நினைத்தது நிறைவேற இந்த முறையில் விரதம் இருந்து பாருங்கள்
நாம் மனதில் நினைத்த காரியம் நிறைவேற இறைவனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வதுண்டு. விரதம் இருப்பது என்பது நம்முடைய மனதையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடிய ஒன்றாகும். நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நமக்கும் இறைவனுக்குமான தொடர்பை வலுவடைய செய்கிறது.
மேலும், விரதம் இருக்கும் பொழுது நாம் இடைவிடாமல் இறைவனையே வழிபாடு செய்வதால் நம்முடைய மனதில் எதிர்மறை ஆற்றல்கள் விலகி அமைதி உண்டு செய்கிறது. அப்படியாக, நாம் விரதம் இருக்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான 8 விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1. நாம் விரதம் இருக்கும் முன் நாம் எதற்காக விரதம் இருக்கப்போகின்றோம் என்று தெளிவாக முடிவு செய்யவேண்டும். பிறகு எந்த தெய்வத்திற்கு விரதம் இருக்கப்போகின்றோம் என்று உறுதி செய்து அந்த தெய்வத்தை நினைத்து மனதார பிரார்த்தனை செய்து கொண்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
2. ஒவ்வொரு தெய்வத்திற்குரிய வழிபாடுகளும் மாறுதல் கொண்டவை. அந்த வகையில் நாம் எந்த தெய்வத்திற்கு விரதம் இறுகின்றமோ அந்த தெய்வத்திற்குரிய விரத முறைகளும் வழிபாடுகளையும் சரியாக தெரிந்து கொண்டு, பின்பு அதன்படி விரதம் இருக்க தொடங்க வேண்டும்.
3. எப்பொழுதும் விரதம் இருந்து நிறைவு செய்யும் பொழுது மிகவும் சாத்வீகமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். காரமான, பதப்படுத்தப்பட்ட அல்லது அசைவ உணவுகள் எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும்.
4. விரதம் இருக்கும் நாளில் கட்டாயம் நாம் இறைவனுடைய மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது நம் விரதத்திற்கு கூடுதல் பலன் கிடைக்கிறது.
5. விரதம் இருக்கும் நாளில் கண்டிப்பாக அதிகாலை எழுந்து குளித்து வழிபாடு செய்யவேண்டும்.
6. நாம் விரதம் இருந்த பலன் முழுமையாக கிடைக்க மனதில் உள்ள எதிர்மறை சிந்தனை இல்லாமல், பிறரை பற்றி புறம் பேசாமல், கடுமையான வார்தைகள் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும்.
7. விரதம் இருக்கும் காலத்தில் முடிந்த அளவு நன்மைகளை செய்யுங்கள். அதாவது பிறருக்கு உதவி செய்யுதல், தானம் வழங்குதல் போன்ற விஷயங்களை செய்வதால் அதீத பலன்கள் கிடைக்கும்.
8. விரதம் இருக்கும் காலத்தில் அதிகமான வேலை பளுவை எடுத்து கொள்ளாதீர்கள். அந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை விட மன மற்றும் ஆன்மீக நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |