யாருடைய விதி எங்கே? எப்படி முடியும்? எப்படி தெரிந்து கொள்வது
இந்த உலகத்தில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் அதனுடைய இறப்பின் தேதியையும் நிர்ணயித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில், யாருடைய விதி எங்கே எப்பொழுது முடியும் என்று எவரும் அறியாத ஒரு சூழ்ச்சி விளையாட்டில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில், யாருடைய விதி எங்கே எப்படி முடியும் என்பதற்கு ஒரு குட்டி கதையை பார்ப்போம்.
இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் ஆசையாக வளர்த்து வந்தால். ஒருநாள் அந்த கிளி நோய் வாய் பட்டுவிட்டது. உடனடியாக மருத்துவரை கூப்பிட்டு அந்த கிளியை பரிசோதிக்க அந்த மருத்துவர் அந்த கிளி பிழைக்காது என்று சொல்லிவிட்டார்.

உடனடியாக தன்னுடைய கணவனை அழைத்த இந்திராணி எப்படியாவது இந்த கிளியை காப்பாற்றுங்கள். கிளி இறந்து போனால் நானும் இறந்து விடுவேன் என்றான். இந்திரனும் கவலைப்படாதே இந்திராணி! நான் உடனே பிரம்மாவிடம் சென்று இதைப்பற்றி முறையிடுகிறேன் என்றார். ஒவ்வொருவருடைய தலை எழுத்து எழுதக்கூடிய இறைவன் பிரம்மா தானே.
அவரிடம் சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றி எழுதி விடுவோம் என்று இந்திரன் பிரம்மாவிடம் சென்று இந்த விஷயத்தை கூறுகிறார். விஷயத்தை கேட்ட பிரம்மா, இந்திரனை பார்த்து இந்திரா படைப்பது மட்டுமே என்னுடைய வேலை.
உயிர்களை காப்பது அந்த பகவான் மகாவிஷ்ணுவின் தொழில் என்றார். ஆகையால், அவரிடம் தான் உதவியை கேட்க முடியும் என்று இந்திரனை அழைத்துக் கொண்டு பிரம்மாவும் இந்திரனும் மகாவிஷ்ணுவை பார்ப்பதற்கு செல்கிறார்கள். மகாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்து பிரம்மா உதவியை நாடுகிறார்.
ஆனால், மகாவிஷ்ணு உயிர்களை காப்பது நான்தான். ஆனால், உன்னுடைய கிளி இறக்கும் தருவாயில் இருக்கிறது. ஆதலால், அழிக்கும் தொழிலை மேற்கொள்கின்ற சிவன் தான் காப்பாற்ற வேண்டும். வாருங்கள் நானும் உங்களுடன் வந்து சிவபெருமானிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு பகவான்.

விவரங்களை அறிந்த சிவபெருமான் அழக்கும் தொழில் என்னுடையது தான். உயிர்களை எடுக்கும் பொறுப்பை நான் எமதர்மராஜாவிடம் ஒப்படைத்து உள்ளேன். வாருங்கள் நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்று அவர்களையும் அழைத்துக் கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.
எமதர்மராஜா தன்னுடைய அவைக்கு சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகிய நால்வரும் வருவதை கண்ட எமன் உடனே எழுந்து ஓடி வந்து வரவேற்கிறார். பிறகு விஷயம் முழுவதையும் கேட்ட எமதர்மன் ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில் எந்த சூழ்நிலையில் என்ன காரணத்தால் எடுக்க வேண்டும் என்று காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்க விட்டு விடுவோம்.

அந்த ஓலை அறுந்து விழுந்து விட்டதால் அவரின் ஆயுள் முடிந்துவிடும் என்றும் சரி வாருங்கள் அந்த அறைக்குச் சென்று கிளியின் ஆயுள் நூல் எது என்று பார்த்து அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச் செல்கிறார். அப்படியாக, இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன் எமதர்மர் ஆகிய ஐவரும் அந்த அறைக்கு செல்கின்றனர்.
அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது. உடனே அவர்கள் வேகமாக சென்று அந்த ஓலையை எடுத்துப் பார்க்கின்றனர். அது கிளியின் ஆயுள் ஓலை. ஐவரும் அவசரமாக அதனை படித்துப் பார்க்கிறார்கள்.
அதில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன், எமதர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக அந்த அறைக்குள் நுழைகிறார்களோ அப்போது அந்த கிளி இறந்துவிடும் என்று எழுதப்பட்டு இருந்தது. இதுதான் விதி.
ஆக, ஒரு உயிர் எங்கே எப்போது எப்படி முடியும் என்பது எழுதியவனுக்கே தெரியாது என்பது தான் உண்மை. ஆகையால், நம்முடைய கடமையை செய்வதில் சரியாக இருந்து விட்டால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நடப்பது இயல்பாக நடந்து கொண்டே தான் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |