2025 அஜா ஏகாதசி விரதம்- இழந்ததை மீண்டும் பெற செய்யவேண்டியவை
நம்முடைய இந்து மதத்தில் ஒவ்வொரு விரதமும் ஒவ்வொரு சிறப்புகள் கொண்டது. அதை போல் நாம் ஒவ்வொரு விரதம் இருந்து அதற்குரிய தெய்வங்களை வழிபாடு செய்யும்பொழுது நம் கட்டாயமாக வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை பெறலாம்.
அப்படியாக நாளை 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று வருகின்ற அஜா ஏகதசியின் மகிமைகளும் அதன் பலன்களை பற்றியும் பார்ப்போம்.
பொதுவாக சில விரதங்கள் இருந்து வழிபாடு செய்தால் மட்டுமே அதற்குரிய பலனை பெறலாம். ஆனால் அஜா ஏகாதசி விரதம் பொருத்தவரை இந்த விரதத்தின் மகிமையை நம் செவி சாய்த்து கேட்டாலே நாம் அந்த விரதம் இருந்ததற்கான பலன் கிடைத்து நம்முடைய பாவங்கள் விலகுகிறது.
அதைப்போல் இந்த விரதத்தை பற்றிய சிறப்புகளை நாம் பிறருக்கு எடுத்து சொல்லும் பொழுதும் நமக்கு புண்ணியம் வந்து சேருகின்றது. இந்து மதத்தில் யாகம் செய்தல் என்பது ஒரு சிறந்த பரிகாரமாகும்.
இருந்தாலும் கலியுகத்தில் சில யாகங்கள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் அஸ்வ மேத யாகம். அப்படியாக எவர் ஒருவர் அஜா ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு அஸ்வ மேத யாகம் செய்த புண்ணியமும் பலனும் கிடைக்கிறது.
மேலும் அஜா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மவைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி பார்ப்போம்.
ஒரு முறை யுதிஸ்டிரர் கிருஷ்ணரிடம் கேட்கிறார், கிருஷ்ணா ஆவணி மாதத்தில் தேய்பிறைகளில் வரக்கூடிய ஏகாதசியனை பற்றி எனக்கு விலக்கிக் கூறுங்கள் என்கிறார். அதற்கு கிருஷ்ணர் பதில் சொல்கிறார் சரி நான் சொல்வதை மிக கவனமாக கேள்.
ஒருவர் செய்த பாவங்கள் அழிந்து அவர்களுக்கு நற்பிறவியை கொடுக்கக் கூடிய விரதத்தின் பெயர் தான் அஜா ஏகாதசி ஆகும். இந்த விரதத்தை கடைபிடித்து பகவான் ரிஷகேசனை வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் அவர்கள் செய்த பாவங்களிலிருந்தும் கர்ம வினைகளிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள்.
பழங்காலத்தில் ஹரிச்சந்திரன் என்ற ஒரு புகழ்பெற்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவன். அவனுக்கு சந்திரமதி என்ற ஒரு துணைவியாரும், லோகி தாசன் என்கின்ற ஒரு மகனும் இருந்தார்கள்.
அவனுடைய நல்ல வழிநடத்துதலால் அவன் நாடும் மக்களும் செழித்து இருந்தனர். இருந்தாலும் விதி அவனை விடவில்லை. விதியின் விளையாட்டால் ஹரிச்சந்திரன் அவனுடைய நாட்டை இழக்க நேர்ந்தது. ஏன் அவனுடைய மனைவியையும் மகனையுமே விற்கும் நிலை உருவானது.
அவனுடைய விதியானது பக்திகளும் நேர்மையிலும் சிறந்து விளங்கிய ஹரிச்சந்திரனை இழிவான சிந்தனையும் செயல்களும் கொண்ட சில மக்கள் மத்தியில் அடிமையாக்க செய்தது. மேலும் மயானத்தைக் காவல் காக்கும் பணியில் அமரச்செய்தது.
ஒரு அரசனாக வாழ்ந்தவனுக்கு சிறிதும் பொருத்தம் இல்லாத தொழில் விதியால் அவன் கைகளுக்கு வந்தது. இருந்தாலும் அந்த காலகட்டத்திலும் ஹரிச்சந்திரன் மகாராஜன் தன்னுடைய சுயத்தன்மையையும் அவனுக்கே உரித்தான நேர்மை குணத்தையும் உண்மையையும் விடாமல் கடைப்பிடித்து வந்தார்.
வருடங்கள் கடந்தன ஒரு வேலை பொழுதில் ஹரிச்சந்திர மகாராஜன் மிகவும் வருத்தத்துடன், நான் என்ன தவறு செய்தேன்? நான் எங்கு செல்வேன்? இவ்வளவு இக்கட்டான நிலையில் இருந்து நான் எவ்வாறு மீண்டு வருவேன்என்று கவலையில் இருந்தார்.
அவரின் நிலையைக் கண்ட கௌதம முனிவர் ஹரிச்சந்திர மகாராஜரிடம் வந்தார். துயரத்தில் வந்து நின்ற ஹரிச்சந்திர மகாராஜா கௌதம முனிவரை கண்டவுடன் பிரம்மா இவர்களை மற்றவர்கள் நலனுக்காகவே படைத்திருக்கிறார் என்று எண்ணினார்.
ஹரிச்சந்திர மகாராஜனும் கௌதம முனிவரிடம் தனக்கு நேர்ந்தவை எல்லாம் கூறுகிறார். கௌதம முனிவர் அவருடைய பரிதாபமான நிலையைக் கண்டு அவருக்கு ஆவணி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி அனைத்து பாவங்களும் விலக்க கூடியது என்றும், நீ செய்த புண்ணியம் இன்னும் ஏழு நாட்களில் அஜா ஏகாதசி வர இருக்கிறது.
அன்று நீ மகாவிஷ்ணுவை வழிபாடு செய்து இரவு முழுவதும் கண்விழித்து பகவானுடைய திருநாமத்தை சொல்லி வழிபாடு செய் என்றார். இவ்வாறு நீ செய்வதால் முற்பிறவிகள் செய்த பாவங்கள் விலகி உன்னுடைய கஷ்ட காலங்களில் இருந்து விடுபடுவாய் என்கிறார்.
மேலும் கௌதம முனிவர் ஹரிச்சந்திர மகாராஜாவிடம் சொல்கிறார் நான் இங்கு உன்னை பார்க்க வந்தது, நீ என்னை பார்த்தது இவை அனைத்துமே நீ கடந்த காலத்தில் செய்த புண்ணியம் ஆகும். நீ இந்த விரதத்தை மேற் கொண்டாய் என்றால் உன்னுடைய வருங்காலம் மங்களகரமானதாக அமையும் என்று கூறி ஆசிர்வதித்து மறைகிறார்.
இப்படித்தான் கௌதம முனிவரின் பரிந்துரைப்படி அரிச்சந்திர மகாராஜன் அஜா ஏகாதசி விரதமிருந்து பரமாத்மனை வழிபாடு செய்து அவருடைய துன்பங்களிலிருந்து விடுபட்டார். அதோடு அவர் தான் இழந்த மனைவியையும் உயிரிழந்து கிடந்த தன் மகனையும் மீண்டும் பெற்றார்.
விண்ணிலிருந்து தேவர்கள் ஹரிச்சந்திர மகாராஜாவை வாழ்த்தினார்கள். மலர் தூவி ஆசீர்வதித்தார்கள். இந்த அஏகா தசி விரதத்தின் மகிமையால் அவர் மீண்டும் தன் ராஜ்யத்தை பெற்றார்.
ஆக இவ்வளவு சிறப்பு வாய்ந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையை கேட்பவர்களும் அந்த விரத தினத்தில் விரதமிருந்து பகவானை வழிபாடு செய்பவர்களுக்கும் வாழ்க்கையில் நன்மையும் நல்ல திருப்பங்களும் உண்டாகும்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







