ஞானம் அடைவது எப்படி?

By வாலறிவன் Aug 13, 2024 07:00 AM GMT
Report

உங்கள் வயதிற்கும் ஞானத்திற்கும் சம்மந்தம் இல்லை இன்றும் எத்தனையோ முதியவர்கள், நடுத்தர வயதினர் சிறுவர்களின் பக்குவம் கூட இல்லாத நிலையில் இருக்கிறார்கள்.

 உங்கள் அனுபவத்திற்கும் ஞானத்திற்கும் சம்மந்தம் இல்லை, அனுபவசாலிகள் என கூறப்படும் பல பேர் பணம், புகழ், பதவி, வசதி, அதிகாரம் என பல போதையை தலையிலும் சுமந்தே தெரிகின்றனர்.

 உங்கள் அறிவுக்கும் (படிப்பறிவு) ஞானத்திற்கும் சம்மந்தம் இல்லை, மெத்த படித்தவர்கள் தான், ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் அறிவு வெறும் ஏட்டு சுரைக்காய் தான், அதனால் அவர்களுக்கும் பலன் இல்லை அடுத்தவர்க்கும் பலன் இல்லை அப்படியானால் ஞானத்தை எப்படி தான் அடைய முடியும்?

அறிவு (படிப்பறிவு), அனுபவம், வயது, இது எல்லாம் இல்லாமல் மனதிற்குள் ஒரு மையம் உள்ளது.

ஞானம் அடைவது எப்படி? | How To Get Wisdom Spiritual Worship

அந்த இடத்தை நோக்கி பயணிப்பவர்களுக்கே ஞானம் கிடைக்கும்., இப்போது அடுத்த சந்தேகம் துவங்கி இருக்கும் அது எப்படி அந்த மையத்தை நோக்கி செல்ல முடியும் என்று, இது தியானத்தில் மட்டுமே சாத்தியப்படக்கூடியது ஆகும்

ஓஷோவிடம் ஒருமுறை இந்த கேள்வியை கேட்டபோது அவர் கூறிய பதில் இந்த பூட்டை திறக்கும் சாவியாக இருக்கும் கேட்கப்பட்ட கேள்வி :- நீங்கள் அடிக்கடி , உங்கள் மையநிலையை நோக்கிச் செல்லுங்கள் என்று கூறுகிறீர்கள்.

இந்த மையநிலை என்றால் என்ன ? இதைநோக்கி எப்படிச் செல்லுவது ? கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும்பொழுது , இருட்டைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லையே ? இது அலுப்பாக இல்லையா ?

எண்ணங்களும் , உணர்வுகளும் மாறிமாறி வந்தபடியே இருக்கின்றன . இதை எப்படி வெறுமனே பார்ப்பது ? இதற்கு ஓஷோ கூறிய பதில் " ஆமாம் , உண்மைதான் . நீங்கள் வேகமாகச் செயல்படப் பழக்கப்பட்டிருக்கிறீர்கள்.

இப்பொழுது நான் ' மெல்லமெல்ல அடிமேல் அடிவைத்து , உங்கள் கவனத்தை காலடியில் மாத்திரம் வைத்து ஒருமணி நேரத்தில் சுமார் 20 - லிருந்து 25 அடி தூரம் மாத்திரம் நடங்கள் ' என்று சொன்னால் உங்களால் கடைப்பிடிக்க முடியுமா ?

இதுவும் ஒரு தியானம்தான் ! ஆனால் , நீங்கள் என்ன சொல்லுவீர்கள் ? இது என்ன சோம்பேறித்தனமான வேலை ? எவ்வளவு குறுகியதூரம் அலுப்பான வேலை ? " என்றுதான் கூறுவீர்கள்.

ஞானம் அடைவது எப்படி? | How To Get Wisdom Spiritual Worship

' பழக்கத்தை மாற்றிக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லைதான் . ஆனால் , விடாமுயற்சியுடன் மாற்றித்தான் ஆகவேண்டும் நீங்கள் தியானத்தில் முன்னேறவேண்டுமானால் ! '

அடுத்து , உங்கள் மையநிலை என்பது எண்ணமற்ற உயிர்த்தன்மைதான் வேறுஒன்றும்இல்லை ! நீங்கள் எந்த அளவுக்கு உங்களுடைய எண்ண ஓட்டங்களை ஒரு சாட்சியாக நின்று பார்க்கிறீர்களோ ,அப்பொழுது எண்ண ஓட்டம் குறையக் குறைய உங்கள் சாட்சித்தன்மை அதிகமாகும்.

அப்பொழுது நீங்கள் தானாகவே அந்த மையநிலையை நோக்கிச் செல்லுவீர்கள் . அவ்வளவுதான் ! அந்த மையநிலையை நோக்கிச் செல்லுவது என்றால் உங்கள் எண்ணங்களிலிருந்து மெல்ல மெல்ல விடுதலையாவது என்றுதான் அர்த்தம்.

கண்களை மூடிக்கொண்டு நம் உள்ளே பார்க்கும்பொழுது , இருட்டைத்தவிர வேறு எதுவும் தெரியவில்லையே என்று கேட்கிறீர்கள் . உண்மைதான்.

ஒருநிகழ்ச்சி ..டேவிட்ஹும் ( David Hume ) என்ற ஒரு சிறந்த ஆங்கிலேயத் தத்துவவாதி , கீழைநாட்டு உபநிஷத்தைப் படித்துவிட்டு , தியானம் செய்ய முயற்சித்தார்.

ஞானம் அடைவது எப்படி? | How To Get Wisdom Spiritual Worship

ஆனால் அவரால் அதில் ஆழமாகச் செல்ல முடியவில்லை . சிறிது செய்துவிட்டு , ' இது என்ன அலுப்பான வேலை ? எண்ணங்களும் உணர்வுகளும் எப்படி மாறி மாறி வருகின்றன.

இவற்றை வெறுமனே பார்ப்பதால் என்ன பிரயோஜனம் ? என்று வெறுப்படைந்தார் . இவரைப்போலத்தான் 100 - க்கு 90 சதவிகிதம் மக்கள் இருக்கிறார்கள் ! அதில் நீங்களும் அடக்கம்.

தியானத்திற்கு முதல் தகுதி பொறுமை ! பொறுமை இல்லாதவர்கள் இந்த வேலையற்ற வேலைக்கு வராமல் இருப்பதே நல்லது ! ஹும் , இன்னும் சற்று பொறுமையாக தியானத்தைக் கடைப்பிடித்திருக்கவேண்டும்.

அதாவது குறைந்தது சுமார் 2 - லிருந்து 3 மாதம் ! அப்பொழுது எண்ணங்களும் , உணர்வுகளும் மெல்ல மெல்ல அடங்கி வருவதைக் கண்டு அவரே ( டேவிட்ஹும் ) ஆச்சரியப்பட்டிருப்பார் . வெறுமனே சாட்சியாக நின்று பார்ப்பதுகூட அவ்வளவு சுலபமல்ல.

ஏனெனில் நீங்கள் ( மனம் ) அப்படி குறுக்கே பாய்ந்து பாய்ந்து பழக்கப்பட்டிருக்கிறீர்கள் . வெறுமனே பார்க்கும்பொழுது உங்களை அறியாமலே உங்களுடைய இன்னொரு மனம் குறுக்கே கண்டிப்பாகப் பாயும்.

இது பழக்கதோஷம் . இதை நீங்கள் ஒரேநாளில் இல்லை ஒரே வருடத்தில் சாதிக்கமுடியாது ! தேவை பொறுமை ! பொறுமை !! பொறுமை !!! விடாமுயற்சி ! விடாமுயற்சி !! விடாமுயற்சி !!!

அப்படி மனம் குறுக்கே பாயும்பொழுது அதையும் சாட்சியாக நின்று பார்த்து மெல்ல அதை அகற்றவும் . இது பல முறை நடக்கும்.

சலித்துக்கொள்ளாதீர்கள் ! பிறகு மெல்ல மெல்ல எண்ண ஓட்டம் குறைந்து , அதன் இடையில் இடைவெளி ஏற்படும் . இந்த இடைவெளி ஏற்பட்டாலே , நீங்கள் தியானத்தில் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் மேலும் மேலும் தியானத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல இந்த இடைவெளி அதிகமாகி ஒரு கட்டத்தில் ஒன்றுமே அற்றநிலை ( Empty ) ஏற்படும் ! இதற்குப் பல வருடங்கள் ஆகலாம் . அல்லது பல பிறவிகள்ஆகலாம் ! இதைக் கண்டு நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள்.

ஞானம் அடைவது எப்படி? | How To Get Wisdom Spiritual Worship

இது இறப்பு உணர்வையும் , பேரின்ப உணர்வையும் ஒருங்கேகொடுக்கும். அப்பொழுது‬‬தான் , ' தன்னை , இழக்கிறார் . அப்பொழுது உங்கள் உள்ளே காரிருளை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

பிறகு மெல்ல மெல்ல மெல்லிய வெளிச்சத்தை உணர்வீர்கள் ! அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது , ஜுவாலையும்இருக்காது . அதிகாலை ஒளியைப் போல குளிர்ச்சியாக இருக்கும்.

இதைத்தான் ஹிந்துக்கள் ' சந்தியா ' (Santhiya ) என்று அழைப்பார்கள் . இதன் அர்த்தம் ' இருட்டும் ஒளியும் கலந்த மங்கலானநிலை ' என்று பொருள்.

அப்பொழுதுதான் உங்களுக்கு ' நீங்கள்யார் ? என்பது விளங்கும் ! அந்த ஒளிதான் நீங்கள் ! அப்பொழுது பார்ப்பவனும் பார்க்கப்படும் பொருளும் ( Sub - ject , Object ) மறைகின்றன . செயல்மாத்திரம் ( Predicate ) அந்த ஒளி தன் அறிவாய் தன் உணர்வாய் , மிகுந்த விழிப்பாக மிகுந்த உணர்வாக இயங்குகிறது.

அப்பொழுது அது தன்னைத்தானே பார்த்துக்கொள்கிறது ! ( Observer is Observed by itself ) இந்தநிலைக்குப் பெயர்தான் ஞானமடைதல் என்பது ! ஆக இப்படி வெறுமனே பார்ப்பது , சாட்சியாக நின்று பார்ப்பது எல்லாம் ஆரம்பத்தில் அலுப்பையே கொடுக்கும்.

ஏனெனில் ஆரம்பத்தில் இருட்டையும் , குழப்பத்தையுமே சந்திப்பீர்கள் . மெல்ல மெல்ல இதுவே பழக்கமாகிவிடும் ! இதை நீங்கள் மட்டும் , நீங்களேதான் தனியே அணுகவேண்டும்.

வேறுவழியில்லை . உங்களுக்காக , உங்கள் அன்புக்குரிய குருகூட செய்யமுடியாது ! அவர் உங்களது சந்தேகங்களைத் தீர்க்கலாம்.

உங்களை ஊக்குவிக்கலாம் . தைரியம் ஊட்டலாம் . அவ்வளவுதான் . ஒருவரது பிறப்பு , இறப்பு , ஞானமடைதல் என்பது தனிப்பட்ட சமாச்சாரம் ! ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு மாஸ்டரின் உதவி இல்லாமல் , உங்களால் ஞானமடையமுடியாது.

அடுத்து இன்னொரு விஷயம் . நீங்கள் உங்களுக்குள்ளே ஆழமாகச் செல்லும்பொழுது உங்களால் அடக்கி வைக்கப்பட்டுள்ள ஆசைகள் , துன்பங்கள் எல்லாம் மேலே வர ஆரம்பிக்கும்.

இதுதான் உங்கள் குழப்பத்திற்கு மூலகாரணம் . ஒரு கட்டத்தில் பயந்துபோய் வெளியே ஓடிவர முயற்சி செய்வீர்கள் ! இப்பொழுது உங்களுக்கு ஒருகுரு மிகவும் அவசியம்.

என்ன தானங்கள் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

என்ன தானங்கள் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?


இந்த நரகத்தைக் கடந்த அவர் உங்களுக்கு தைரியம் ஊட்டுவார் . நீங்கள் இப்படிப் பல நரகங்களைக் கடந்துதான் சொர்க்கத்தை அடையவேண்டும் ! அப்பொழுது உங்கள் மனமே நரகமாக இருக்கிறது ! அது உங்களைப் பயமுறுத்தும் , பலஆசைகளைக்காட்டும் , வெளியே வா என்று உங்கள் கைகளைப்பிடித்து இழுக்கும்!

அது லேசில் உங்களை தியானம் செய்ய அனுமதிக்காது .ஏனென்றால் , தியானம் என்பது அதற்குச் சாவுமணி ! அப்படி இருக்கும்பொழுது தெரிந்தே அது எப்படி தியானத்தை அனுமதிக்கும் ?

அடுத்து நீங்கள் தியானத்தில் முன்னேற , இந்த உலக அவலட்சணங்களை - பதவி , படிப்பு , பணம் , பெண்இன்பம் , கௌரவம் நீங்கள் மெல்ல மெல்ல அகற்றவேண்டும்

நீங்கள் ஆகாயத்தில் பறக்க , பூமியை விட்டுவிடத்தான் வேண்டும் . ஆனால் , கவலை வேண்டாம் நீங்கள் தியானத்தில் முன்னேற முன்னேற இந்த உலக அவலட்சணங்கள் புரிய ஆரம்பிக்கும் ! அப்பொழுது அவைதானே விலகும் .

இந்த அவலட்சணங்களுக்கு இன்னொரு பெயர்தான் அகங்காரம் ( Ego ) . உங்களுடைய சகல துன்பங்களுக்கும் இதுதான்காரணம் . இது உங்கள் பிறப்போடு வந்தது அல்ல .

இடையில் நீங்களாகச் சம்பாதித்துக் கொண்டது . இந்த அவலட்சணங்களை அடைய நீங்கள் எவ்வளவு சக்தியைச் செலவழித்திருப்பீர்கள் ! நீங்கள் எல்லோரும் விதையாக ( Seed ) இருக்கிறீர்கள் .

நீங்கள் இப்படியே எவ்வளவு காலம் வேண்டுமாலும் இருக்கலாம் . 10 , 000 வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை மொகன்ஜதோராவில் ( Mohen Joo Daro ) கண்டுபிடித்திருக்கிறார்கள் . சீனாவில் பத்துலட்சம் வருடங்களுக்கு முன்பு உள்ள விதைகளை ஒரு குகையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒருவரிடம் தர்க்கம் செய்வதற்கு முன்பு இதை கவனிக்கவும்

ஒருவரிடம் தர்க்கம் செய்வதற்கு முன்பு இதை கவனிக்கவும்


இவை எல்லாமே இன்னும் முளைக்கும் தன்மையிலேயே இருக்கின்றன ! என்ன ஆச்சரியம் !இப்படி விதையாக நீங்கள் பலநாட்டில் பலபிறவியாகப் பிறந்து பிறந்து வந்திருக்கிறீர்கள்.

ஆனால் , உங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை ! அதே பணஆசை , கௌரவம் , பெண் இன்பம் .........அப்படித்தான் ! நீங்கள் தைரியமாக உங்கள் உள்ளே சென்று ஒரு செடியாக மாற முயற்சிக்கவில்லை .

ஆனால் இது துன்பமாகத்தான் இருக்கும் . ஏனெனில் , நீங்கள் உங்கள் ( விதை ) மேல்தோலைக் கிழித்துக்கொண்டு வரவேண்டும் .

அந்த மேல்தோல் என்பது உங்கள்அகங்காரம்தான் . அதாவது இந்த உலக அவலட்சணங்கள்தான் ! ஆக , முதலில் நீங்கள் துன்பத்தைத்தான் சந்திக்க வேண்டிவரும் . ஆனால் , இது நிரந்தரமல்ல . நான் சத்தியம் செய்கிறேன் ! இது முற்றிலும் உண்மை . இது என் அனுபவம் .

ஆகவே பயப்பட வேண்டாம் . நீங்கள் அந்தத் துன்பத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் . உங்கள் உயிரைத் துச்சமாக மதிக்க வேண்டும் . செய்வீர்களா ?!" என்று தன் பதிலை முடித்தார் ஓஷோ

இதை விட தெளிவாக ஞானத்தை வேறு எப்படி சொல்வது முயற்சி செய்து பார்ப்போம் முடியாதாது ஒன்றுமில்லை - வாழ்க வளமுடன்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US