செய்த பாவங்களில் இருந்து விடுபட ஞானி சொன்ன எளிய வழி
மனிதனாக பிறந்தால் கட்டாயம் நாம் ஏதேனும் சூழ்நிலையில் பாவங்கள் செய்து விடக்கூடும். அது இயல்பு என்றாலும் நாம் செய்யும் பாவத்தை உணர்ந்து, அதற்கான பரிகாரத்தை நாம் நிச்சயம் செய்யவேண்டும்.
அந்த வகையில் நாம் செய்த பாவங்களில் இருந்து விடுதலை பெற ஞானி சொன்ன வழிமுறையை பற்றி பார்ப்போம். தங்களுடைய பாவங்களை போக்க ஞானிகளை சந்திக்க இரண்டு நபர்கள் வந்தார்கள். அவர்கள் ஞானியை பார்த்து சுவாமி நாங்கள் செய்த பாவத்தில் இருந்தும், பிறவி துன்பத்தில் இருந்தும் விடுதலை பெற வழிக்காட்டுங்கள் என்று வேண்டிக்கொண்டனர்.
அதில் ஒருவர் ஞானியை பார்த்து, சுவாமி நான் மிக பெரிய பாவம் செய்து விட்டேன். ஆனால் இப்பொழுது என் மனம் நான் செய்த அந்த பாவத்தை எண்ணி மிகவும் வருந்துகிறது. இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள் என்றார்.
அவரை தொடர்ந்து மற்றொருவர் சுவாமியை பார்த்து, சுவாமி நான் அவ்வளவு பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சிறு சிறு பொய்களும், சிறு சிறு ஏமாற்றங்களும் செய்திருக்கின்றேன். நான் செய்தது அவ்வளவு பெரிய பாவம் என்று சொல்லிவிடமுடியாது.
இருந்தாலும், எனக்கு விரைவில் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபட வழி சொல்லுங்கள் என்று எதையுமே உணராமல் கேட்டார். ஞானியிடம் முதல் கேள்வி கேட்ட அந்த நபரிடம், சரி நீ சென்று பெரிய பாறை ஒன்றைத் தூக்கி வா என்றார். இரண்டாவது கேள்வி கேட்டவனிம் நீ சென்று ஒரு கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா என்றார்.
இருவரும் அவ்வாறே செய்தனர். முதல் நபர் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான். அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான். பிறகு ஞானி இருவரிடமும், சரி இப்பொழுது இருவரும் தாங்கள் எங்கு இருந்து கற்கள் எடுத்து வந்தீர்களோ அதை அங்கேயே விட்டு வாருங்கள் என்றார்.
முதல் நபர் பாறையை எடுத்துக் கொண்டு அவர் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாவது நபர் தயக்கத்துடன் சுவாமி நான் எப்படி கற்கள் எடுத்த வந்த சரியான இடத்தை கண்டுபிடித்து போடுவது என்று கேட்டார்.
அதற்கு ஞானி நீ சொல்வது போல் அது முடியாத காரியம் தான். அதோ பாறையை எடுத்து வந்தவன் பெரிய தவறு செய்தான் அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் கேட்டு வந்திருக்கிறான். பாறையை எடுத்த இடத்திலேயே போட்டு விட்டு வந்தது போல அதற்கான வழியை செய்து விரைவில் பிறவித் துன்பத்தில் இருந்து விடுபடுவான்.
ஆனால், நீயோ சிறு சிறு தவறுகளாக பல செய்தும் அதை தவறு என்று கூட உணராதவன். உன்னால் யார் எல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூட கட்டாயம் உனக்கு நினைவு இருக்காது.
ஆக எவன் ஒருவன் தான் செய்த தவறை உண்மையில் தவறு என்று எண்ணி வருத்தப்பட்டு அந்த தவறுக்கும் மேலான நன்மைகளை செய்கின்றானோ அப்பொழுது தான் அவனுக்கு பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது. அதுவரை அவர்களுக்கு பிறவி துன்பத்தில் இருந்து விடுபடுவது கடினமே என்றார்.
அதனால், தவறு செய்வது அறியாமை என்றாலும், அந்த அறியாமையால் செய்த தவறை உணர காலம் ஒரு வாய்புகள் கொடுக்கும். அப்பொழுது நாம் அதை திருத்தி கொண்டோம் என்றால் நாம் தப்பித்து கொள்ளலாம். அல்லது பாவம் என்னும் பிடியில் சிக்கி நாம் மிகுந்த வேதனை அடையும் சூழல் உண்டாகி விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |