2025 விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் சிலை வாங்கும் பொழுது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை
நம்முடைய வாழ்க்கையில் தடைகளை அகற்றி அருள் புரிபவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடி வருகின்றோம். அப்படியாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
மேலும், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நம் வீடுகளில் மண் விநாயகர் சிலையை வாங்கி வைத்து வழிபாடு செய்வோம். அந்த வகையில் நாம் விநாயகர் சிலையை வாங்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம். விநாயகப் பெருமான் பல வடிவங்களில் நமக்கு காட்சி தருகிறார்.
ஒவ்வொரு வடிவங்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு சிறப்பு அம்சங்கள் அமைந்திருக்கிறது. எந்த உருவ அமைப்பு கொண்ட விநாயகர் சிலையை நம் வீட்டில் வாங்கி வைத்து வழிபாடு செய்தால் நம் வீடுகளில் அதிர்ஷ்டமும் நேர்மறை சக்தியும் பெருகி செல்வ வளம் அதிகரிக்கும் என்று பார்ப்போம்.
1. நம் வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கும் பொழுது விநாயகருடைய துதிக்கை இடது பக்கமாக திரும்பி இருக்கிறதா என்று கவனித்து பார்த்து வாங்க வேண்டும். இடது பக்கம் துதிக்கையை திருப்பி இருக்கும் விநாயகருக்கு வக்ர துண்ட விநாயகர் என்று பெயர். இந்த விநாயகர் மிகவும் மங்களகரமானவர்.
இவரை வாங்கி நம் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யும்பொழுது வீடுகளில் குடும்ப ஒற்றுமை பெருகி குடும்பத்தில் செய்யும் காரியம் அனைத்தும் தடை இன்றி வெற்றியை பெற்றுக் கொடுக்கும். மேலும் வலது பக்கம் துதிக்கை திரும்பி இருக்கும் விநாயகப் பெருமானும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்றாலும் அந்த விநாயகர் பெருமானை பொது இடங்களிலும் கோவில்களிலும் மட்டுமே வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
2. விநாயகர் சிலை வாங்கும் பொழுது சரியான நிறம் தேர்வு செய்து வாங்குவதும் அவசியம். அதாவது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறங்களில் விநாயகர் சிலைகள் இருப்பது மிகவும் விசேஷமாகும். இந்த நிறங்களில் விநாயகர் சிலையை நம் வீடுகளில் வாங்கி வைத்து வழிபாடு செய்யும் பொழுது வீடுகளில் ஞானமும் செல்வமும் பெருகும்.
3. இந்து மத புராணம் படி விநாயகரின் வாகனமாக மூஷிகம் அல்லது சுண்டெலி கருதப்படுகிறது. ஒருவருக்கு உண்டாகும் ஆணவம் மற்றும் ஆசைகளை அடக்கி கட்டுக்குள் வைப்பதன் அடையாளமாக மூஷிகம் கருதப்படுகிறது. அதனால் விநாயகர் சிலையை வாங்கி வைத்து வழிபாடு செய்வது நமக்கு அளவில்லாத நன்மையை அளிக்கிறது.
4. விநாயகர் கைகளில் பிரசாதத்தை வைத்திருப்பது போன்ற சிலையை வீட்டில் வாங்கி வைத்து வழிபாடு செய்வதும் நமக்கும் மிகச் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும். இவ்வாறு வாங்கி வைத்து வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வீடுகளில் குறைவின்றி செல்வமும் அறிவும் ஞானமும் வளர்கின்றது. அதிலும் குறிப்பாக மோதகம் லட்டு போன்ற பிரசாதங்களை விநாயகர் கைகளில் வைத்திருக்கும் உருவம் நமக்கு வீடுகளில் இனிமையை கொண்டு வந்து சேர்க்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







