்பாடுகளுடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம் இத்தலத்தின் பிரதான நுழைவாயிலாக உள்ளது. இதனை கடந்து உள்ளே சென்றால் முதலில் மூலவர் சன்னதியை காணலாம்.
ஸ்ரீ ராம அப்ரமேயர் மூன்றடி உயரத்தில் சாளக்கிராம கல்லினால் ஆன திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவருடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியர்களும் உடனிருந்து அருள் புரிகின்றனர். மூலவர் சன்னதியில் இருந்து தனியே தென்மேற்கு திசையில் அரவிந்தவல்லி தாயார் சன்னதி அமைந்துள்ளது.
தாயார் கிழக்கு நோக்கிய வண்ணம் அருள் பாலித்து வருகிறார். தாயார் ஆலயத்தின் வடமேற்கில் உள்ள விஷ்ணு தீர்த்தத்தில் சுயம்புவமாக தோன்றியவர் என புராண வரலாறு கூறுகிறது. கோயில் பிரகார வளாகத்தின் வடமேற்கு பகுதியில் நவநீதகிருஷ்ணன் சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள கிருஷ்ணரின் விக்ரகம் தவழும் கோலத்தில் தலையை திருப்பி பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
குழந்தை வரும் வேண்டி வரும் பக்தர்கள் இந்த கோயில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். பிரகாரத்தில் சுதர்சனர், நரசிம்மர், வேணுகோபாலர், ராமானுஜர், வேதாந்த தேசிகர் உள்ளிட்ட மற்ற ஆழ்வார்களும் ஆச்சாரியார்களுக்கு என தனி சன்னதிகள் அமைந்துள்ளன. ராஜகோபுரத்தின் எதிரில் புரந்தரதாசருக்கு என ஒரு தனி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தான் அவர் கிருஷ்ணனை பாடி தரிசனம் பெற்றதாக கூறப்படுகிறது. நவநீதகிருஷ்ணன் சன்னதி வாசல் அருகில் துலாபாரம் செய்யும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையின் எடைக்கு நிகராக வெல்லம் செலுத்தி நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.
தல சிறப்புகள்:
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்கின்றனர். இந்தியாவில் வேறு எங்கும் காண இயலாத வகையில் குழந்தை கிருஷ்ணர் தலையை திருப்பி தவழும் கோலத்தில் அருள் புரிவது தனி சிறப்பாகும். வெள்ளிக்கிழமைகளில் தாயாரை செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வில்வார்ச்சனை செய்து வழிபட்டால் செல்வம் பெருகும் தரித்திரம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவிழாக்கள்:
இங்கு பல விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
கோகுலாஷ்டமி(கிருஷ்ண ஜெயந்தி):
நவநீதகிருஷ்ணன் அவதாரத் திருநாளான கோகுலாஷ்டமி மற்றும் அதை தொடர்ந்து உறையடி திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ராம நவமி:
மூலவர் ராம அப்ரமேயர் என்பதால் ராமநவமிக வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி: அரவிந்த வல்லி தாயாருக்கு நவராத்திரி நாளில் சிறப்பான திருமஞ்சனம் பூஜைகளும் நடைபெறுகின்றன.
மார்கழி மாத உற்சவங்கள்:
மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
புரட்டாசி சனிக்கிழமைகள்:
பெருமாளுக்குரிய நாளான புரட்டாசி சனிக்கிழமைகளிலும் ஐப்பசி, தை, மாத பிறப்புகளிலும் கருட சேவை விவரிசையாக நடைபெறுகிறது.
மாதாந்திர ரோகிணி நட்சத்திரம்:
கிருஷ்ணரின் நட்சத்திரமான ரோகினி நட்சத்திர நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் சென்னப்பட்டினம் அருகே அமைந்துள்ள தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் கோயில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமாகும். இங்கு வந்தால் சகலதோஷங்களும் விலகி அமைதி கிடைக்கிறது.
குறிப்பாக புத்திர தோஷம் மற்றும் சயன தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த தட்சிண அயோத்தி மற்றும் குருவாயூரப்பன் கோயில் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, பக்தர்களின் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியை தரும் கருணை மிகு தலமாக தொட்டமளூர் நவநீதகிருஷ்ணன் கோயில் திகழ்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







