கடினமான காலத்தை கடக்க இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து விடுங்கள்
துன்பம் என்பது மனிதனுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் அல்ல மாறாக அது ஒரு இனிமையான உணர்வு. பல சுவை விருந்து உண்ண யாருக்குத்தான் ஆசை இல்லாமல் இருக்கும். அதேபோல் தான் மனிதர்களும் பல சுவையான உணர்வுகள் கலந்த இன்ப துன்பங்களை அனுபவித்தாக வேண்டும் என்பதும் இயற்கையின் விருப்பமாக இருக்கிறது.
அந்த வகையில் துன்பம் மற்றும் கஷ்ட காலங்களை நாம் எல்லோரும் கட்டாயம் சந்திக்க வேண்டிய நிலை வரும். அப்படியாக வருகின்ற துன்பத்தை எவ்வாறு கடந்து செல்வது என்று பார்ப்போம்.
துன்ப காலங்களில் தான் நாம் பலர் உண்மை முகத்தை அறிந்து கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் துன்ப காலங்களில் நாம் செய்த பாவ புண்ணியங்களை நாம் உணர்ந்து கொள்ள முடியும். ஆக யாராக இருப்பினும் அவர்களுடைய கர்ம வினையையும் ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு பிறவியில் செய்த பாவத்தையும் உணரும் நிலை வரும், அவை உணர்ந்த பிறகு அவர்கள் கட்டாயம் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்திப்பார்கள்.
ஆனால் அதற்கு சில முக்கியமான குண நலன்கள் அவசியம். அதாவது எத்தனை பெரிய சோதனை காலங்கள் வந்தாலும் அறம் தவறாமலும், நெறி தவறாமலும் நடக்கும் மனிதனுக்கு இறுதியில் இந்த பிரபஞ்சம் கொடுக்கும் பரிசு அவன் துன்பங்களிலிருந்து விடுதலையும் அவன் துன்பகாலத்தில் காத்த பொறுமைக்கு வெற்றியும் ஆகும்.
இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் அரிச்சந்திர மகாராஜா ஆவார். விதியால் சதியால் நடந்த அத்தனை துயரத்தையும் அவர் பொறுத்துக் கொண்டு அறம் தவறாமல் நடந்த செயலினால் அவருக்கு இறைவனும் தேவர்களுமே வந்து ஆசீர்வதித்து இழந்ததை மீட்டுக் கொடுத்தார்கள்.
ஆக கஷ்ட காலங்களில் நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் "இதுவும் கடந்து போகும்" இன்றைய நாளை நான் கடந்து விட்டால், இன்றைய துன்ப காலத்தை நான் தாண்டி விட்டால் நாளை என்ற ஒரு வெளிச்சம் எனக்காக காத்திருக்கும். என்னுடைய பொறுமைக்காகவும் என்னுடைய அறம் தவறாத நெறியும் என்றோ ஒரு நாள் என்னை வாழ வைக்கும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.
ஏன் மனிதன் கொண்ட நல்ல உள்ளத்திற்கு துன்பம் கொடுக்கும் கிரகங்கள் கூட மனம் இறங்கி வரலாம். அதனால் துன்பம் வரும் காலங்களில் மனம் பதட்டமடையாமல் எவர் ஒருவர் இறைவனை சரணடைந்து வேண்டுதல் வைக்கிறார்களோ, கட்டாயம் அவர்கள் வீழ்ந்து போவது இல்லை. துன்பம் வந்தால் அதிலிருந்து தப்பித்து ஓட வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதனுடன் பயணம் செய்ய தயாராகுங்கள்.
துன்பமானது நமக்கு பல இனிமையான பாடத்தை கற்றுக் கொடுக்ககூடியது. அவை நம்முடைய ஆன்மாவை பக்குவப்படுத்தக் கூடியது. பக்குவப்பட்ட ஆன்மா மனதில் இறைவன் நிலையாக நிற்கிறான். அதனால் வாழ்க்கையில் ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் துன்ப காலங்களை விழுங்கிக் கொள்ள தயாராகுங்கள்.
பொறுமையாகவும் நிதானமாகவும் பிரபஞ்சம் கொடுக்கின்ற துன்பத்துடன் ஒன்றிணைந்து போராட பழகிக் கொள்ளுங்கள். இறுதி என்பது கட்டாயம் உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். இந்த பிரபஞ்சம் முதலில் அதர்மத்திற்கு துணையாக நிற்பது போல் இருந்தாலும் இறுதியில் அது வந்து சேரும் இடம் தர்மம் பக்கமாக தான் இருக்கும்.
நல்ல உள்ளம் படைத்தவர்களும் அறத்தை பின்பற்றும் மனிதர்களும் துன்பத்தை வேண்டுமானாலும் சந்திக்கலாம். பலமுறை பல மனிதர்கள் முன் அவர்கள் வீழ்ந்து போகலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் வாழ்ந்து போகாமல் இறப்பதில்லை. அவர்களை வாழ வைக்காமல் இந்த பிரபஞ்சம் விடுவதுமில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







